Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 12 டிசம்பர், 2012

தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை


தமிழ்நாடு ஆசிரியர் நல நிதி தேசிய நிறுவனத்திலிருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பின்ளைகளுக்கு 2012-13 கல்வியாண்டிற்கு படிப்புதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களும், விண்ணப்பிப்பதற்குரிய தகுதி ஆகிய விவரங்கள் www.dse.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

கல்வித்தகுதி: 
• விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் மகன்/மகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொழிற்கல்வி பட்டப் படிப்பு (4 years), மூன்று ஆண்டு பட்டையப் டிபப்பு படிப்பவர்களாக இருக்க வேண்டும்.

• இதற்கு முந்தைய அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். (மதிப்பெண் சான்றிதழ் நகல் இணைத்தல் வேண்டும்)

• மனுவில் உள்ள அனைத்து காலங்களும் சரியாக தமிழில் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். சரியாக பூர்த்தி செய்யப்படாத மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

• பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2,80,000க்குள் இருக்க வேண்டும். வருமானச் சான்று இத்துடன் இணைக்க வேண்டும்.

• விண்ணப்பங்கள் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31 ஆகும்.

• ஆசிரியரல்லாத பணியாளர்கள் விண்ணப்பிக்கக் கூடாது.

• ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் பிள்ளைகள் மற்றும் இறந்து போன ஆசிரியர்களின் பிள்ளைகள் ஆகியோர்களும் இப்படிப்புதவித் தொகைக்கு தகுதியானவர்கள்.

சன் குழுமம் தலைவர் கலாநிதி மீது மோசடி வழக்கு


பிரபல திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 3-ம் தேதி ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோக உரிமையைத் தருவதாக சன் குழும நிறுவனத்தினர் ரூ. 4 கோடி பெற்றுக் கொண்டனர். ஆனால், அந்தப் படத்தின் உரிமத்தை எனக்குத் தரவில்லை. இதனால் நான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டு வந்தேன். ஆனால் அவர்கள் பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்தனர்.

இதே போல நடிகர் விஜய் நடித்த காவலன் திரைப்படத்தின் சாட்டிலைட் சேனல் உரிமம் பெற்றதில் சன் குழும நிறுவனம் எனக்கு ரூ. 2.75 கோடி தர வேண்டியிருந்தது. எனக்கு தர வேண்டிய பாக்கித் தொகையை கேட்டு கடந்த மாதம் 30-ம் தேதி சன் குழும நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது அங்கிருந்தவர்கள் என்னைத் திட்டி, மிரட்டினர். எனக்கு பணத்தை தராமல் திட்டி மிரட்டிய அந்த நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், தினகரன் பத்திரிக்கை பதிப்பாளர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், சன் குழும நிறுவனத்தின் ஊழியர்கள் கண்ணன், செம்பியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவின் நம்பிக்கை மோசடி பிரிவு போலீஸார் விசாரணை செய்தனர். இதையடுத்து அப் பிரிவு போலீஸார், புகார் கூறப்பட்ட 4 பேர் மீதும் தகாத வார்த்தைகளால் திட்டியது, மிரட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது என 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

இதேபோல சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த திரையரங்கு உரிமையாளர் நரேஷ்குமார், சன் குழும நிறுவனத்தினர், தன்னிடம் ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாகக் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்கள் 4 பேர் மீதும் நம்பிக்கை மோசடி, தகாத வார்த்தைகளால் திட்டியது, மிரட்டியது, கொலை மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் சக்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் தங்களை கைது செய்யாத வகையில் முன் ஜாமீன் வழங்கக் கோரி கலாநிதி மாறன், ஆர்.எம்.ஆர்.ரமேஷ், கண்ணன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள், நீதிபதி ஏ.ஆறுமுகசாமி முன்னிலையில் புதன்கிழமை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை இம் மாதம் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அதுவரை மனுதாரர்களை போலீஸார் கைது செய்யவோ, தொந்தரவு செய்யவோ கூடாது என்றும், அவர்களுக்கு சம்மன் அனுப்பக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

குஜராத்தில் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி வாய்ப்பு இல்லை ?


குஜராத்தில், பா.ஜ.,வின் ஓட்டு வங்கியாக திகழ்ந்து வந்த, படேல் சமூகத்தினரிடையே, தற்போது பிரிவினை ஏற்பட்டுள்ளது. கேசுபாய் துவங்கியுள்ள, புதிய கட்சிக்கு, இந்த சமூகத்தை சேர்ந்த, ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். குஜராத்தில், நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. வரும், 13 மற்றும், 17ம் தேதிகளில், இங்கு இரண்டு கட்டங்களாக, சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. உச்சக்கட்ட பிரசாரம் நடந்து வரும் நிலையில், தேர்தல் களத்தில், பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. குஜராத்தில், படேல் சமூகத்தை சேர்ந்தவர்கள், ராஜ்கோட் உள்ளிட்ட, ஏழு மாவட்டங்களில், அதிகம் வசிக்கின்றனர்.

மொத்தம் உள்ள, 182 சட்டசபை தொகுதிகளில், 54 தொகுதிகளின், தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் அளவுக்கு, பலம் வாய்ந்த சமூகமாக, படேல் சமூகத்தினர் உள்ளனர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த சமூகத்தினர், பா.ஜ.,வுக்கு ஆதரவாகவே உள்ளனர்.

கேசுபாய் படேல் :
பா.ஜ.,வின் ஓட்டு வங்கி என்று கூட, இவர்களை கூறலாம். படேல் சமூகத்தில், செல்வாக்கு மிக்க தலைவரும், குஜராத் முன்னாள் முதல்வருமான, கேசுபாய் படேல், பா.ஜ.,விலிருந்து பிரிந்து, தனிக் கட்சி துவங்கி உள்ளார். நரேந்திர மோடியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சில ஆண்டுகளாக, கட்சி பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார், கேசுபாய் படேல். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன், திடீரென, "குஜராத் பரிவர்த்தன் கட்சி' என்ற, கட்சியை துவக்கி, நரேந்திர மோடிக்கு, பெரும் சவாலாக விளங்கி வருகிறார்.

படேல் சமூகத்தில், கடவா மற்றும் லெயுவா என, இரு பிரிவு உண்டு. கேசுபாய் படேல், லெயுவா பிரிவைச் சேர்ந்தவர். படேல் சமூகத்தில், லெயுவா பிரிவினர் தான், எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர். தற்போது, கேசுபாய் படேல் துவங்கியுள்ள, புது கட்சிக்கு, லெயுவா பிரிவைச் சேர்ந்த, பெரும்பாலானோர், ஆதரவு தெரிவித்துள்ளனர். லெயுவா பிரிவில், செல்வாக்கு மிக்க தலைவரான, நரேஷ் படேல் என்பவர், மாநிலத்தின் பல இடங்களில், தொடர்ச்சியாக, தங்கள் பிரிவைச் சேர்ந்தவர்களின் கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த கூட்டங்களில் எல்லாம், கேசுபாய் படேல் துவக்கியுள்ள கட்சிக்கு, இந்த தேர்தலில், ஆதரவு அளிக்க கோரி வருகிறார். இந்த கூட்டங்களில், கேசுபாய் படேலும், தவறாமல் பங்கேற்கிறார். நரேஷ் படேல்,"நம் சமூகத்தை சேர்ந்தவர்கள், 10 ஆண்டுகளாக, வளர்ச்சி பணிகளில் புறக்கணிக்கப்படுகிறோம்.

இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமானால், கேசுபாய் படேல் பின், அணி திரள வேண்டும்'என, தங்கள் பிரிவினருக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.எனவே ,பாரதிய ஜனதாவிற்கு  வெற்றி வாய்ப்பு இல்லை  என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள் .