மாநில கல்லூரியில் சமீபத்தில் நடந்த அரிவாள் வெட்டு மோதலை அடுத்து, அதற்கு காரணமான, மாணவர் பேரவை தேர்தலை ரத்து செய்யும்படி, உயர் கல்வி துறைக்கு கல்லூரி நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.
மாநில கல்லூரியில், சமீபத்தில், மாணவர்கள் அரிவாளால் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலின் பின்னணியில், சமீபத்தில் நடந்த மாணவர் பேரவை தேர்தல், பெரும் பங்கு வகித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பஸ் ரூட் அடிப்படையில் மாணவர்களிடையே ஏற்படும் பகையுணர்ச்சி, தேர்தலிலும் எதிரொலித்து, அரிவாள் வெட்டில் வந்து முடிந்துள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற மோதல்களை தடுப்பது குறித்து ஆலோசிக்க, பேராசிரியர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. கல்லூரி கல்வி இயக்குனர் தலைமையில், மாநில கல்லூரி முதல்வருடன் நேற்று அந்த குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில், மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டறிந்து, அவர்களை கண்காணிக்க பேராசிரியர்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும். மோதல்கள் தேர்தலை மையப்படுத்தி நடப்பதால், மாணவர் பேரவை தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும்.
வன்முறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு, கல்வி உதவி தொகை ரத்து, பஸ் பாஸ் ரத்து, கல்லூரியிலிருந்து நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் முடிவு செய்யப்பட்டன. இந்த பரிந்துரைகள், உயர்கல்வி துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உயர்கல்வி துறை அதன் மீது, விரைவில் நடவடிக்கை எடுக்கும் என, தெரிகிறது.
மாணவர்களிடையே ஏற்படும் மோதலை தவிர்க்க முக்கிய வழித்தடங்களில், போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் என, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, "29 ஏ" பஸ் செல்லும் ஒவ்வொரு நிறுத்தத்திலும், போக்குவரத்து போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனால், எப்போதும் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி, மேற்கூரையில் ஏறியபடி பயணிக்கும் மாணவர்கள், பஸ்சினுள் அமைதியாக சென்றனர். ஒவ்வொரு வழித்தடத்திலும், போக்குவரத்து போலீசார், மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக