Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

மீண்டும் துணை ஜனாதிபதியாக ஹமீது முஹம்மது அன்சாரி


தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும்  ஹமீது முஹம்மது  அன்சாரியின் பதவிக் காலம் வருகிற 10-ந்தேதியோடு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது.
காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக அமீது அன்சாரி மீண்டும் களமிறங்கினார். அவரை எதிர்த்து பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த்சிங் போட்டிட்டார். பாராளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிக்கக்கூடிய இத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள 63-ம் எண் அறையில் செய்யப்பட்டிருந்தன.
காலை 10 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. 

மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே அன்சாரி முன்னணியில் இருந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் அன்சாரி 490 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரைத் எதிர்த்து போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங் 238 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 8 வாக்குகள் செல்லாதவையாகும்.
இந்த வெற்றியின் மூலம்  ஹமீது முஹம்மது அன்சாரி 2-வது முறையாக துணை ஜனாதிபதியாகிறார். இதற்கு முன் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இரண்டு முறை துணை ஜனாதிபதியாக இருந்துள்ளார்.
வெற்றி பெற்ற அன்சாரி 14-வது துணை ஜனாதிபதியாக 11-ம் தேதி பதவியேற்கிறார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். துணை ஜனாதிபதி பதவியில் அன்சாரி 2017-ம் ஆண்டு வரை நீடிப்பார்.

 நாட்டின் குடியரசு துணைத் தலைவராக 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹமீத் அன்சாரி சிறந்த கல்வியாளராக- எழுத்தாளராக பன்முகத் திறமை கொண்டவர்..
உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசிப்பூர்தான் சொந்த ஊர். ஆனால் இவர் பிறந்தது கொல்கத்தாவில். 1937ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி பிறந்த ஹன்சாரியின் மாமா முக்தார் அகமத் அன்சாரி காங்கிரஸ் கட்சியில் 1927-ம் ஆண்டு தலைவராக இருந்தார்.
1961ல் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்தார். ஆஸ்திரேலியாவிற்கான இந்திய தூதர், ஐக்கிய அரபு நாடுகள், ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கான இந்திய தூதர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் அன்சாரி. ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்த பிரதிநிதியாகவும் இருந்தார் அன்சாரி.
1984-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார்..மேலும் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 2000-ம் ஆண்டு மே மாதம் முதல் 2002 மார்ச் வரை துணை வேந்தராகப் பணியாற்றினார். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியாமில்லா இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றினார். தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராகவும் இருந்தவர் அன்சாரி.
மேற்காசிய விவகாரங்களில் மிகுந்த ஆர்வமுடைய அன்சாரி, பாலஸ்தீனம் உட்பட பல்வேறு மேற்காசிய நாடுகளின் வெளியுறவு விவகாரங்கள் குறித்துப் புத்தகங்கள் எழுதியுள்ளார். ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட முன்வரைவு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது அதன் மீதான விவாதத்தை நள்ளிரவு வரை நீட்டித்து, பின், வாக்கெடுப்பு நடத்தாமலேயே அவையைக் கால வரையின்றி ஒத்திவைத்தார் அன்சாரி. இதற்காகத்தான் ஹமீத் அன்சாரியை மீண்டும் குடியரசு துணைத் தலைவராக்கியிருப்பதாக கூறப்படுவதும் உண்டு.

நெல்லையில் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்

நெல்லை மாநகரில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆழ்குழாய் கிணறுகளும் வறண்டு வருவதால் தண்ணீருக்காக மக்கள் தவிக்கின்றனர். தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் பருவ மழை தொடர்ந்து பொய்த்து வருகிறது. மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்யும் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டம் குறைந்து விட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பாபநாசம் அணையில் 80 அடி முதல் 90 அடி வரை தண்ணீர் நிரம்பி காணப்படும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டதால் அணையில் 35 அடி தண்ணீரே உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்ய வேண்டியிருப்பதால் முறை வைத்தே தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நெல்லை மாநகருக்கு குடிநீர் விநியோகிக்கும் சுத்தமல்லி, மணப்படைவீடு, திருமலைக்கொழுந்துபுரம்   நீரேற்று நிலையங்களுக்காக ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளுக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது. இதனால் நெல்லையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகள் முழுமையாக நிரம்புவதில்லை. குறிப்பாக என்ஜிஓ காலனி, பெருமாள்புரம், தியாகராஜநகர், கேடிசிநகர் போன்ற பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் பாதியளவு தண்ணீர்கூட நிரம்புவதில்லை. மேற்கண்ட பகுதிகளில் 4 நாள் 5 நாளைக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, பரணிநகர், கொக்கிரகுளம் உள்ளிட்ட ஆற்றங்கரையோரப்பகுதி மக்களும் குடிநீருக்காக மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் பிரச்னையை தீர்க்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து கவுன்சிலர் ஜோசப் கூறியதாவது: என்ஜிஓ காலனி பகுதியில் 5 நாளைக்கு ஒரு முறையே குடிநீர் வழங்கப்படுகிறது. லாரி தண்ணீரும் சரியாக கிடைக்கவில்லை. நெல்லை மாநகர பகுதியை சுற்றி முன்பு வயல்வெளிகள் அதிகம் இருந்தன. இதனால் நிலத்தடிநீர் போதிய அளவு கிடைத்தது. தற்போது வயல்வெளிகள் எல்லாம் கட்டிடங்களாக மாறிவிட்டன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்குழாய் கிணறுகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டன. குறிப்பாக என்ஜிஓ காலனி, பெருமாள்புரம் பகுதிகளில் 300 அடி ஆழம்வரை ஆழ்குழாய் கிணறு அமைத்தாலும் தண்ணீர் கிடைக்கவில்லை.
நிலத்தடி நீர் குறைந்து வருவதால் எதிர்காலத்தில் தண்ணீர் உப்புத்தன்மையாக மாறவும் வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாநகராட்சி உரிய திட்டங்களை தீட்டினால்தான் குடிநீர் பஞ்சத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.