Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 11 பிப்ரவரி, 2013

சூரிய ஒளி மின்சக்தியில் 1 லட்சம் தெரு விளக்குகள்


 "தமிழகத்தில், சூரிய ஒளி மின்சக்தி மூலம், 1 லட்சம் தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,'' என, எரிசக்தித் துறை செயலர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். தூத்துக்குடியில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் நடந்த, சூரிய மின்சக்தி விழிப்புணர்வு கருத்தரங்கில் அவர் பேசியதாவது: அரசின் பசுமை வீடுகள் திட்டத்தில், 3 லட்சம் வீடுகளில், சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற, திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், 60 ஆயிரம் வீடுகள், 1 லட்சம் தெரு விளக்குகளுக்கு, சூரியஒளி மின்சக்தி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தொழிற்சாலைகள், தங்களது மொத்த மின் தேவையில், 6 சதவீ தத்தை, சூரிய ஒளி மின்சக்தி மூலமே பெற வேண்டும். இதற்கு தேவையான உபகரணங்களை ஒருமுறை அமைத்தால், அது, 25 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இதனால், தொழிற்சாலைகள், சூரிய ஒளி மின்சக்தி மூலம், கண்டிப்பாக மின் உற்பத்தி செய்ய வேண்டும். இவ்வகையில், மின் உற்பத்தி செய்ய, மானியம் கேட்டு, 2,000 தொழிற்சாலைகளிடமிருந்து அரசிற்கு மனுக்கள் வந்துள்ளன. அவற்றில், 1,000 மனுக்கள் திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களைச் சேர்ந்தவை. பிற மாவட்டங்களில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலேயே, இதற்கான மனுக்கள் வந்துள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.

டாக்டர் மன்மோகன் சிங் ஸ்காலர்ஷிப் விருது


பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 2008ம் ஆண்டு முதல் டாக்டர் மன்மோகன் சிங் ஸ்காலர்ஷிப் என்ற விருதை வழங்கி வருகிறது. இவ்விருது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பெயரில் வழங்கப்படுகிறது. இவர், இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விருது பொருளாதாரத்தில் பின்தங்கிய, அதே நேரத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் இந்திய மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்வதற்காக வழங்கப்படுகிறது. விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் அங்கீகரிக்கபட்ட பல்கலைக்கழகத்தில், முதுகலை பட்டம் பெற்று ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள விரும்புவோர், இந்த ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொருளாதாரம், சமூக அறிவியல், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், மரைன் இன்ஜினியரிங் மற்றும் எனர்ஜி ஸ்டடிஸ் ஆகிய துறைகளில் இவ்விருது வழங்கப்படுகிறது.

தகுதிகள்:
* பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும் போது, 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* தலைமைப் பண்புக்கான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
* ஆங்கில அறிவில் எழுதுவதிலும், பேசுவதிலும் புலமை பெற்றிருக்க வேண்டும்.
* கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., படிப்பதற்கு விருப்பமானவராக இருக்க வேண்டும்.
* மேலும் பல்கலைக்கழகம் எதிர்பார்க்கும் சில தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

விருதின் மதிப்பு:
படிப்புக் கட்டணம், சர்வதேச விமானக் கட்டணம், தங்குவதற்கான மாதக் கட்டணம் மற்றும் பிரிட்டன் விசா ஆகியவை இவ்விருதுக்கு தேர்வாகும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு: http://www.cambridge-india.org/studying/scholarships.html

வெளிநாட்டில் படிப்பு - சாதக பாதகங்கள்


வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வியை மேற்கொள்வதென்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. அதுவும் தான் விரும்பும் ஒரு புகழ்பெற்ற பல்கலையில், விரும்பும் படிப்பில் இடம் கிடைத்துவிட்டால், ஒரு மாணவரின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை.

ஆனால், அவற்றிலுள்ள சாதக-பாதகங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. வெளிநாட்டிற்கு உயர்கல்வி மேற்கொள்ள செல்லும் முன்பாக, கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள் உள்ளன. இது மாணவர் தொடர்பானது மட்டுமல்ல, பெற்றோர் தொடர்பானதும்தான்.

நிதி தொடர்பானவை
வெளிநாட்டுப் படிப்பில், அதுவும் குறிப்பாக, முன்னேறிய மேற்கத்திய நாடுகளில் கல்வி கற்க செல்கையில், அதிகம் செலவாகும். ஆசைக்காக கால்வைத்து விட்டு, பின்னர் சமாளிக்க முடியாமல் திண்டாடுவது கூடாது. தகுதி அடிப்படையில், வெளிநாட்டு மாணவர்களுக்கான பல உதவித்தொகை திட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், சிலரால் மட்டுமே அதைப்பெற முடியும்.

மேலும், நாம் தேர்ந்தெடுக்கும் நாட்டிற்கும், நம் நாட்டிற்குமுள்ள பண மதிப்பு வேறுபாடுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், சில நாடுகளில் வாழ்க்கைச் செலவுகள் கட்டுபடியாகக்கூடிய வகையில் இருக்கும். ஆனால், சில நாடுகளிலோ, மிக அதிகமாக இருக்கும். அனைவருக்குமே, பல்கலை விடுதிகளில் இடம் கிடைத்துவிடாது. அதற்கேற்ப, மாணவர்களும், பெற்றோர்களும் தெளிவாக திட்டமிட வேண்டும்.

நீங்கள் படிக்கச் செல்லும் நாட்டிற்கு சென்று வருவதற்கான விமானப் பயண கட்டணம், பல்கலை அல்லது கல்லூரி கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவுச் செலவு மற்றும் பராமரிப்பு செலவு ஆகிய அனைத்தைப் பற்றியும் தெளிவான மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு
கடந்த ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவில், இந்திய மாணவர்கள் இனவெறி தாக்குதலுக்கு தொடர்ச்சியாக ஆளானது, வெளிநாட்டுக் கல்வியின் பாதுகாப்பு குறித்த பல்வேறான கேள்விகளை இந்தியாவில் எழுப்பியது. மேலும், இங்கிலாந்தில், சில இந்திய மாணவர்களின் மரணச் செய்திகளும் அடிபட்டன. இதனால், வெளிநாட்டிற்கு உயர்கல்வி கற்க, தங்களின் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரின் பீதி அதிகரிக்கத் தொடங்கியது.

பல பெற்றோர்கள், தங்களின் உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் இருக்கும் நாடுகளுக்கே, தங்களின் பிள்ளைகளை அனுப்ப விரும்புகின்றனர். இதுவும் ஒரு பாதுகாப்புக் காரணமே. பாதுகாப்பு விஷயத்தில், மாணவர்களைவிட, பெற்றோர்களுக்கே அதிக கவலை. குறிப்பிட்ட நாட்டில், தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றி தங்களால் இயன்றவு விசாரித்து, அதனடிப்படையில் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அதேசமயத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக, தங்கள் பிள்ளைகளின் வெளிநாட்டுக் கல்வியை தடைசெய்ய, பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புவதில்லை.

பழகிக் கொள்ளுதல்
ஒரு புதிய நாட்டின், பழக்கமில்லா கலாச்சார சூழலுக்கு, ஒரு மாணவர் பழகிக்கொள்வது இந்த வகையில் சேரும். அந்நாட்டின் காலநிலை, வாழ்க்கைச் சூழல், உணவுப் பழக்கவழக்கம் மற்றும் உடனிருப்பவர்களுடன் சரியான உறவாடலை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்றவை முக்கியமானவை.

ஏனெனில், சிலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம். சிலருக்கு உணவு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். சிலருக்கு, நீண்டதூரம் பெற்றோரைவிட்டு, உறவினர்களைவிட்டு பிரிந்து வந்தது தாங்க முடியாததாய் இருக்கலாம். குடும்பத்தாரின் அரவணைப்பிலேயே இருந்தவர்கள், தனித்து வாழ கஷ்டப்படலாம்.

வெளிநாட்டிற்கு சென்று படித்தல் என்ற நிலை வரும்போதே, இந்த அம்சங்கள் அனைத்தையும், பெற்றோரும், மாணவர்களும் யோசிக்க வேண்டும். இவற்றையெல்லாம் சமாளித்துவிடலாம் என்ற மனோதைரியத்தை உருவாக்கிய பின்னர், உங்களின் ஏற்பாடுகளை தொடங்கலாம்.

உங்களின் அனுபவம் இனிதாகும்! அறிவு வளமாகும்!