திருநெல்வேலி மாவட்டம் காரையார் பாபநாசம் அணையில் கடந்த சுமார் 6 மாதங்களுக்கு முன் பல்வேறு காரணங்களால் படகுபோக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் படகு தொழிலை நம்பியிருந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து படகு உரிமையாளர்கள் அரசாங்கம் மற்றும் வனத்துறையினரிடம் பாபநாசம் அணையில் படகு இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தொடர்ந்துகோரிக்கை வைத்தனர். இந்நிலையில்நேற்று இது தொடர்பான இரண்டாவது உள்ளூர் ஆலோசனைக்குழு கூட்டம் முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் நடந்தது.
புலிகள் காப்பகம் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மல்கானி தலைமை வகித்தார். கூட்டத்தில் அம்பை எம்.எல்.ஏ., சுப்பையா, மாவட்ட டிஆர்ஓ உமாமகேஸ்வரி, கன்னியாகுமரி கலெக்டர் நாகராஜன், நெல்லை மாவட்ட புலிகள் காப்பக கள இயக்குநர் சுப்ரதமகாபத்ரா, மாவட்ட வன அலுவலர் பத்மா, கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் ரிட்டோதிரியாஸ்,சேரன்மகாதேவி சப்-கலெக்டர்ரோகிணி, அம்பை தாசில்தார் சரஸ்வதி, உதவி வனப்பாதுகாவலர் ஆனந்த்குமார், அம்பை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் குருசாமி, களக்காடு புலிகள் காப்பகம் துணை இயக்குநர்சேகர், ஆலங்குளம் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், வி.கே.புரம் நகராட்சி தலைவி மனோன்மணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நலத்துறை முகம்மது ஹைதர்அலி, மணிமுத்தாறு பஞ்.,தலைவர் சிவன்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் படகு உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன்கருதி பாபநாசம் அணையில் படகு இயக்குவது என்றும், படகை இயக்கும்போது அணைப்பகுதி தண்ணீரில் டீசல் கசிவு கூடாது, படகில் சைலன்சரை பொருத்தி இயக்கவேண்டும், மண்ணெண்ணெய் ஊற்றி படகு இயக்க கூடாது, படகு அணையில் ஓட இருப்பதால் தண்ணீருக்குள் கழிவு ஏதும் கலக்காமல் இருக்கவேண்டும் உட்பட பல்வேறு நிபந்தனைகளுடன் பாபநாசம் அணையில் படகுபோக்குவரத்து இன்னும் சில நாட்களில் தொடரலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் குதிரைவெட்டி வரை சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மல்கானி , மாவட்ட டிஆர்ஓ உமாமகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:- நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதி உற்பத்தியாகி மக்களுக்கு பயன்பட்டுக் கொண்டிருப்பது கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். அதேநேரத்தில் தண்ணீரும் மிகவும் மதிப்பு மிக்கது. இப்பகுதியில் வாழும் மக்களின் பிரச்னைகளையும் முக்கியமாக கருத்தில் கொண்டு பாபநாசம் அணையில் படகுபோக்குவரத்து துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு வாழும் மலை வாழ் மக்களுக்கும் அணையில் படகு இயக்க நியாயமான வாய்ப்பு கொடுக்கவேண்டும். மொத்தம் 24 படகுகள் ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கின்றன. இன்னும் சுமார் 3 நாட்களில் அணையில் படகுபோக்குவரத்து துவங்கப்படும். அப்போது படகு உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கூட்ட முடிவில் காரையார் காணிக்குடியிருப்பு பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் அம்பை எம்.எல்.ஏ.,சுப்பையாவை முற்றுகையிட்டு பாபநாசம் அணையில் இயக்கப்படும் படகுகளில் எங்களுக்கும் உரிமைவேண்டும். இதுகுறித்து நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கூறினர். இதனை தொடர்ந்து ஏற்கனவே அணையில் படகுபோக்குவரத்து நடத்தும் உரிமையாளர்களுக்கும், பழங்குடி காணியின மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டம் எம்.எல்.ஏ., சுப்பையா தலைமையில் நடந்தது.
அப்போது இரு தரப்பினரும் ஒருவருக்குகொருவர்பேசி நல்ல முடிவு எடுக்கவேண்டுமென்று எம்.எல்.ஏ., சுப்பையாகேட்டுக் கொண்டார். இந்நிலையில் பழங்குடியின மக்களுக்கு படகு ஓட்டுவதற்கு உரிமை கிடைக்கவில்லை என்றால் நாங்கள் அணையில் படகை ஓட்டவிமாட்டோம் என்றும் காணியின மக்கள் தெரிவித்தனர்.