தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம் உள்பட 11 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களில் 62 அரசு கல்லூரிகள் 132 அரசு உதவி பெறும் கல்லூரிகள் 500-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன.
மருத்துவம், பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் ஒற்றை சாளர முறையில் சேர்க்கப்படுகிறார்கள். அதுபோல கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளன.
உயர் கல்வி வணிக மயமாகும் சூழலில் இருந்து விடுபட ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை அவசியம் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கே.பாண்டியன் கூறினார்.
இந்த நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொண்ட உயர்கல்வி மன்ற கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவர் சந்தியா பாண்டியன் கலந்து கொண்டார். அவர் கூறியதாவது:-
முதல் கட்டமாக எம்.ஏ., எம்.எஸ்.சி. பட்ட மேற்படிப்புகளுக்கு ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்படும். படிப்படியாக இந்த கலந்தாய்வு முறை பட்டப்படிப்புகளுக்கும் (பி.ஏ., பி.எஸ்.சி.) விரிவாக்கப்படும்.
சென்னை பல்கலைக்கழகம் உள்பட 11 பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பல்கலைக்கழக அளவிலும் ஒற்றை சாளர கலந்தாய்வு நடத்தப்படும். பொறியியல் படிப்புக்கு ஒரே ஒரு பல்கலைக்கழகம் மட்டும் உள்ளதால் மாநிலம் முழுவதும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஆனால் கலை, அறிவியல் பிரிவில் 11 பல்கலைக்கழகங்கள் உள்ளதால் பல்கலைக்கழக அளவில் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கான பரிந்துரையை தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் அரசுக்கு அனுப்பி உள்ளது. வருகிற கல்வியாண்டில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.