Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 21 ஜனவரி, 2013

நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை


அனுபவ் சோனி என்ற இளைஞர், பெங்களூரில் செயல்படும், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். கடந்த வியாழனன்று, கார்ல்டன் டவர் என்ற இடத்திலிருந்து, ஒயிட்பீல்ட் என்ற இடத்திற்கு, மாநகர பஸ்சில் பயணம் செய்தார்.பழைய விமான நிலைய சாலையில், பஸ்சில் வரும் போது, நான்கைந்து பேர், அனுபவை தாக்கி, அவரின் மொபைல் போன் மற்றும் பணம் வைத்திருந்த பர்சை பறித்துச் சென்றனர்.

பணத்தை இழந்த அந்த இளைஞர், புகார் கொடுக்க, பழைய விமான நிலைய சாலை, போலீஸ் நிலையம் சென்றார். "சம்பவம் நடந்தது, எங்கள் எல்லையில் இல்லை' என, தெரிவித்த போலீசார், எச்.ஏ.எல்., போலீசில் புகார் கூறும்படி தெரிவித்தனர்.எச்.ஏ.எல்., போலீசாரும் புகாரை பெற்றுக் கொள்ளவில்லை. "சம்பவம் நடந்தது, பஸ்சில். கார்ல்டன் டவர் போலீசில் போய் புகார் கொடுங்கள்' என்றனர். இதனால், விரக்தி அடைந்த அனுபவ், வீட்டுக்கு திரும்பினார்.

மொபைல் போனையும் அந்த நபர்கள் பறித்து சென்றதால், மாற்று, "சிம்' கார்டு வாங்க, மொபைல் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, போலீசில் புகார் செய்த நகல் கேட்டனர். மீண்டும் மறுநாள் போலீஸ் நிலையம் சென்ற அனுபவ், தன் வழக்கை பதிவு செய்யுமாறு கேட்டார்.

மறுத்த போலீசார், "போன் தொலைந்தது என, புகார் எழுதித் தந்தால் வழக்கை பதிவு செய்கிறோம்' என்றனர். "கொள்ளையர்கள் பறித்தனர் என, புகார் கொடுத்தால், ஏற்க முடியாது' என கூறியதால், வேறு வழியின்றி, "மொபைல் போன் தொலைந்து விட்டது' என, புகார் கொடுத்து, புகார் நகலை பெற்று, அதை மொபைல் போன் நிறுவனத்திடம் கொடுத்தார்.
பணம், மொபைல் போனை கொள்ளையர்களிடம் பறி கொடுத்ததை விட, போலீசார் நடந்து கொண்ட விதத்தால், மிகுந்த மன வேதனை அடைந்த அனுபவ், நடந்த சம்பவங்களை, பெங்களூரு நகர போலீசாரின், "பேஸ்புக்' இணையதளத்தில் எழுதினார்.

சனிக்கிழமை அவரின் மொபைலை தொடர்பு கொண்ட, பழைய விமான நிலைய சாலை மற்றும் எச்.ஏ.எல்., போலீசார், நடந்த சம்பவங்களுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டதுடன், குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் உறுதி அளித்தனர். மேலும், போலீஸ் அதிகாரி ஒருவர், அனுபவிடம் மன்னிப்பும் கேட்டார்.நெகிழ்ந்து போன அனுபவ் சோனி, மனிதனின் முகத்திற்கு இருக்கும் மதிப்பை விட, "பேஸ்புக்' இணையதளத்திற்கு இருக்கும் மரியாதையை எண்ணி வியந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக