பாளையங்கோட்டை வி.எம்.சந்திரம் ஹசீன் நகரில் தனியாருக்கு சொந்தமான அபார்ட்மென்ட் உள்ளது. இதன் கட்டுமான பணி முடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதில் உள்ள வீடுகளுக்கு உரிமை கோருதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பாக பாளை மகாராஜாநகர் தொழில் அதிபர் சாகுல்அமீது என்பவருக்கும், சென்னை ஆலந்தூரையை சேர்ந்த பால சுப்பிரமணியன் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்தது.
இந்த நிலையில் நெல்லை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்தது. போனில் மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் பேசினார். அவர் ஹசீன் நகரில் உள்ள அபார்ட் மெட்டில் சிலர் வெடிகுண்டு பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தலைமையில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அபார்ட்மென்ட் அருகே ஓடைபாலத்தில் நாட்டு வெடிகுண்டு, வெடி பொருட்கள், வாள் போன்றவை இருப்பது கண்டுப் பிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து அபார்ட்மென்ட் வீடுகளில் வெடிகுண்டு பதுக்கப்பட்டு உள்ளதா என்று சோதனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக மகாராஜ நகர் சாகுல்அமீது, மேலப்பாளையத்தை சேர்ந்த சாகுல் அமீது காவலாளி மைதீன், உதுமான் ஆகிய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார். போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்த கிருஷ்ணனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. போலீசுக்கு தகவல் கொடுத்தவரே வெடிகுண்டுகளை பதுக்கி வைத்து விட்டு நாடகம் ஆடியது கண்டு பிடிக்கப்பட்டது. குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணன் கொடுக்கல் வாங்கல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அந்த அபார்ட்மென்ட்டில் கிருஷ்ணன் 2 வீடுகள் வாங்கியுள்ளார். அதை கூடுதல் விலைக்கு விற்க கிருஷ்ணன் திட்டமிட்டார். இதற்கு மகாராஜநகர் சாகுல் அமீது தடையாக இருந்துள்ளார். இதனால் சாகுல் அமீதை போலீசில் சிக்க வைக்கும் நோக்கில் ஓடை பாலம் அருகே வெடிகுண்டு மற்றும் பொருட்களை கிருஷ்ணனே வைத்துள்ளார். பின்பு அவரே போலீசுக்கு போனில் தகவல் கொடுத்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.