பிரபல திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 3-ம் தேதி ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோக உரிமையைத் தருவதாக சன் குழும நிறுவனத்தினர் ரூ. 4 கோடி பெற்றுக் கொண்டனர். ஆனால், அந்தப் படத்தின் உரிமத்தை எனக்குத் தரவில்லை. இதனால் நான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டு வந்தேன். ஆனால் அவர்கள் பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்தனர்.
இதே போல நடிகர் விஜய் நடித்த காவலன் திரைப்படத்தின் சாட்டிலைட் சேனல் உரிமம் பெற்றதில் சன் குழும நிறுவனம் எனக்கு ரூ. 2.75 கோடி தர வேண்டியிருந்தது. எனக்கு தர வேண்டிய பாக்கித் தொகையை கேட்டு கடந்த மாதம் 30-ம் தேதி சன் குழும நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது அங்கிருந்தவர்கள் என்னைத் திட்டி, மிரட்டினர். எனக்கு பணத்தை தராமல் திட்டி மிரட்டிய அந்த நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், தினகரன் பத்திரிக்கை பதிப்பாளர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், சன் குழும நிறுவனத்தின் ஊழியர்கள் கண்ணன், செம்பியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவின் நம்பிக்கை மோசடி பிரிவு போலீஸார் விசாரணை செய்தனர். இதையடுத்து அப் பிரிவு போலீஸார், புகார் கூறப்பட்ட 4 பேர் மீதும் தகாத வார்த்தைகளால் திட்டியது, மிரட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது என 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
இதேபோல சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த திரையரங்கு உரிமையாளர் நரேஷ்குமார், சன் குழும நிறுவனத்தினர், தன்னிடம் ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாகக் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்கள் 4 பேர் மீதும் நம்பிக்கை மோசடி, தகாத வார்த்தைகளால் திட்டியது, மிரட்டியது, கொலை மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் சக்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் தங்களை கைது செய்யாத வகையில் முன் ஜாமீன் வழங்கக் கோரி கலாநிதி மாறன், ஆர்.எம்.ஆர்.ரமேஷ், கண்ணன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள், நீதிபதி ஏ.ஆறுமுகசாமி முன்னிலையில் புதன்கிழமை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை இம் மாதம் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அதுவரை மனுதாரர்களை போலீஸார் கைது செய்யவோ, தொந்தரவு செய்யவோ கூடாது என்றும், அவர்களுக்கு சம்மன் அனுப்பக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக