தொடக்கத்தில் சமூகசேவையோடு தொடர்புடைய படிப்பாக மட்டுமே சமூகப்பணி கருதப்பட்டது. ஆனால் வேகமாக இயங்கும் இன்றைய வாழ்வில் நாம் சந்திக்கும் பொதுவான பிரச்னைகளான போதைப்பொருள் பயன்பாடு, மனநல பிரச்னைகள், முதியோர் வாழ்வு, தொழிலாளர் நலன், கிராமப்புற மேம்பாடு போன்றவற்றுக்கு பெரும் பங்காற்றும் துறையாக விளங்க உதவுவது சமூகப்பணி தான்.
சமூகசேவையில் ஈடுபடுபவருக்கு ஏற்படும் மனதிருப்தியை வார்த்தைகளால் கூற முடியாது. மனிதர்களை உளவியல் ரீதியாக அணுகும் ஆர்வம், பொறுமை, நிதானம், விடாமுயற்சி போன்றவை ஒருவரிடம் இருந்தால், இப்படிப்பை மேற்கொள்ளலாம். பிறரின் வாழ்வில் நம்மால் பெரிய மாறுதலை ஆரோக்கியமாக உருவாக்க முடியும், என்ற நம்பிக்கை இத்துறைக்கு அவசியம் வேண்டும்.
சமூக பொருளாதார மற்றும் உணர்வு ரீதியான பிரச்னைகளை களைய முயற்சிப்பதே சமூகவியலாளர்களின் முக்கியப் பணி. இதற்கு கவுன்சலிங் எனப்படும் ஆலோசனை, மாநாடுகளை நடத்துவது, ஆதாரமான வளங்களை அதிகப்படுத்துவது, பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சமூகத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவது, உடல்நல திட்டங்களை செயல்படுத்துவது என இவர்களின் பணி, உயரிய நோக்கங்களைக் கொண்டதாகவே இருக்கும்.
சமூகப் பணிகளின்கீழ் கிளினிகல் சமூகப்பணி, பள்ளி சமூகப்பணி, உளவியல் சமூகப்பணி, மறுசீரமைப்பு மற்றும் குற்றங்களை களையும் பணி, மருத்துவ சமூகப்பணி, சமுதாயப்பணி என பல பிரிவுகள் உள்ளன. தொழிற்சாலை சமுதாயப் பணியும் இருக்கிறது.
அரசுத் துறைகளிலும், தன்னார்வ நிறுவனங்களிலும் சமூகப்பணி படித்தவருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. எம்.எஸ்.டபிள்யூ., அல்லது எம்.ஏ. படிப்பாக இதைப் படிக்கலாம். யுனெஸ்கோ, யுனிசெப், லேபர் பீரோ போன்றவற்றில் இதைப் படிப்பவருக்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக