Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 23 ஜனவரி, 2013

வளைகுடா வாழ் தென்தமிழக மக்களுக்காக மதுரை -துபாய் விமான சேவை வேண்டும்


வளைகுடா வாழ் தென்தமிழக மக்களின் நலன் கருதி மதுரையிலிருந்து துபாய்க்கு "ஏர் இந்தியா " விமான சேவையை உடனே துவங்கவேண்டும் என்று வலியுறுத்தி துபாய் இ.டி.ஏ.அஸ்கான் குழுமத்தின் ஆதரவோடு துபாயில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது .

ஜனவரி 22 ,2013 அன்று இ.டி.ஏ.அஸ்கான் ஆடிடோரியத்தில் இ.டி.ஏ.அஸ்கான் குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் அல்ஹாஜ் .செய்யது சலாஹுத்தீன் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது .

காயிதே மில்லத் பேரவையின் சார்பில் அதன் கொள்கைபரப்பு செயலாளர் எஸ்.கே.எம்.ஹபிபுல்லா பேசும்போது ,தற்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தை பயன்படுத்தும் திருநெல்வேலி ,தூத்துக்குடி மாவட்ட மக்கள் சந்திக்கும் சிரமங்களை விலாவர்ரியாக எடுத்துக் கூறியதோடு  ,மதுரை விமானநிலையத்திலிருந்து துபாய்க்கு "ஏர் இந்தியா" விமான சேவை மிக அவசியமான அவசரமானது என்பதை வலியுறித்தி பேசினார் .ஈமான் சங்கம் சார்பில் கீழக்கரை ஹமீது யாசீன் , தமிழ் பேரவை  சார்பில் அஹமது மீரான் ,துபாய் தமிழ் சங்கம் சார்பில் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் துபாய் மக்கள் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர் .

மேலும் தாயகத்திலிருந்து வந்திருந்த மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்பாபு , தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் கூட்டமைப்பின் முதுநிலைத் தலைவர் இரத்தின வேலு , டிராவல் ஏஜென்ட் அசோசியேசன் தலைவர் ஜாகிர் ஹுசைன் , செயலாளர் முஸ்தபா ஆகியோர் மதுரையிலிருந்து துபாயிக்கு விமானம் சேவை துவங்கினால் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்து ,உடனடியாக அந்த சேவையை துவங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறித்தி பேசினர் .

இறுதியாக ஏற்புரை நிகழ்த்திய ,ஏர் இந்தியா துபாய் பிரிவின் மேலாளர் ராம்பாபு அவர்கள் , மிக விரைவில் மதுரை - துபாய் விமான சேவை துவங்கும் என்று உத்திரவாதம் தந்தார் .

நிகழ்ச்சிகளை அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொருளாளர் ஹமீது ரகுமான் தொகுத்து வழங்கினார் .

ரவணசமுத்திரம் மீரான் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே கூட்டம் நிறைவுபெற்றது .

தனித்திறன் வளர்ப்பு (SKILL BUILDING)


கல்வி என்பது கல்விக்கூடத்தில் மட்டுமல்ல, கல்வி நிலையத்தையும் கடந்து மாணவப் பருவத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய தேவைகள் அதிகமுள்ளது. இயந்திரத்தனமான வாழ்க்கையில் நம்மை நிதான படுத்திக்கொள்ளவும், செயல் திறனை வளர்த்துக் கொள்ளவும் அவசியமாக இருப்பது தனித்திறன்கள்தான்.

இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும், படித்து நல்ல வேலையை எளிதாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனையே குறிக்கோளாக கொண்டு அதன் பாதையிலே நடை போட முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த மாணவன்/ மாணவி கல்வி பயிலும் காலத்தைக் கடந்து வேலைக்கு சென்ற பின், அந்த துறையில் தொடர்ந்து போட்டிகளை எதிர்கொண்டு, தங்களை நிலை நிறுத்திக்கொள்ள தேவை, தனித்திறனே ஆகும்.

தனித்திறன் என்பது என்ன?
நன்றாக பாடங்களை புரிந்து மனப்பாடம் செய்து தேர்வில் வெற்றி பெறுவதுதான் தனித்திறனா? இல்லை. தனித்திறன் என்பது உலக அறிவை, உடல் நலனை சார்ந்த செயல்களாகும். இவை எப்படி தனித்திறனை வளர்க்கும்?

"சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்" என்ற வாக்கியம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஒரு மாணவன் என்னதான் நன்றாக படித்தாலும், அவன் உடல் நிலை நலமாக இருந்தால்தான் படிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியும். சிறு வயதிலேயே நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் உடல் சோர்வு போன்ற நோய்களால் அவதிப்படுகிறவர்களை நாம் காண்கிறோம். சம்பாதிக்கும் பணத்தை இப்படி நோய்க்கு செலவழித்தால் அந்த வருமானத்தால் என்ன பயன்?

படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கு இருக்கும் ஒரே வேலை படிப்பது மட்டும் தான். ஆனால் வேலைக்கு சென்ற பின் பெரும் நிறுவனத்தின் பெயரை நிலை நாட்ட வேண்டும், குடும்ப பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கடமைகள் வரும் பொழுது அதனை வெறும் படிப்பறிவால் எதிர்கொள்ள முடியுமா?

ஒரு வங்கிக்கு சென்றால் எத்தனை பேருக்கு அதன் செயல்பாடுகள் தெரிகிறது? எத்தனை மாணவர்களுக்கு வேலைக்கான Application -ஐ நிரப்ப தெரிகிறது? இவையெல்லாம் படிப்பறிவினால் மட்டும் தெரிந்து கொள்ள முடியுமா?

வேலைப்பளுவினால் மனம் அழுத்தம் அடையும்பொழுதும், ஒரே மாதிரியான வேலையிலும் நம்மை புதுப்பித்துக் கொள்ளவும் நாம் கற்றுக் கொண்டோமா?

இதனை எல்லாம் அந்த நெருக்கடியான சூழ்நிலையில் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் அமையுமா? ஒரு சிலருக்கு கிடைக்கலாம். ஆனால் வாய்ப்பு கிடைக்காதவர்கள் நிலை மேலும் சிக்கலாகத்தானே அமையும். இதனை எல்லாம் சந்தித்து வரும் பெற்றோர் தான் தங்கள் பிள்ளைகளுக்கு மாணவப் பருவத்திலேயே போதிக்க வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

நல்ல உடல் நலத்துக்கு விளையாட்டும், மனம் புத்துணர்வு பெற இசையும் கலையும், சவால்களை எதிர்கொள்ள நடைமுறை நிகழ்வுகள் போன்ற தனித்திறன்களை மாணவப் பருவம் முதற்கொண்டே கற்றுக்கொண்டால் தானே எதிர்கால வாழ்க்கை வெற்றிகரமானதாக அமையும்.

வேளாண்துறையில் காலி பணியிடம் நிரப்பும் பணி தீவிரம்


வேளாண் துறையில் காலியாகவுள்ள, அதிகாரிகள் மற்றும் ஊழியர் பணியிடங்களை நிரப்பும் பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது. வேளாண்துறையில், ஐந்துக்கும் மேற்பட்ட துணை இயக்குனர் பணியிடங்கள் மட்டுமின்றி, மாவட்ட வேளாண் அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள் என, 400க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், இப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பணிகள், தற்போது, முழுவீச்சில் துவங்கியுள்ளன. 2006-07 முதல், 2012-13ம் ஆண்டுக்களுக்கான, அலுவலக உதவியாளர்கள்,104 பேர், 9ம்தேதி பணிநியமனம் செய்யப்பட்டனர். இவர்கள், வேளாண்துறை கமிஷனர் அலுவலகம், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம், வேளாண் தொழிற்நுட்ப பிரிவு பொறியாளர் அலுவலகம், விதைச்சான்றளிப்பு இயக்குனரகம் உள்ளிட்ட, இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், வேளாண்துறையில் காலியாகவுள்ள, தட்டச்சர் பணியிடங்களில், 13 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, வேளாண்துறை பணிமேலாண்மை பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "அரசு உத்தரவை அடுத்து, காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பும் பணி நடந்து வருகிறது. விரைவில், துணை இயக்குனர் பணியிடங்களும் பூர்த்தி செய்யப்படும். பணியிடங்களில்,புதிய நியமனங்கள் தேவைப்படும் பட்சத்தில், இதுகுறித்த அறிவிப்பை அரசு வெளியிடும்' என்றார்.

சட்டத்திற்கு முரணாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களை நீக்க முடிவு?


கட்டாயக் கல்வி சட்டத்திற்கு முரணாக, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, பணியில் இருந்து நீக்குவதற்கு, கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தை, மத்திய அரசு, 2009ல் கொண்டு வந்தது. இச்சட்டம், 2010, ஏப்ரல் 1ம் தேதி, அமலுக்கு வந்தது. இந்த சட்டத்திற்குள் வரும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த தகுதித் தேர்வு தொடர்பாக, என்.சி.டி.இ., (நேஷனல் கவுன்சில் பார் டீச்சர் எஜூகேஷன்) அறிவிக்கை, 2010, ஆகஸ்ட், 23ல் வெளியானது. இந்த தேதியில் இருந்து, ஆசிரியர் தகுதித்தேர்வு, அமலுக்கு வந்தது. அதன்படி, 2010, ஆகஸ்ட், 23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வுப் பணிகளை துவங்கி, இந்த தேதிக்குப் பின், பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இந்த தேதிக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத தேவையில்லை.

இந்த தேதிக்குப் பின், பணியில் சேர்ந்த ஆசிரியர் அனைவரும், 5 ஆண்டுகளுக்குள், தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும், இல்லையெனில், இவர்கள் தகுதி இல்லாதவர்களாக கருதி, பணி நீக்கம் செய்யலாம் என்றும், கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட தேதிக்குப் பின், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 500க்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், பணியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை பணி நீக்கம் செய்வதற்கு, கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக, ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவித்தன.

அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் அண்ணாமலை கூறுகையில்,  "தொடக்க கல்வித்துறை பள்ளிகளில் சேர்ந்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய, உத்தரவுகள் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முடிவை, தமிழக அரசு உடனே கைவிட வேண்டும்" என்றார்.

தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "ஆர்.டி.ஐ., விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என, மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். பணி நீக்கம் குறித்து, எந்த முடிவும் எடுக்கவில்லை" என, தெரிவித்தனர்.

சென்னை பல்கலையில் மீண்டும் பேராசிரியர்கள் பற்றாக்குறை !

பேராசிரியர் பற்றாக்குறையால், தத்தளிக்கும் சென்னை பல்கலையில், எமிரேட்ஸ் பேராசிரியர் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, புதிய துணைவேந்தருக்கு, பேராசிரியர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

சென்னை பல்கலைக்கழகத்தின், 150ம் ஆண்டு விழாவை போற்றும் வகையில், 2007ல், முன்னாள் துணைவேந்தர் ராமச்சந்திரன், சிறப்பு மாண்பமை - எமிரேட்ஸ், பேராசிரியர்கள் திட்டத்தை கொண்டு வந்தார். ஆசிரியர் பணியில், 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி, ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், மாண்பமை பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய இயற்பியல், வேதியியல், உயிர் இயற்பியல் உள்ளிட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட துறைகளில், எமிரேட்ஸ் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு கவுரவ ஊதியமாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மற்ற ஆசிரியர்களை போலவே, மாணவர்களுக்கு பாடம் எடுத்தல், ஆராய்ச்சி மாணவர்களின் வழிகாட்டியாகவும் செயல்பட்டனர்.

இந்நிலையில், முன்னாள் துணைவேந்தர் திருவாசகம், 2009ல், இத்திட்டத்தை கைவிட்டார். இதுகுறித்து, மாண்பமை பேராசிரியராக பணிபுரிந்த சண்முகம் கூறியதாவது: அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஜப்பான் என, பல நாடுகளில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் அங்கு மதிக்கப்படுகின்றனர்.

அவர்களின் அனுபவத்திற்கும், அறிவுக்கும் மதிப்பு கொடுக்கப்படுகிறது. அவர்கள் விரும்பும் வரை, மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம். ஆராய்ச்சி மாணவர்களின் வழிகாட்டியாகவும் செயல்படலாம். ஆனால், இங்கு, கல்லூரி, பல்கலையில் பணியாற்றும் வரை மட்டுமே, பேராசிரியர்களாக மதிப்படுகின்றனர். அவர்களின் அனுபவத்திற்கும், அறிவுக்கும் மதிப்பு கொடுப்படுவதில்லை.

சென்னை பல்கலையில், ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், கவுரவ சம்பளம் வாங்காமல், இலவசமாக எமிரேட்ஸ் பேராசிரியராக பணிபுரிந்தனர். அண்ணா, பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலையில், எமிரேட்ஸ் பேராசிரியர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, பேராசிரியர் பற்றாக்குறையால், தத்தளிக்கும் சென்னை பல்கலைக்கழகத்தில், மறுபடியும் இத்திட்டத்தை, புதிய துணைவேந்தர் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு சண்முகம் கூறினார்.