உச்ச நீதிமன்றம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) ஆகியவற்றின் உத்தரவைத் தொடர்ந்து, 2013-14 கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, பொதுப் பிரிவு என அனைத்து பிரிவினருக்குமான கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளன. மேலும், பி.இ. முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கப்பட உள்ளன.
கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடுவது தள்ளிப்போனது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் கலந்தாய்வும் தள்ளிப்போனது. பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகளும் செப்டம்பர் 1-ம் தேதிதான் தொடங்கின.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 1-ம் தேதியே தொடங்க வேண்டும் என ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக 2013-14 கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வை முன்கூட்டியே நடத்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான விண்ணப்ப விநியோகத்தையும் ஏப்ரல் 3-வது வாரத்திலேயே தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி கூறியது:
ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவைத் தொடர்ந்து, 2013-14-ம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். எனவே, இதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் மூன்றாவது வாரம் முதல் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் விநியோகிக்கத் தொடங்கும் தேதி விரைவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். மேலும், பி.இ. முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கிவிடும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பல்கலைக்கழகம் எடுத்து வருகிறது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக