Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 24 டிசம்பர், 2012

பள்ளி வகுப்பறையிலேயே மாணவர்களுக்கு பல் சிகிச்சை


வகுப்பறைகளுக்கே சென்று அரசு பள்ளி மாணவர்களுக்கு பல் நோய் சிகிச்சை அளிக்க, சுகாதாரத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதே இடத்தில் சிகிச்சை அளிக்கின்றனர். முடியாத பட்சத்தில், அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 3 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல் தொடர்பான நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆரம்ப சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள் தலைமையில் டாக்டர், நர்சுகள் அடங்கிய குழுவினர், ஒவ்வொரு அரசு பள்ளியின் வகுப்பறைகளுக்கு செல்ல வேண்டும்.

குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி,பரிசோதிக்க வேண்டும். பல் ஓட்டை, சொத்தை பல் உட்பட பிரச்னைகளை கண்டறிந்து, அதே இடத்தில் சிகிச்சை அளிக்கின்றனர். முடியாத பட்சத்தில், அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைப்பர்.

சிவகங்கை சுகாதார பணிகள் துணை இயக்குனர் அகல்யா கூறுகையில், "அரசின் இந்த புதிய சிகிச்சை முறையால் மாணவர்களின் பல் நோய் சரி செய்யப்படும். பற்களை சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளின் பற்களை சுத்தமாக வைப்பதற்கு அறிவுரை கூற வேண்டும்' என்றார்.

மதவாத சக்தியான ஜெயலலிதாவிடமிருந்து எந்த நன்மையும் சமுதாயத்திற்கு விளையப்போவதில்லை -- பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்


நேற்று (23/12/2012)  லால்பேட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன் நிருபர்களிடம் கூறும்போது ,

இன்று இளம்பெண்கள் கற்பழிகப்படுவது அதிகரித்துள்ளது வேதனையளிக்கிறது,கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அதை நாங்கள் முதலில் வரவேற்போம். கற்பழிப்புக்குரிய இஸ்லாமிய தண்டனையை நாங்கள் சொன்னபோது அதை காட்டுமிராண்டித் தனம் என்று சொன்னார்கள் பலர்.ஆனால் இன்று கற்பழிப்பவனுக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்துவதை பார்க்கும் போது நாங்கள் சொன்ன கருத்துக்கு வலிமை கிடைத்திருப்பதாகவே கருதுகிறோம்.

டெல்லியில் இடிக்கப்பட்ட பள்ளிவாசல் மீண்டும் கட்டப்படும் என்று அறிவித்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் போன்று ,இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதை,இடிப்பதற்கு காரணமான அத்வானி,முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள்  கட்டித்தர முன் வர வேண்டும் .

மேலும்,உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் கோவை சிறைவாசி அபுதாகிரை நீதிமன்ற உத்தரவு வந்தபின்பும் பரோலில் விட மறுக்கும் தமிழக அரசை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது .

மதவாத சக்தியான ஜெயலலிதாவிடம் இருந்து எந்த நன்மையும் சமுதாயத்திற்கு விளையப்போவதில்லை என்பதை அடிக்கடி கூறி வருகிறோம்.ஆனால் சிலர் அதை மறைக்க முயல்வதை வேடிக்கையாகவே கருதுகிறேன்.

காவேரி தண்ணீர் பிரச்சனைக்கு இரு மாநில முதல்வர்கள் மக்களின் நலன் கருதி பேசினால் தான் நல்ல முடிவு கிடைக்கும் என்றும் கூறினார்.


தகுதி தேர்வை கைவிட வலியுறுத்தி 27ம் தேதி ஆசிரியர்கள் பேரணி


தமிழ்நாடு பதிவுமூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. இதில்மாநிலத் தலைவர் ரத்தினக்குமார் சிறப்புரை ஆற்றினார்.

கூட்ட முடிவில் அவர் கூறியதாவது:தமிழகத்தில், கடந்த 2010ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் 26 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அதில், 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். மீதமுள்ள 8 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்குள், தமிழக அரசு திடீரென்று தகுதித்தேர்வு அடிப்படையில்தான் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தது.

அரசாணை 169, 170, 175 ஆகியவற்றின்படி, தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன் சான்றிதழ் சரி பார்ப்பு நடத்தி முடிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு இத்தேர்வு பொருந்தாது என தெளிவாக கூறப்பட்டு உள்ளது. ஆனால், அரசு இந்த அரசாணைகளை அமல்படுத்தாமல் உள்ளது.டிஆர்பி, தகுதித்தேர்வு மூலம் நியமிக்கப்படும் இளம் ஆசிரியர்களால் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியாது.

2001 முதல் 2007ம் ஆண்டு வரை டிஆர்பி நடத்திய போட்டித் தேர்வு மூலம் ஏராளமான இளம் ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டனர். அதனால், தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை அரசு உடனடியாக கைவிட வேண்டும். மீண்டும் பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் நியமனங்களில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. இது கண்டனத்துக் குரியது. கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 27ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் பேரணி நடத்தப்படுகிறது. 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.