மியான்மரில் ரகின் மாகாணத்தில் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டுள்ளதால், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மியான்மரில் சமீபகாலமாக ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. வீட்டுக் காவலில் பல ஆண்டு காலம் அடைக்கப்பட்டிருந்த ஜனநாயக தலைவர் ஆங் சாங் சூகி தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகி உள்ளார்.
இதையடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை அகற்ற, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முன்வந்துள்ளன.
இந்நிலையில் வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள ராகின் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டுள்ளது.
ராகின் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் 8 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இவர்கள் மியான்மரில் குடியுரிமை கேட்டு போராடி வருகின்றனர்.
குடியுரிமை அளிக்க மியான்மர் அரசு மறுத்து விட்டது. இதற்கிடையே முஸ்லிம்களின் குடிசைகளை தீ வைத்து கொளுத்தி விட்டதாக கூறி, கடந்த வாரம் பெரிய அளவில் கலவரம் மூண்டது. இதில் 50 பேர் பலியாயினர்.
இதையடுத்து மவுங்தா பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, காலை முதல் இரவு வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதட்டமான சூழல் இங்கு நிலவுவதால், ஐ.நா அமைப்பின் ஊழியர்கள் 44 பேர் பாதுகாப்பு கருதி மவுங்தா பகுதியிலிருந்து நேற்று வெளியேறி யாங்கூன் நகருக்கு சென்று விட்டனர்.
மியான்மாரில் ஜனநாயகம் மலர்ந்துவிட்டதா? என்ற சந்தேகத்தை கிளப்பும் வகையில் அரசு அறிவிப்பும் ,அங்கு நடைபெறும் கலவரமும் அமைந்துள்ளது .உண்மையான ஜனநாயகம் எப்போது மலரும் ? என்பதுதான் நடுநிலையாளர்களின் கேள்வியாக உள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக