காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில், 10ம் வகுப்பு முடிக்கும் மாணவியர், தொழிற்சாலை பணிக்கு சென்று விடுவதால், மேற்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது.
அரசின் நோக்கம்
இங்கு 1ம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும், ஆதரவற்ற மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த காப்பகம், கடந்த 2005ம் ஆண்டு, அரசு கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. 300 மாணவியர் தங்கி படிக்க வேண்டிய காப்பகத்தில், 106 மாண வியர் மட்டும் படிக்கின்றனர்.
பெற்றோர், பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் காப்பகம் ஏற்படுத்தப்பட்டது. இங்கு படிக்கும் மாணவிக்கு, பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடை, உணவு, சோப்பு, போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.
"காசு' பார்க்கும் மாணவியர்
காஞ்சிபுரம் குழந்தைகள் காப்பகத்தில், திருவண்ணாமலை, சென்னை, சேலம், மாவட்டங்களில் இருந்தும், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மாணவிகளும் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், ஒன்பதாம் வகுப்பு முதல், கல்லூரி வரை, ஆண்டுத் தேர்வை 40 மாணவியர் எழுதுகின்றனர்.
தேர்வு முடிந்த பிறகு, ஒன்றரை மாதம் விடுமுறைக்காக வீடுகளுக்கு செல்கின்றனர். அப்போது அருகில் உள்ள தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் வேலைக்கு சென்று, மாதம் 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர்.அதன்பிறகு படிக்க விரும்புவதில்லை. படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, பணியை தொடர்கின்றனர்.
காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், மாணவியரின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தும், அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் முயற்சி தோல்வி அடைகிறது. இதனால், அரசு திட்டம் வீணாகி வருகிறது.
இது குறித்து அரசு காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறுகையில், ""வயது வந்த மாணவியர் குறிப்பிட்ட வகுப்பு வரைதான், காப்பகத்தில் தங்கி படிக்கின்றனர்.
ஆண்டுத் தேர்வின் போது, தொழிற்சாலைகளில் பணிக்கு செல்லும் மாணவியர், மாதம்தோறும் சம்பளம் பெறுவதால், திருமணத்திற்கு தயாராகி விடுகின்றனர். இதை தடுத்து நிறுத்த முடியாத நிலை ஏற்படுகிறது,'' என்றார்.