கடல் மற்றும் கடல் சார்ந்தவற்றைப் பற்றி அறிய உதவும் மரைன் இன்ஜினியரிங் துறை இன்று டாப் 10 துறைகளில் ஒன்று என்று கூறலாம். கப்பல் மற்றும் கடல் போக்குவரத்து வாகனங்களுக்கு மிகவும் அடிப்படையான துறையாக விளங்குவதும் இத் துறை தான்.
நாடிகல் ஆர்க்கிடெக்சர் மற்றும் கடல் அறிவியலைப் படிப்பது இது. கப்பல் ஒன்றில் தொழில்நுட்ப மேலாண்மைக்கு பயன்படுவதும் மரைன் இன்ஜினியரிங் தான். கப்பல் ஒன்றின் இயந்திரங்களைத் தேர்வு செய்வது, டிசைன் செய்வது போன்ற அத்தியாவசியப் பணிகளை மரைன் இன்ஜினியர்கள் தான் செய்கிறார்கள். இது போலவே கப்பலின் இன்ஜின் அறையை மேலாண்மை செய்வதும் இவர்கள் தான்.
கரையிலிருந்து தள்ளியே இத்துறைப் பணிகளை ஒருவர் மேற்கொள்வதால் பொதுவாக இத் துறையினர் பெறும் சம்பளமான மிக மிக கவர்ச்சிகரமானதாக அமைகிறது. பொதுவாக இப் படிப்பை முடிப்பவர்கள் வேலையில்லாமல் இருப்பதைக் காண முடியாது. பொதுத்துறை கப்பல் நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை கப்பல் நிறுவனங்கள் என எண்ணற்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கின்றன.
இத்துறையில் பி.இ., மரைன் இன்ஜினியரிங் படிப்பு தான் முக்கிய படிப்பாக அமைகிறது. மேலும் நாடிகல் சயின்ஸ் பி.இ., படிப்பும் தரப்படுகிறது. இதில் பட்டயப் படிப்பும் சில நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. +2ல் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தைப் படித்திருப்பவர்கள் மட்டுமே இவற்றில் சேர முடியும். நல்ல உடற்தகுதியைப் பெற்றிருப்பதும் முக்கியமான தாகக்கருதப்படுகிறது.
மதுரை அருப்புக்கோட்டை சாலையிலுள்ள ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் நாடிகல் சயின்ஸ் நிறுவனமானது தமிழ்நாட்டில் இப்படிப்பைத் தரும் முன்னணி நிறுவனமாகும்.