உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகளின் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது. தஞ்சாவூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டம் நடந்தது. நாகையில் விவசாயிகளின் சாலை மறியலால் பதட்டம் நிலவுகிறது. திருவாரூரிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் டெல்டா மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டது. சுப்ரீம் கோர்ட் காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டும் கர்நாடகா மறுத்து விட்டது. இதனையடுத்து பயிர் கருகியதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். இதனால் மனமுடைந்த 10 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.13,682 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வறட்சி குறித்து ஆராய நிதியமைச்சர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகளின் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு தர வேண்டும். டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு உரிய முடிவு அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது.
திருவாரூர்: திருவாரூரில் கடந்த இரண்டு நாட்களாக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் இன்றும் மூன்றாவது நாளாக தொடர்ந்தது. மதியம் 12.45 மணியளவில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை விலக்கி கொண்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் போராட்டம் இரண்டு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு சாலை போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு தே.மு.தி.க.,வினர் ஆதரவு கொடுத்துள்ளனர். போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு சால்வை அணிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக தஞ்சாவூர் மன்னார்குடி இடையே சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை மறியல் போராட்டம் தொடர்கிறது.
தஞ்சாவூர்: தஞ்சாவூரிலும் விவசாயிகளின் முற்றுகை போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது. விவசாயிகள் போராட்ட இடத்தில் உணவு சமைத்தும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர். அரசு உரிய முடிவு அறிவிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். தஞ்சாவூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டம் நடந்தது. காவிரி இறுதித்தீர்ப்பை அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும். காவிரி நீரை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:நாகையிலும் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம், இன்று மூன்றாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளின் முற்றுகை போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பாலகிருஷணன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: விவசாயிகள் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாயும், பயிர் காப்பீடாக 8,682 என மொத்தம் 13, 682 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த தொகை போதாது. நாங்கள் கூடுதலாக கேட்கிறோம். வறட்சி குறித்து ஆராய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்மட்டக்குழுவுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. உயர்மட்டக்குழு தமிழகம் முழுவதும் வறட்சி குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்கிறோம். அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் முறையிட்டால் தலைமைச்செயலகத்திற்கு அனுப்பியுள்ளோம். அங்கிருந்து தகவல் வந்த பிறகு தான் எதுவும் கூற முடியும். தலைமைச்செயலகம் சென்னையில் உள்ளதா அல்லது கொடநாட்டில் உள்ளதா என சந்தேகம் உள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகளின் பிரச்னையை புரிந்து கொள்ளவில்லை. இதுவரை விவசாயிகள் அமைதியாக சட்டம் ஒழுங்கு கெடாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மதியத்திற்குள் உரிய பதிலை அறிவிக்காவிட்டால் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். இதில் எந்த பிரச்னை ஏற்பட்டாலும் இதற்கு தமிழக அரசே பொறுப்பு என கூறினார்.
சாலை மறியலால் பதட்டம்:நாகை மாவட்டத்தில், மாநில விவசாய சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் நாகை வெளிப்பாளையம் அருகே பேருந்து நிலையத்திற்கு அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 4 புறங்களிலும் அவர்கள் அமர்ந்துள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. என்ன செய்வது என தெரியாமல் போலீசார் திகைத்து வருகின்றனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக