மதுரையிலிருந்து சிங்கப்பூர், துபாய்க்கு விமான சேவை வழங்க உத்தரவிடக்கோரி தாக்கலான வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை கீழக்குயில்குடி வக்கீல் விஜயகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: ராயல் ஏர்போர்ஸ் சார்பில், இரண்டாம் உலகப்போரின்போது 1942 ல் மதுரையில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. பயணிகள் போக்குவரத்து 1956 ல் துவங்கியது. போயிங் (737) விமானம் 1970 ல் இயக்கப்பட்டது.
தற்போது, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மதுரை, திண்டுக்கல் உட்பட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னை, பெங்கரூரு வேலைக்குச் செல்கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், துபாய்க்கு பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய செல்கின்றனர்.மதுரையிலிருந்து சர்வதேச விமானங்கள் இயக்க போதிய வசதிகள் இல்லை என, சிவில் விமான போக்குவரத்துத்துறை முதலில் தெரிவித்தது. ஆனால், மதுரை விமான நிலையத்தில் 130 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முனையம் அமைத்தனர். முனையம் 2010 நவம்பரில் செயல்பட துவங்கியது. அப்போது, மதுரையிலிருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என்றனர். மிகின் லங்கா விமான சேவை 2012 டிசம்பரில் துவங்கியது. குடியேற்றம் (இமிகிரேஷன்), சுங்கப்பிரிவு அலுவலகங்கள் செயல்பட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோவையில் சிங்கப்பூர், துபாய் விமான சேவையை ஜனவரியில் 10 ஆயிரத்து 134 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். மதுரை விமான நிலையம் ஜனவரியில் 7171 பயணிகளை கையாண்டுள்ளது. மதுரை அருகே கொடைக்கானல், மூணாறு உள்ளதால் சுற்றுலா வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. மதுரையிலிருந்து 3 மெட்ரோ நகரங்களுக்கு விமான சேவை உள்ளது.
மதுரையிலிருந்து சிங்கப்பூர், துபாய்க்கு விமானங்கள் இயக்க வலியுறுத்தி, சிவில் விமான போக்குவரத்துத்துறை செயலாளருக்கு மனு செய்தேன். மனு நிராகரிக்கப்பட்டது. மீண்டும் ஏப்.,9 ல் வலியுறுத்தினேன். விமான நிலைய ஆணைய தலைவருக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வந்தது. மதுரையிலிருந்து சிங்கப்பூர், துபாய்க்கு விமான சேவை வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் கொண்ட பெஞ்ச் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் கே.பி.எஸ்.பழனிவேல்ராஜன் ஆஜரானார். சிவில் விமான போக்குவரத்துத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்கள் ஒத்திவைத்தனர்.