Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 23 ஜனவரி, 2013

சென்னை பல்கலையில் மீண்டும் பேராசிரியர்கள் பற்றாக்குறை !

பேராசிரியர் பற்றாக்குறையால், தத்தளிக்கும் சென்னை பல்கலையில், எமிரேட்ஸ் பேராசிரியர் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, புதிய துணைவேந்தருக்கு, பேராசிரியர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

சென்னை பல்கலைக்கழகத்தின், 150ம் ஆண்டு விழாவை போற்றும் வகையில், 2007ல், முன்னாள் துணைவேந்தர் ராமச்சந்திரன், சிறப்பு மாண்பமை - எமிரேட்ஸ், பேராசிரியர்கள் திட்டத்தை கொண்டு வந்தார். ஆசிரியர் பணியில், 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி, ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், மாண்பமை பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய இயற்பியல், வேதியியல், உயிர் இயற்பியல் உள்ளிட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட துறைகளில், எமிரேட்ஸ் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு கவுரவ ஊதியமாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மற்ற ஆசிரியர்களை போலவே, மாணவர்களுக்கு பாடம் எடுத்தல், ஆராய்ச்சி மாணவர்களின் வழிகாட்டியாகவும் செயல்பட்டனர்.

இந்நிலையில், முன்னாள் துணைவேந்தர் திருவாசகம், 2009ல், இத்திட்டத்தை கைவிட்டார். இதுகுறித்து, மாண்பமை பேராசிரியராக பணிபுரிந்த சண்முகம் கூறியதாவது: அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஜப்பான் என, பல நாடுகளில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் அங்கு மதிக்கப்படுகின்றனர்.

அவர்களின் அனுபவத்திற்கும், அறிவுக்கும் மதிப்பு கொடுக்கப்படுகிறது. அவர்கள் விரும்பும் வரை, மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம். ஆராய்ச்சி மாணவர்களின் வழிகாட்டியாகவும் செயல்படலாம். ஆனால், இங்கு, கல்லூரி, பல்கலையில் பணியாற்றும் வரை மட்டுமே, பேராசிரியர்களாக மதிப்படுகின்றனர். அவர்களின் அனுபவத்திற்கும், அறிவுக்கும் மதிப்பு கொடுப்படுவதில்லை.

சென்னை பல்கலையில், ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், கவுரவ சம்பளம் வாங்காமல், இலவசமாக எமிரேட்ஸ் பேராசிரியராக பணிபுரிந்தனர். அண்ணா, பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலையில், எமிரேட்ஸ் பேராசிரியர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, பேராசிரியர் பற்றாக்குறையால், தத்தளிக்கும் சென்னை பல்கலைக்கழகத்தில், மறுபடியும் இத்திட்டத்தை, புதிய துணைவேந்தர் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு சண்முகம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக