சென்னையில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தெற்கு மண்டலம் சார்பில், ஆங்கில மொழி மற்றும் அதனை புரிந்துகொள்ளுதல் தொடர்பான வினா வங்கி கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை மத்திய இணையமைச்சர் நாராயணசாமி துவக்கி வைத்து பேசியதாவது:-
நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசுத்துறை நிறுவனங்களில் 2 கோடிக்கும் அதிகமாக காலிப் பணியிடங்கள் உள்ளன. அவை விரைவில் நிரப்பப்படும். மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் 55 சதவீதம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்கின்றனர். இதனை முற்றிலும் ஆன்லைன் ஆக்குவதற்கு படிப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் வெப்சைட்டில் விடைகளை வெளியிடவும் ஏற்பாடு செய்து வருகிறோம்.
தற்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள் உள்ளது. இதனை பிராந்திய மொழிகளிலும் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் நாடு முழுவதிலும் உள்ள கிராமப்புறங்களில் உள்ள திறமையான பணியாளர்களை பெற முடியும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் சில பேப்பர்களை பிராந்திய மொழிகளில் எழுத அனுமதிக்கிறோம். இங்கு மட்டும் ஏன் பெறக்கூடாது? கொள்கை அளவில் இதனை ஒப்புக்கொண்டுள்ளோம். இதன்மூலம் கிராமப்புற விண்ணப்பதாரர்களுக்கு நன்மை ஏற்படும்.
அடுத்த ஆண்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.