Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

பனிமூட்டத்தால் உறைந்தது ‘ஏழைகளின் ஊட்டி’ ஏற்காடு


குளிர்கால மலர்க்கண்காட்சியை அதிகரிக்க வேண்டும் எனவும், ஏற்காட்டில் இதுபோன்ற ஜில்..ஜில்.. சீசனை அனுபவித்ததில்லை என சென்னையை சேர்ந்த இளம்பெண் தெரிவித்தார்.

படகு சவாரிக்கு அனுமதி இல்லை
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று ஒருநாள் மட்டும் 2–ம் பருவமாக குளிர்கால மலர்க்கண்காட்சி மற்றும் கலைவிழா நடத்தப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க செய்யும் வகையில் நடத்தப்பட்ட மலர்க்கண்காட்சிக்கு சென்னையில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

நேற்றைய தினம் ஏற்காடு பனிமூட்டத்தால் திண்டாடியது என்றே கூறலாம். எதிரே 10 அடி தூரத்திற்கு மேல் உள்ள நபர்களை அடையாளம் கண்டு கொள்ளாதபடி பனிமூட்டமும், மேககூட்டமும் ரோட்டில் பரவி இருந்தது. லேக் எனப்படும் ஏரியில் சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்ய முடியாத வகையில் ஏரி முழுவதும் பனிமூட்டம் பரவி வியாபித்து இருந்தது. இதனால் படகு சவாரி செய்வதற்கு பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதுபோல ஏற்காடு பஸ் நிலையம், அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா கார்டன் பகோடா பாயின்ட், சேர்வராயன் கோவில், பொட்டனிக்கல் கார்டன் ஆகிய இடங்களிலும் பனிமூட்டமாக காணப்பட்டது.

வாகனங்கள் முகப்பு விளக்கு
ஏற்காடு அடிவாரத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 15–வது கொண்டை ஊசி வளைவில் இருந்து 20–வது கொண்டை ஊசி வளைவு வரை வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பனிமூட்டம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி சென்றதை காணமுடிந்தது.

குடும்பத்துடன் சுற்றுலா சென்றவர்கள் பனிமூட்டத்தால் வாவ்... என்ன ஒரு சீசன் எனக்கூறி உறைந்து போயினர். சிறுவர், சிறுமிகள் முன் எச்சரிக்கையாக சுவெட்டர் அணிந்து வராததால் அவர்கள் வாய் குளிரில் டக்..டக்கென ‘தந்தி‘ அடிக்க தொடங்கின.

மின்சாரம் இல்லாத வீடுகளில் ஒளியேற்றும் கல்லூரி மாணவர்கள்


"ஊதாரித்தனமாக செலவு செய்பவர்கள்" என, சிலரால் வசைபாடப்படும் கல்லூரி மாணவர்கள், தங்களின், "பாக்கெட் மணி"யை சேமித்து, 4,000 வீடுகளில் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மும்பையில் உள்ள, எச்.ஆர்., கல்லூரி மாணவர்கள், ஐந்து பேர், இரண்டாண்டுகளுக்கு முன், சுற்றுலா சென்ற போது, மும்பை புறநகர் பகுதியில் ஒரு கிராமத்தை கண்டனர். தலைநகர் மும்பையில் இருந்து, 150 கி.மீ.,யில் இருந்த அந்த கிராமத்தில், மின் வசதி அறவே கிடையாது. மொபைல் போனை, சார்ஜ் செய்வதற்கு கூட, 10 கி.மீ., சென்று, மின்சாரம் உள்ள இடத்தில், சார்ஜ் செய்ய வேண்டி இருந்தது.

அந்த கிராமத்தில் தங்கி, அந்த மக்கள் படும்பாட்டை அறிந்த மாணவர்கள், மிகுந்த மனவேதனை அடைந்தனர். பகலில் மட்டுமே பள்ளி குழந்தைகளால் படிக்க முடியும்; இரவில் படிக்கவே முடியாது. இதை கண்ட மாணவர்கள், மேலும் வருந்தினர்.
மாணவர்கள் தங்களின், "பாக்கெட் மணி"யை சேர்த்து, அந்த கிராமத்திற்கு, சூரிய ஒளி மின்சாரம் வழங்க முடிவு செய்தனர். இந்த உன்னத முயற்சிக்கு, பிற மாணவர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக, கொஞ்சம் வித்தியாசமான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இரவு நேரத்தில், கல்லூரி ஹாஸ்டலில், திடீரென மின்சாரத்தை துண்டித்தனர். மின்சாரம் இல்லாததால், மாணவர்கள் தவித்து, சத்தம் போட்டு ரகளை செய்யவும், மீண்டும் மின்சாரத்தை வழங்கினர். ரகளை செய்தவர்கள் மத்தியில் பேசிய மாணவர் ஒருவர், "10 நிமிட நேரம், மின்சாரம் இல்லாததற்கே இப்படி சத்தம் போடுகிறீர்களே, ஆண்டாண்டு காலமாக மின்சாரம் இல்லாமல் எத்தனையோ கிராமங்கள், அந்த கிராமங்களில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவதிப்படுவதை பற்றி ஏன் கவலைப்படுவதில்லை..." என, கேட்டார்.

மனம் வருந்திய மாணவர்கள், ஒவ்வொருவரும், தலா, 10 ரூபாய் கொடுத்து, சேர்ந்த பணத்தை கொண்டு, மற்றொரு கிராமத்திற்கு, சோலார் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஒரு சோலார் விளக்கிற்கு, 4,000 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 106 கிராமங்களில், 4,000 சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மட்டுமின்றி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களிலும், மும்பை, எச்.ஆர்., கல்லூரி மாணவர்கள், சோலார் விளக்குகளை பொருத்தி, புரட்சி ஏற்படுத்தி வருகின்றனர்.

"புராஜெக்ட் சிராக்" என, பெயரிடப்பட்டுள்ள இந்த மாணவர் அமைப்பில், மும்பை நகர கல்லூரிகளின் பெரும்பாலான மாணவர்கள், உறுப்பினர்களாக மாறி வருகின்றனர். நல்ல நோக்கத்திற்காக பாடுபடும் மாணவர்களுக்கு, பல நிறுவனங்களும் பணம் கொடுத்து உதவுகின்றன.

கிடைக்கும் பணத்தை கொண்டு, மின்சார வசதி இல்லாத கிராமங்கள், வீடுகளுக்கு சோலார் மின் விளக்கு வசதிகள் செய்து கொடுக்கின்றனர்.

இளைய தலைமுறையினரை மழுங்கடிக்கும் இணையதளங்கள்


"இணையதள தொழில்நுட்ப வசதி காரணமாக, இன்றைய இளைய தலைமுறையினரின் மூளை, மழுங்கடிக்கப்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும், அறிந்து கொள்வதற்கு, அவர்களின் கைகள், "கூகுளை" தான், நாடுகின்றன. இதனால், இன்றைய தலைமுறையினர், சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாக மாறி வருகின்றனர்," என, பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், கூறியுள்ளார்.

பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், டிரேவர் பெய்லீஸ். பேட்டரி, மின்சாரம் இல்லாமல், கைகளால் சுற்றி ரேடியோவை இயக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர். "டெய்லி மெயில்" என்ற ஆங்கில பத்திரிகைக்கு, அவர் அளித்துள்ள பேட்டி:

இன்றைய இளைய தலைமுறையினரின் போக்கு, எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும், இணையதளம் மூலமாகவே, அறிய முயற்சிக்கின்றனர். "இது எப்படி சாத்தியம்; அது என்ன; இதை எப்படி செய்யலாம்" என்பது போன்ற, பல்வேறு கேள்விகளுக்கு, இன்றைய இளைஞர்கள், உடனடியாக, "கூகுள்" இணையதளத்தை தான், நாடுகின்றனர்.

ஒரு விஷயத்தை எப்படி செய்யலாம் என்பது பற்றி, அவர்கள் சிந்திப்பதும் இல்லை; கற்பனை செய்து பார்ப்பதும் இல்லை. இதனால், அவர்களின் மூளை, மழுங்கடிக்கப்பட்டு வறட்சியாகி வருகிறது. அனுபவ ரீதியாகவோ, செயல்முறை சார்ந்தோ, எந்த விஷயத்தையும் அவர்கள் செய்வது இல்லை.

இணையதளங்களால், தாங்களாக, சொந்தமாக எதையும் செய்ய முடியாதவர்களாக மாறி வருகின்றனர். இது, அபாயகரமான போக்கு. இணையதளங்கள், மொபைல் போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றின் உதவி இல்லாமல், அவர்களால் எதையும் செய்ய முடிவது இல்லை. முழுக்க முழுக்க, அவர்கள், இவற்றை சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவற்றுக்கு அடிமையாகி வருகின்றனர்.

எனவே, பள்ளிகளில், குழந்தைகளுக்கான, கற்பித்தல் முறையில் மாற்றம் வேண்டும். குறிப்பாக, செயல்வழி கற்றல் நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும். சில மாதிரி பொருட்களை கொடுத்து, "ஒரு பாலத்தை, எப்படி கட்டுவது; இந்த கட்டடத்தை எப்படி வடிவமைப்பது" என, குழந்தைகளை செய்யும்படி கூற வேண்டும்.

எதிர்கால தலைமுறை, ஆரோக்கியமான, ஆற்றல் உள்ள தலைமுறையாக வளர்வதற்கு, இது தான் சிறந்த தீர்வாக அமையும்.இவ்வாறு, டிரேவர் பெய்லீஸ் கூறினார்.