குறைந்தபட்ச நில அளவு இல்லாததன் காரணமாக, 1,500 பள்ளிகள், தொடர் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்த விவகாரத்தில், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கும் முன், ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது.
இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளும், அரசின் அங்கீகாரத்துடன் இயங்க வேண்டும். அங்கீகாரம் இல்லாமல், பள்ளிகள் இயங்கக் கூடாது. அப்படி இயங்கினால், அந்தப் பள்ளிகளை மூட வேண்டும் என, சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச நில அளவு இல்லாததன் காரணமாக, 1,500 பள்ளிகள் வரை, மூடும் அபாயத்தில் உள்ளன. ஊராட்சி பகுதியாக இருந்தால், 3 ஏக்கர்; நகர பஞ்சாயத்து பகுதி எனில், 1 ஏக்கர்; நகராட்சி பகுதியாக இருந்தால், 10 கிரவுண்டு; மாவட்ட தலைநகராக இருந்தால், 8 கிரவுண்டு; மாநகராட்சி பகுதியாக இருந்தால், 6 கிரவுண்டு இடமும், பள்ளிக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இந்த நில அளவு, 20, 25 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய பள்ளிகளில் இல்லை. தற்போது துவங்கப்படும் பள்ளிகள், மேற்கண்ட குறைந்தபட்ச நில பரப்புடன் விண்ணப்பிக்கின்றன. பழைய பள்ளிகளில், குறைந்தபட்ச நில அளவு இல்லாததால், தொடர் அங்கீகாரம் வழங்க, சம்பந்தப்பட்ட துறைகள் மறுத்து விட்டன.
இதன் காரணமாக, மெட்ரிகுலேஷன் இயக்குனரக துறையில், 1,000 பள்ளிகளும், பள்ளிக்கல்வித் துறையின் கீழ், 120 பள்ளிகளும், தொடக்க கல்வித் துறையின் கீழ், 500 நர்சரி, பிரைமரி மற்றும் துவக்க, நடுநிலைப் பள்ளிகளும், அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக கூறப்படுகிறது.
ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்குள், இந்த பிரச்னையில், ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில், தமிழக அரசு உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் செயலர் இளங்கோவன் கூறியதாவது: நில அளவு காரணமாகத் தான், அங்கீகாரம் பெற முடியாத நிலை உள்ளது. இதனால், பள்ளி வாகனங்களுக்கு, பெர்மிட்டும் வாங்க முடியவில்லை. அங்கீகாரம் இல்லாததால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
புதிய விதிமுறைகளை பூர்த்தி செய்ய, 6 ஆண்டுகள், தமிழக அரசு கால அவகாசம் அளித்தது. இருந்த போதும், நில மதிப்பு, 20 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், பள்ளியை ஒட்டி, நிலம் வாங்க முடியாத நிலை உள்ளது.
பள்ளிக்கு, அருகாமையில், இடம் வாங்கினால், அதை ஏற்பது இல்லை. பள்ளிக்கு பக்கத்திலேயே வாங்க வேண்டும் என, கூறுகின்றனர். நடைமுறையில், இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதை, அதிகாரிகளும், அரசும் உணர வேண்டும்.
எனவே, பள்ளி இயங்கும் இடத்திற்கு ஏற்ப, குறிப்பிட்ட மாணவ, மாணவியர் படிக்கும் வகையில், அரசு அனுமதித்து, உத்தரவு வழங்க வேண்டும். ஒரு மாணவருக்கு, 10 சதுர அடி வேண்டும் என, அரசு கூறுகிறது. 6 சதுர அடி போதும் என, நாங்கள் கூறுகிறோம்.
எனவே 20 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட பள்ளிகள், புதிய விதிமுறைகளை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்னைகளை உணர்ந்து, அரசு சுமூகமான ஒரு முடிவை எடுத்து, வரும் கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன் அறிவிக்க வேண்டும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
மெட்ரிக் பள்ளி இயக்குனரக வட்டாரம் கூறுகையில், "கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் இயங்கக் கூடாது. இந்த பிரச்னையை, அரசுக்கு சுட்டிக்காட்டி உள்ளோம். ஜூன் மாதத்திற்குள், தமிழக அரசு, ஒரு முடிவை எடுத்து அறிவிக்கும் என, எதிர்பார்க்கிறோம்," என, தெரிவித்தனர்.