இலங்கை சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் எதிரொலியாக, திருச்சியில்இருந்து, வாரம் நான்கு முறை, கொழும்புக்கு இயக்கப்படும், மிகின்லங்கா விமான சேவை, வரும் ஜூன், 1ம் தேதி முதல் நிறுத்தப்படும் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் ஏற்றுமதி தொழில் செய்து வரும், தமிழக வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து, திருச்சிக்கு, வாரம் நான்கு முறை வந்து செல்லும், மிகின்லங்கா விமானம், பயணிகள் பற்றாக்குறையால், வரும், ஜூன், 1ம் தேதி முதல், தன் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்-லைன்ஸ் நிறுவனம், தற்போது, வாரத்துக்கு 14 முறை, கொழும்பிலிருந்து, திருச்சி வந்து செல்கிறது. அந்நிறுவனமும் தன் சேவையை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மிகின்லங்கா ஏர்-லைன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, "பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால், விமான சேவையை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது' என்று, கூறினர்.
திருச்சியிலிருந்து, கொழும்புக்கு மிகின்லங்கா மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்-லைன்ஸ் மட்டுமே விமான சேவை அளித்து வருகின்றன. ஸ்ரீலங்கன் ஏர்-லைன்ஸ் நிறுவனமும் சேவை நிறுத்த முடிவை எடுத்தால், திருச்சியிலிருந்து கொழும்பு நகருக்கு எந்த விமான சேவையும் கிடையாது.
இதனால் வெளிநாட்டுக்கு செல்லும் தமிழர்கள் பாதிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், வர்த்தகர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுவர்.
பாதிப்பு ஏற்படும் : இதுகுறித்து திருச்சி விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: திருச்சி விமான நிலையத்திலிருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கும், மேற்கு ஆசிய நாடுகளுக்கும் தேங்காய், வெங்காயம், கறிவேப்பிலை, முருங்கைக்காய், காய்கறிகள், மருந்து பொருட்கள், தோல், துணி வகைகள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவையெல்லாம் மிகின்லங்கா, ஸ்ரீலங்கன் ஏர்-லைன்ஸ் மூலம் தான் கொழும்பு நகருக்கு சென்று, அங்கிருந்து மேற்கண்ட நாடுகளுக்கு செல்கின்றன.
தற்போது விமான சேவை குறைவதால், வர்த்தகமும் வெகுவாக பாதிக்கப்படும். இதனால் தமிழக வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியு உள்ளது. ஒருபுறம் இலங்கை சுற்றுலா பயணிகள் மீது தாக்குதலால், பயணிகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது என்றால், மறுபுறம் வர்த்தகர்களிடம் திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகளும், இமிகிரேஷன் அதிகாரிகளும் காட்டும் கெடுபிடியும் தான், கொழும்பு செல்லும் பயணிகள் குறைவுக்கு காரணம். தற்போது இலங்கையிலிருந்து வர்த்தகர்கள் சிலர் மட்டுமே திருச்சி வருகின்றனர். அதேபோல் தமிழகத்திலிருந்தும் வியா
பாரிகள் மட்டுமே இலங்கை செல்கின்றனர். மற்றபடி சுற்றுலாவுக்கு என்று யாரும் வருவதில்லை. பயணிகளின் பற்றாக்குறையை, "கார்கோ' மூலம் விமான நிறுவனங்கள் ஈடுகட்டி வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ் ஆர்வலர்கள் என்ற பெயரில், சிலர் நடத்தும் வன்முறை சம்பவங்களால், தமிழகத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வர்த்தகர்கள், சுற்றுலாப் பயணிகளை கருத்தில் கொண்டு, விடுதிகள், ஓட்டல்கள், டாக்சி ஓட்டுபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழக பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.