பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், ஒரு லட்சம் ஊழியர்களுக்கு, விருப்ப ஓய்வு அளிக்க திட்டமிட்டுள்ளது.பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., வட்டாரங்கள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. நிறுவனத்தின் வருவாயில், 48 சதவீதத்தை, ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவிட வேண்டிய நிலை உள்ளது. இது, அந்த நிறுவனத்துக்கு, பெரும் சுமையாக உள்ளது.
எனவே, இந்த சுமையை குறைக்கும் வகையில், விருப்ப ஓய்வு திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், ஒரு லட்சம் ஊழியர்கள், தேவைக்கு அதிகமாக பணியாற்றி வருகின்றனர்.எனவே, இந்த கூடுதல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பதன் மூலம், இவர்களுக்கான சம்பளத் தொகை, மீதமாகும் என, அதிகாரிகள் மதிப்பிட்டு உள்ளனர். ஒரு லட்சம் பேர், விருப்ப ஓய்வு பெற்றால், தற்போதுள்ள சம்பளச் சுமையில், 15 சதவீதம் வரை குறையும்.
இதன் பின்,நிறுவனத்தை, சுமுகமான முறையில் செயல்படுத்த முடியும். அளவுக்கு அதிகமான ஊழியர்களின் எண்ணிக்கையைத் தவிர, மேலும் ஒரு பிரச்னையும் உள்ளது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், தற்போது பணியாற்றும் ஊழியர்களின் சராசரி வயது, 50 ஆக உள்ளது. இதில், குறிப்பிட்ட சிலருக்கு, வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளை நிறைவேற்றும் அளவுக்கு, போதிய திறமை இல்லை.இவ்வாறு, பி.எஸ்.என்.எல்., வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக