Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 11 ஜூலை, 2012

என்ன கொடுமை இது ? எந்த உலகத்தில் வாழ்கிறோம் ?

பெரம்பலூரில் எம்எல்ஏ வீட்டில் தங்க வைத்து படிக்க வைப்பதாக கேரளாவில் இருந்து அழைத்துச் வரப்பட்ட பிளஸ் 1 மாணவி, மர்மமான முறையில் இறந்தார். அவருடைய உடலில் விஷம் இருந்ததால், பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீருமேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சுசீலா. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள். இவர்களின் மகள் சத்யா (16). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். வறுமை காரணமாக சத்யாவை படிக்க வைக்க முடியாமல் சந்திரன் சிரமப்பட்டார்.

சில நாட்களுக்கு முன்பு சந்திரனை அணுகிய பீருமேடு பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம், ஹரி கிருஷ்ணன் ஆகியோர், ‘சத்யாவை பெரம்பலூரில் உள்ள ஒரு எம்எல்ஏ வீட்டில் தங்க வைத்து படிக்க வைக்கலாம், படிப்பு, சாப்பாடு செலவை எம்எல்ஏ.வே பார்த்துக் கொள்வார். அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்கிறோம்’ என்று கூறியுள்ளனர். இதை சந்திரனும் நம்பியுள்ளார்.

இதன்படி கடந்த வாரம் சத்யா, சந்திரன், சுசீலாவை பன்னீர் செல்வமும், ஹரி கிருஷ்ணனும் பெரம்பலூருக்கு அழைத்து சென்றுள்ளனர். ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று இதுதான் எம்எல்ஏ வீடு என்று கூறியுள்ளனர். சந்திரனும், சுசீலாவும் சத்யாவை அந்த வீட்டிலேயே விட்டு விட்டு வந்தனர். அப்போது, சந்திரனுக்கு பன்னீர் செல்வம் ரூ.5 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். பிறகு, சந்திரனும் சுசீலாவும் பீருமேடு திரும்பினர். 2 நாட்களுக்கு பின்னர் சந்திரனுக்கு சத்யா போன் செய்து, தன்னால் இங்கு இருக்க முடியாது என்றும் உடனே வந்து அழைத்துச் செல்லும்படியும் கூறியுள்ளார்.

பின்னர் 2 நாட்களுக்கு பிறகு பெரம்பலூரில் இருந்து போனில் பேசிய ஒருவர், சத்யாவுக்கு உடல்நலம் சரியில்லை என்றும் உடனடியாக புறப்பட்டு வரும்படியும் கூறியுள்ளார். சந்திரன் அங்கே சென்ற போது, சத்யா அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினர்.
பின்னர் மேல் சிகிச்சைக் காக தேனி மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி 7ம் தேதி சத்யா இறந்தார். அவருடைய உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

சத்யாவின் உடல் பீருமேடுக்கு கொண்டு வரப்பட்டது. இறுதி அஞ்சலி செலுத்த வந்த பக்கத்து வீட்டினர், சத்யாவின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த பீருமேடு போலீசார் மற்றும் எம்எல்ஏ பிஜிமோள் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். சத்யாவின் உடல் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், அவருடைய உடலில் விஷம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, சத்யா பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சத்யாவை அழைத்து சென்ற பன்னீர் செல்வம், ஹரி கிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.

வீடிழந்து வீதிக்கு வந்த சிறுவர்கள் பள்ளி செல்ல முடியாமல் தவிப்பு

தென் மாவட்டத்தில் வற்றாத ஜீவநதி தாமிரபரணி என அழைக்கப்படுகிறது. தாமிரபரணியில் ஆலை கழிவு, சாக்கடை கழிவுகள், பிளாஸ் டிக் கழிவுகளால் தாமிரபரணி தோன்றும் பகுதியிலிருந்து முடிவடையும் பகுதிவரை தண்ணீர் மாசுபட்டு காணப்படுகிறது. 
மணல் மாபியாக்களால் தாமிரபரணி தண்ணீரும் பல்வேறு நோய்களை பரப் பும் காரணியாக மாறியது. இதனால் சமூகநல ஆர்வலர்கள் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை பொதுமக்களை சந்தித்து தாமிரபரணியை பாது காக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து நெல்லை மாநகர கொக்கிர குளம் ஆற்றின் கரைகளை மறைத்து அடர்ந்து வளர்ந்துள்ள முள் செடி களை காவல்துறை உதவியுடன்அகற்றி தூய்மை படுத்தப்பட்டது. இந்நிலையில் தாமிரபரணி ஆற்றின் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 791 வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை சிரம்மேல் ஏற்று வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் வரிந்து கட்டிக்கொண்டு பணியை செம்மையாக முடித்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் 791 வீடு களில் சுமார் 600க்கும் மேற் பட்ட வீடுகளை மட்டுமே இடித்து அப்புறப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாரிகள் மீதி வீடுகளை இடிக்க வில்லையென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இடிக்கப்பட்ட வீடு களில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வந்துள்ளனர். இங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட பள்ளி சிறுவர்கள் உள்ளனர். வீடுகள் இடிக்கப்பட்டதால் பயன்படுத்திய பொருட் களை அப்பகுதியில் உள்ள கோயில்களிலும், சாலை ஓரங்களிலும் வைத்து பொதுமக்கள் பாதுகாத்து வருகின்றனர். விதியின் வசத்தால் வீதிகளில் வசிக்கும் நிலை ஏற்பட்டதால் பள்ளி செல்ல முடியாத நிலையில் சிறுவர்கள் உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புலம்பி தவிக்கின்றனர்.

களை கட்டியது குற்றாலம் ..............




குற்றாலத்தில் இரவு நேரங்களில் சாரல் நன்றாக பெய்வதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சீசன் ‘களை’ கட்ட துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். குற்றாலத்தில் ஜூலை மாத துவக்கத்தில் சாரல் நன்றாக இருந்தது. அதன்பிறகு 5 நாட்கள் சாரல் இல்லாமல் வெயில் அடித்த நிலையில் கடந்த 2 தினங்களாக மீண்டும் சாரல் மழை பெய்கிறது. நேற்று பகலில் சாரல் சற்று ஓய்வெடுத்து இருந்தாலும் இரவில் பெய்தது.
தொடர்ந்து 2 தினங்களாக சாரல் நன்றாக இருப்பதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 

ஐந்தருவியில் 5 பிரிவுகளிலும் தண்ணீர் விழுகிறது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் பரந்து விரிந்து கொட்டுகிறது. புலியருவி, பழையகுற்றாலம் ஆகியவற்றிலும் ஓரளவு தண்ணீர் விழுகிறது. இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலே தெரியாமல் அவ்வப்போது சாரல் பொழிந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? ---- புவியியல் துறை


படிப்பதில் ஆர்வத்தை தூண்டும் துறைகளில் ஒன்று புவியியல். நிலம், நீர், காற்று, தட்பவெப்பம், மலை, காடு, கடல், இயற்கை இடர்ப்பாடுகள், நிலத்தின் தன்மை, புவியின் எதிர்காலம், பனிப்பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது. இன்றைய தொழிற்புரட்சி யுகத்தில் புவியியல் துறையின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இத்துறை, இயற்பியல் ரீதியான புவியியல் மற்றும் மனித சம்பந்தப்பட்ட புவியியல் என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் புவியியல் படிப்பு பி.ஏ, பி.எஸ்.சி நிலைகளில் வழங்கப்படுகிறது. புவியியல் படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் ஆராய்ச்சி படிப்புகளுக்கு செல்லலாம். ஆசிரியர் பணியிலும் ஈடுபடலாம்.
நகர்மயமாக்கல் படிப்பில் முதுநிலை டிப்ளமோ முடித்தால் பரவலான வேலைவாய்ப்பு, நல்ல சம்பளம் நிச்சயம். இப்படிப்புக்கு முதுநிலையில் குறைந்தது 55 மதிப்பெண்கள் வேண்டும். நுழைவு, நேர்முக தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். சுற்றுச்சூழலியல் மற்றும் வன மேலாண்மை துறை சார்ந்த நிறுவனங்களும் புவியியல் பட்டதாரிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கின்றன. அரசு, ஆராய்ச்சி அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் வியாபார ஆலோசனை மய்யங்களில் வேலைகள் காத்திருக்கின்றன.
டில்லி பல்கலையின் புவியியல் பாடத்திட்டத்தில், பேரிடர் மேலாண்மை படிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. முதுநிலை புவியியல் படிப்புடன், பேரிடர் மேலாண்மையில் டிப்ளமோ படித்தால் சிறப்பான வேலைவாய்ப்பு உண்டு. இக்னோ மற்றும் டில்லி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் ஆகியவை இப்படிப்பை வழங்குகின்றன. முதுநிலை புவியியல் முடித்த பிறகு ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் படிக்கலாம். இதுதொடர்பான படிப்புகளை டேராடூனில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனத்தில் மேற்கொள்ளலாம்.
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் இப்படிப்புகளை வழங்குகின்றன. இதை முடிப்பவர்களுக்கு, இஸ்ரோ, தேசிய ரிமோட் சென்சிங் ஏஜென்சி, தேசிய தகவல்தொடர்பு மய்யம், வானிலை பயன்பாட்டு நிலையம் ஆகியவற்றில் பணி கிடைக்கும். அரசுத்துறைகளை பொருத்தவரை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம், சர்வே ஆப் இந்தியா, விண்வெளி பயன்பாட்டு மையம், நகர மற்றும் கிராம மேம்பாட்டுத் துறைகள், மாநகர மேம்பாட்டு ஆணையம், உள்ளிட்டவற்றில் பணிகள் கிடைக்கும். நகர்ப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பு திட்டமிடல், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டிருக்கும் தனியார் நிறுவனங்களும் வேலைவாய்ப்புகளை அளிக்கின்றன.

மியான்மாரில் ஜனநாயகம் மலர்ந்துவிட்டதா? சந்தேகத்தை கிளப்பும் அரசு அறிவிப்பும் ,கலவரமும் ..........

மியான்மரில் ரகின் மாகாணத்தில் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டுள்ளதால், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மியான்மரில் சமீபகாலமாக ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. வீட்டுக் காவலில் பல ஆண்டு காலம் அடைக்கப்பட்டிருந்த ஜனநாயக தலைவர் ஆங் சாங் சூகி தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகி உள்ளார்.
இதையடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை அகற்ற, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முன்வந்துள்ளன.
இந்நிலையில் வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள ராகின் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டுள்ளது.
ராகின் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் 8 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இவர்கள் மியான்மரில் குடியுரிமை கேட்டு போராடி வருகின்றனர்.
குடியுரிமை அளிக்க மியான்மர் அரசு மறுத்து விட்டது. இதற்கிடையே முஸ்லிம்களின் குடிசைகளை தீ வைத்து கொளுத்தி விட்டதாக கூறி, கடந்த வாரம் பெரிய அளவில் கலவரம் மூண்டது. இதில் 50 பேர் பலியாயினர்.
இதையடுத்து மவுங்தா பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, காலை முதல் இரவு வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதட்டமான சூழல் இங்கு நிலவுவதால், ஐ.நா அமைப்பின் ஊழியர்கள் 44 பேர் பாதுகாப்பு கருதி மவுங்தா பகுதியிலிருந்து நேற்று வெளியேறி யாங்கூன் நகருக்கு சென்று விட்டனர்.
மியான்மாரில் ஜனநாயகம் மலர்ந்துவிட்டதா? என்ற சந்தேகத்தை கிளப்பும் வகையில் அரசு அறிவிப்பும் ,அங்கு நடைபெறும் கலவரமும் அமைந்துள்ளது .உண்மையான ஜனநாயகம் எப்போது மலரும் ? என்பதுதான் நடுநிலையாளர்களின் கேள்வியாக உள்ளது .

தியாகப் பணிக்கு படிக்க மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துவிட்டதோ ?

ஆசிரியர் பயிற்சி படிப்பிற்குஇந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், திருச்சியில், 5ம் தேதி முதல், 8ம் தேதி வரை நடந்தது.மாநிலம் முழுவதும் இருந்து, 3,864 பேர் விண்ணப்பித்தனர். தகுதி வாய்ந்த 3,843 மாணவருக்கு, கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஆனாலும், 2,000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், கவுன்சிலிங்கிற்கு வந்தும், 1,998 மாணவர் மட்டுமே, பயிற்சியில் சேர உத்தரவு பெற்றனர்.இவர்களில், மாணவர் எண்ணிக்கை, வெறும் 200 பேர் தான். மீதமுள்ள அனைவரும், மாணவியர். ஆசிரியர் பயிற்சி முடித்தால், எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையும், இந்த பயிற்சியை முடிக்கும் பெண்களுக்கு, எளிதில் திருமண வாய்ப்பு கை கூடுவதும் தான், மாணவியர் அதிகளவில் இப்பயிற்சியை பெறக் காரணம் என, துறைவட்டாரங்கள் தெரிவித்தன.

ஆய்வு மேற்கொள்வோம்:

அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளிலேயே, 2,720 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் கூட நிரம்பாதது, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தை, கவலை அடையச் செய்துள்ளது. இதுகுறித்து, துறை வட்டாரங்கள் கூறியதாவது: இந்த பயிற்சிக்கு வரவேற்பு குறைந்து, வேலை வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டதன் காரணமாக, எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில், ஆசிரியர் பயிற்சி படிப்பு, சில ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதே போன்ற ஒரு   நிலை, வரும் காலங்களில் ஏற்படும் என தெரிகிறது17 ஆயிரம் இடங்கள் கவுன்சிலிங்கில் இருந்தும், 11.75 சதவீத இடங்கள் தான் நிரம்பியுள்ளன. தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில், 50 பள்ளிகள் மூடப்பட்டன. இது, வரும் காலங்களில் தொடரலாம். இந்தப் பள்ளிகளில், பி.எட்., கல்லூரி உள்ளிட்ட, வேறு கல்வி நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கு, தனியார் ஆர்வம் காட்டுகின்றனர். ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு, மவுசு குறைந்து வருவதால், இதுகுறித்து ஆய்வு மேற்கொள்வோம்.இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


20 ஆண்டுகளாக போராடியவருக்கு பேஸ்புக் மூலம் வெற்றி


மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் மணி. இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற தோட்டத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர். இந்தோ - ஸ்ரீலங்கா ஒப்பந்தப்படி, வீட்டுமனை, வேலை வழங்கப்படும் எனக்கூறி, பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு 125 பேருடன் அனுப்பப்பட்டார். மதுரையில் அவர் பணியாற்றிய மில் மூடப்பட்டதால், பணபலன் கிடைக்காமல் வறுமையில் வாடினார். 1983 முதல் வீட்டுமனை கேட்டு, தாசில்தார், கலெக்டர் என விண்ணப்பம் மேல் விண்ணப்பம் அனுப்பினார். பலனில்லை.

ஒரு ஆண்டாக லேடி டோக் கல்லூரியில், குறைந்த சம்பளத்தில் தோட்டக்காரராக பணியாற்றும் மணிக்கு, பேராசிரியை கிறிஸ்டியானா உதவ முன்வந்தார். இவர் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் மனு வழங்கினார். எனினும், பலன் இல்லை. பின் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா சமீபத்தில் உருவாக்கிய, கலெக்டர் அலுவலக "பேஸ் புக்'கில் தொடர்பு கொண்டு மனு அளிக்க பேராசிரியை கிறிஸ்டியானா உதவினார். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் அன்சுல்மிஸ்ரா அதில் பதிலளித்தார்.

இதுவரை என்னென்ன நடந்துள்ளது என விபரம் கேட்டார். அப்போதுதான் மணிக்கு பூரண நம்பிக்கை பிறந்தது. விபரங்களை தெரிவித்ததும், கலெக்டர் விசாரணை நடத்தி, மணிக்கு ஏற்கனவே இடம் ஒதுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். ""உடனே உத்தரவு வழங்கப்படும்; பெற்றுச் செல்லுங்கள்,'' என்று தெரிவித்தார். இதையடுத்து மணிக்கு கருப்பாயூரணி அருகே 2 சென்ட் அளவில் இலவச வீட்டுமனை ஒதுக்கப்பட்டுள்ளது. 29 ஆண்டுகளில் 28க்கும் மேற்பட்ட கலெக்டர்களால் முடியாத பிரச்னைக்கு, அன்சுல்மிஸ்ராவின் புதுமுயற்சியான "பேஸ்புக்' மூலம் தீர்வு கிடைத்தது.