Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 19 ஜனவரி, 2013

துப்பாக்கி, பீரங்கி சத்தத்திற்கு நடுவே அச்சமின்றி செயல்படும் பள்ளி


இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே, பதற்றம் நிலவி வரும் நிலையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே செயல்படும் நடுநிலைப் பள்ளி, எவ்வித பதற்றமும் இல்லாமல் வழக்கம் போல் இயங்குகிறது.

ஜம்மு - காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில், பக்கீர் தாரா என்ற கிராமம் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான, எல்லை கட்டுப்பாட்டு கோட்டிற்கும், பக்கீர் தாராவுக்கும், 1.5 கி.மீ., தான் இடைவெளி. எல்லையில் நடக்கும் மோதல்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான போர்களின் போது, இந்த கிராமம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனினும், சமீபத்திய உச்சகட்ட பதற்றத்திலும், எவ்வித அச்சமும் இல்லாமல், பக்கீர் தாரா அரசு நடு நிலை பள்ளி தினமும் செயல்படுகிறது. அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர், பல்பீர் சிங்.
எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்படும் தாக்குதலால், பள்ளியின் சுற்றுச் சுவர்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த சுவடும், பீரங்கி குண்டுகளுக்கு இலக்கானதால், பாதிக்கப்பட்ட கட்டடங்களும், இன்னும் அந்த பள்ளியில் காணப்பட்டாலும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எந்த அச்ச உணர்வும் கிடையாது.

மாணவர்களில் பலரும், போரால் பாதிக்கப்பட்டவர்கள் தான். 14 வயது தாய்ரா கவுன்சார் என்ற மாணவியின் தாய், எட்டு ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டிலிருந்து தன் மகளைக் காப்பாற்றுவதற்காக, உயிரை இழந்தவர். இவரை போல ஏராளமான மாணவர்கள், பாகிஸ்தான் ராணுவத்தால், பல விதங்களில் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களிடம் பயம் என்பதே இல்லை.

நாட்டின் பிற பகுதி, நடுநிலைப் பள்ளி மாணவர்கள், வீடியோ கேம்ஸ், டிவி நிகழ்ச்சிகளை பற்றி பேசும் போது, இந்த பள்ளி குழந்தைகள், பாகிஸ்தான் தாக்குதல், துப்பாக்கி சூடு, பீரங்கி சத்தம், ராணுவ வாகனங்கள் போன்றவற்றை பற்றியே பேசி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக