களக்காடு புலிகள் காப்பகத்தில் உள்ள தலையணை மற்றும் நம்பிகோயில் ஆறுகளுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உட்பட பல்வேறு புலிகள் காப்பகங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதனையடுத்து கடந்த சில மாதங்களாக தலையணை பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் சில கட்டுப்பாடுகளை விதித்து சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கியது. அனுமதி வழங்கிய பின்னரும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முண்டந்துறையில் நடந்தது. இதில் கலெக்டர் செல்வராஜ் மற்றும் வனத்துறை அதிகாரிகள், எம்.எல்.ஏ., உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் களக்காடு வனப்பகுதியில் உள்ள தலையணை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்று முதல் களக்காடு புலிகள் காப்பகத்தில் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக புலிகள் காப்பக துணை இயக்குநர் சேகர் தெரிவித்தார். இந்த உத்தரவை தொடர்ந்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.