பாராசிட்டாமல் மாத்திரை உட்கொள்ளும் அளவு குறைக்கப்பட்டதால், 600 உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வலிநிவாரணியாக பயன்படும் பாராசிட்டாமல் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொள்வதால், கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு, பலர் உயிரிழக்கின்றனர். இதை தடுக்க, பிரிட்டனில் பாராசிட்டாமல் மாத்திரை விற்பனை குறைக்கப்பட்டது. மருந்தகங்கள் மூலம், 32 பாராசிட்டாமல் மாத்திரைகளும், மருந்தகம் அல்லாத இடங்களில், 16 மாத்திரைகளும் தான் விற்பனை செய்யப்பட வேண்டும் என, கடந்த, 1998ல் பிரிட்டன் அரசு, உத்தரவு பிறப்பித்திருந்தது.
இது குறித்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கேத் ஹாட்டன் குறிப்பிடுகையில், "இந்த உத்தரவின் மூலம் பாராசிட்டாமல் உட்கொள்வது குறைக்கப்பட்டதால், 600 உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இந்த மாத்திரைகளை இன்னும் குறைப்பதன் மூலம், கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு மேலும் பலர் உயிரிழப்பதை கட்டுப்படுத்த முடியும்' என்றார்.