Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 19 ஜனவரி, 2013

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக ராகுல் காந்தி தேர்வு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. வரும் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் கட்சியின் செயல்பாடு ஆகியவற்றை மையப்படுத்தி நடந்த இந்த கூட்டத்தில் உயர்மட்ட தலைவர்கள், நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், ராகுல் காந்தியை கட்சியில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும், அவரது தலைமையில் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் பெரும்பாலான தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் முடிந்தபின்னர், இன்று இரவு கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் இக்கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது. அப்போது ராகுல் காந்தியை கட்சியின் துணைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி பரிந்துரை செய்தார். இதையடுத்து ராகுலை துணைத்தலைவராக நியமிப்பது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

ராகுலுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டிருப்பதால், அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது என்றும், சோனியாவுக்கு அடுத்தபடியாக கட்சியில் ராகுல்காந்தி செயல்படுவார் என்றும் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவேதி தெரிவித்தார். இந்த அறிவிப்பை ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

ராகுல் துணைத்தலைவராக அறிவிக்கப்பட்டதை காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்றுள்ளனர். இந்த மகழ்ச்சியை பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

கல்லறைப் பூக்கள் !


கல்லறை தோட்டத்து பூக்கள் அனைத்தும்
என்ன பேசிடும் என்னென்ன பேசிடும்

வாடினாலும்
வருத்தப்பட யாருமில்லை !

வயது வந்த பின்
மாலைகட்ட மணமக்கள் இல்லை !

தென்றல் மட்டுமே சத்தமிடும்
வெள்ளை கொடி கட்டி !

புறாக்களுக்கு இங்கு அனுமதியில்லை
அமைதி கெடாமல் இருக்க !

அவசரமாய் கடந்து செல்வோரின்
ஆழ்நிலை தூக்கம் இங்கேதான் !

பொருளாதாரம்
இங்கே பொருட்படுத்த படுவதேயில்லை !

நில அபகரிப்பு வழக்கு தொடர
கல்லறைச் சட்டத்தில் அனுமதியில்லை !

தார் சாலைகள் அமைக்க மனு பெற்ற
அமைச்சரின் இறுதி ஊர்வலத்திற்கு சாலை அமைக்கப்பட்டது !

நிலவின் துணை கொண்டு
மின்னொளிக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது !

பேச்சாளன் இங்கே
மௌனத்தின் தூதுவனாக நியமிக்கப் பட்டிருக்கின்றான் !

புத்தாண்டில் புதிய ஆணை எடுக்க
யாரும் இங்கே கிடந்த பின் எழுவதில்லை !

நமது சுவாச வெளியிடு மட்டும்தான் சிதைவு பெறாமல்
இங்கே சிம்போனி இசைத்து கொண்டிருக்கின்றது !

சதைவெறி கொண்டவனும்
சட்டத்தின் துளைகளுக்குள் சாலைகள் அமைத்தவனும்
இங்கே புதையுண்டு புத்தனாகி போனார்கள் !

”போதி” மரம் கேட்கவில்லை
போதிய மரம் மட்டும் வேண்டிய சமூக ஆர்வலரின்
மகன் நட்ட பூச்செடி நாங்கள்..!

எங்கு நட்டாலும்
புன்னகையே அறிவிக்கப்படாத எங்களது தேசிய மொழி..!


----இளம் கவிஞன் ,ஆய்குடி மணி 

துப்பாக்கி, பீரங்கி சத்தத்திற்கு நடுவே அச்சமின்றி செயல்படும் பள்ளி


இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே, பதற்றம் நிலவி வரும் நிலையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே செயல்படும் நடுநிலைப் பள்ளி, எவ்வித பதற்றமும் இல்லாமல் வழக்கம் போல் இயங்குகிறது.

ஜம்மு - காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில், பக்கீர் தாரா என்ற கிராமம் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான, எல்லை கட்டுப்பாட்டு கோட்டிற்கும், பக்கீர் தாராவுக்கும், 1.5 கி.மீ., தான் இடைவெளி. எல்லையில் நடக்கும் மோதல்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான போர்களின் போது, இந்த கிராமம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனினும், சமீபத்திய உச்சகட்ட பதற்றத்திலும், எவ்வித அச்சமும் இல்லாமல், பக்கீர் தாரா அரசு நடு நிலை பள்ளி தினமும் செயல்படுகிறது. அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர், பல்பீர் சிங்.
எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்படும் தாக்குதலால், பள்ளியின் சுற்றுச் சுவர்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த சுவடும், பீரங்கி குண்டுகளுக்கு இலக்கானதால், பாதிக்கப்பட்ட கட்டடங்களும், இன்னும் அந்த பள்ளியில் காணப்பட்டாலும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எந்த அச்ச உணர்வும் கிடையாது.

மாணவர்களில் பலரும், போரால் பாதிக்கப்பட்டவர்கள் தான். 14 வயது தாய்ரா கவுன்சார் என்ற மாணவியின் தாய், எட்டு ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டிலிருந்து தன் மகளைக் காப்பாற்றுவதற்காக, உயிரை இழந்தவர். இவரை போல ஏராளமான மாணவர்கள், பாகிஸ்தான் ராணுவத்தால், பல விதங்களில் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களிடம் பயம் என்பதே இல்லை.

நாட்டின் பிற பகுதி, நடுநிலைப் பள்ளி மாணவர்கள், வீடியோ கேம்ஸ், டிவி நிகழ்ச்சிகளை பற்றி பேசும் போது, இந்த பள்ளி குழந்தைகள், பாகிஸ்தான் தாக்குதல், துப்பாக்கி சூடு, பீரங்கி சத்தம், ராணுவ வாகனங்கள் போன்றவற்றை பற்றியே பேசி வருகின்றனர்.

கேள்விக்குறியாகும் ஊட்டி அரசுக் கலைக் கல்லூரியின் எதிர்காலம்


பொன் விழாவை கடந்து செயல்படும், ஊட்டி அரசு கலை கல்லூரி கட்டட விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சை, கல்லூரியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகியுள்ளது.

ஊட்டி உருவாக காரணமாக இருந்த ஆங்கிலேயரான ஜான் சல்லிவன், தற்போதைய ஊட்டி அரசுக் கலை கல்லூரி கட்டடம் அருகே தனக்கென ஒரு குடியிருப்பை முதலில் அமைத்தார்.

கற்களால் கட்டப்பட்ட இந்த கட்டடம், "கல் பங்களா" "கன்னிமரா காட்டேஜ்" என அழைக்கப்படுகிறது. நிர்வாக பணிகளை மேற்கொள்ள அருகே ஒரு கட்டடத்தை மீண்டும் கட்டினார்; அந்த கட்டடம் கடந்த 1955 முதல், அரசுக் கலை கல்லூரியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த கட்டடமும் கடந்த 1905ம் ஆண்டைய ஆவணத்தின் படி, "கல் பங்களா முகப்பு" என பதிவாகியுள்ளது.

தொடரும் வளர்ச்சி: கல்லூரியில், தற்போது 3,000 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 14 இளங்கலை, 8 முதுகலை, ஏழு ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன. 78 நிரந்தர பேராசிரியர்கள், 51 கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். பொதுப்பணித் துறையினர், கல்லூரியை பராமரித்து வருகின்றனர்.

கல்லூரியை மேம்படுத்த, மாணவர் எண்ணிக்கையை உயர்த்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு அரசு கலைக் கல்லூரிக்கும், தலா 100 லட்சம் ரூபாய் ஒதுக்கி, தகுதியுள்ள கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்த, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

"கல் பங்களா" சர்ச்சை: இந்நிலையில், ஊட்டி அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள கன்னிமரா காட்டேஜ், கல்லூரி முதல்வர் குடியிருப்பாக அரசை வலியுறுத்தியதன் அடிப்படையில், பயன்படுத்தப்பட்டு வருகிறது. "இக்குடியிருப்பை அருங்காட்சியகமாக மாற்ற, சில தனியார்கள் குடியிருப்பை காலி செய்ய, மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது" என, கூறப்படுகிறது.

கல்லூரி இயக்குனரகம், மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பப்படும் எழுத்துப்பூர்வ கடிதங்களில், "கல் பங்களாவை (ஸ்டோன் ஹவுஸ்) காலி செய்ய வேண்டும்" என, கூறப்பட்டுள்ளது.

ஆவணப்படி, கல்லூரி முகப்பு கட்டடம் தான் "கல்பங்களா" என பதிவாகியுள்ளது. இக்கட்டடத்தில், பொருளாதாரம், வரலாறு, கணிதம், பாதுகாப்பு, தமிழ் துறை வகுப்புகள் தவிர, கல்லூரி நூலகமும் செயல்படுகிறது. "இந்த கட்டடத்தை தான் காலி செய்ய அரசு வலியுறுத்துகிறது" என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கல்லூரி வளர்ச்சிக்கு தடை?: அரசு கலைக் கல்லூரி, அதை சுற்றியுள்ள பகுதி 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது; இது, அரசு புறம்போக்கு என, ஆவணத்தில் பதிவாகியுள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தில் 10 ஆண்டு குடியிருந்தாலே, அவர்களுக்கு பட்டா கொடுக்கும் அரசு, 58 ஆண்டுகளாக கல்வி போதிக்கும் பணியை செய்து வரும் அரசு கலைக்கல்லூரி பெயரில், நிலத்தை பதிவு செய்து கொடுக்க இதுவரை ஆர்வம் காட்டாமல் இருப்பதும், கல்லூரி பயன்பாட்டில் உள்ள கட்டடத்தை அருங்காட்சியமாக மாற்ற ஆர்வம் காட்டுவதும், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஊட்டியில் உள்ள அரசு அருங்காட்சியகம், வாடகை கட்டடத்தில், இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. அதை மேம்படுத்தி, அதன் பயன் மக்களை போய் சேர்வதற்கான நடவடிக்கையில் இறங்காமல், புதிதாக ஒரு அருங்காட்சியகம் ஏற்படுத்த "மெனக்கெடுவது" பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேர்மையும், ஒழுக்கமும் மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்குங்கள் ஆசிரியர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி வேண்டுகோள்


நேர்மையும், ஒழுக்கமும் மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்குங்கள் என்று ஆசிரியர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் வேண்டுகோள் விடுத்தார்.

புத்தக கண்காட்சியில் உரையரங்கம்
36–வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கண்காட்சியையொட்டி தினமும் இலக்கிய நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், புத்தக வெளியீட்டுவிழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்க (பபாசி) நடத்தும் இந்த புத்தக கண்காட்சியில் நேற்று உரையரங்கம் நடந்தது. இதில், ஐ.ஏ.எஸ். அதிகாரியும், கோ–ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான உ.சகாயம் கலந்துகொண்டு ‘‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

லஞ்சமும், ஊழலும்
இன்று, நேர்மை என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டுமே உடைய ஒரு பண்பாக பார்க்கப்படுகிறது. ஆனால், அது சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் உரிய பண்பு ஆகும். நம் நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளது. ஒரு காலத்தில் சாதாரண ஊசி கூட உற்பத்தி செய்ய இயலாமல் இருந்த நாம் இன்று அணுகுண்டுகளை தயாரிக்கும் அளவுக்கு முன்னேறி உள்ளோம்.எவ்வளவோ தியாகங்களை செய்து சுதந்திரத்தை வாங்கிக்கொடுத்தார்கள். ஆனால், அந்த சுதந்திரத்தின் பயன், சாதாரண மக்களை அடைந்துள்ளதா? என்றால் இல்லை. இன்று லஞ்சமும், ஊழலும் எங்கும் வியாபித்துள்ளன. லஞ்சம், ஏழைகளுக்கு, நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது. இத்தகைய லஞ்சத்தையும், ஊழலையும் அகற்றியாக வேண்டும்.

ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்
லஞ்சம் வாங்காதவர்களை பைத்தியக்காரர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், இந்த பைத்தியக்காரர்கள்தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள். நேர்மையாக செயல்படும்போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால், ஊழல் அதிகாரிகள் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கிறார்கள். சாதாரண மக்கள் நேர்மையை அங்கீகரிக்கிறார்கள். சாதாரண மக்கள்தான் நேர்மையையும், நேர்மையான அரசையும் விரும்புகிறார்கள்.நமது ஆசிரியர்கள் மாணவர்களை என்ஜினீயர்களாக, டாக்டர்களாக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக, சாப்ட்வேர் என்ஜினீயர்களாக உருவாக்குகிறார்கள். மிகவும் சந்தோஷம். ஆனால், அவை அனைத்தையும் விட மேலாக நேர்மையும், ஒழுக்கமும் மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்குங்கள் என்று ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஏனென்றால், மாணவர்களை நேர்மையும், பண்பும் மிக்கவர்களாக ஆற்றல் படைத்த கருவிகள் ஆசிரியர்கள்தான்.இவ்வாறு சகாயம் கூறினார்.