நெல்லை மாவட்டத்தில் பருவ மழை தொடர்ந்து பொய்த்து வருகிறது. மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்யும் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டம் குறைந்து விட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பாபநாசம் அணையில் 80 அடி முதல் 90 அடி வரை தண்ணீர் நிரம்பி காணப்படும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டதால் அணையில் 35 அடி தண்ணீரே உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்ய வேண்டியிருப்பதால் முறை வைத்தே தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நெல்லை மாநகருக்கு குடிநீர் விநியோகிக்கும் சுத்தமல்லி, மணப்படைவீடு, திருமலைக்கொழுந்துபுரம் நீரேற்று நிலையங்களுக்காக ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளுக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது. இதனால் நெல்லையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகள் முழுமையாக நிரம்புவதில்லை. குறிப்பாக என்ஜிஓ காலனி, பெருமாள்புரம், தியாகராஜநகர், கேடிசிநகர் போன்ற பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் பாதியளவு தண்ணீர்கூட நிரம்புவதில்லை. மேற்கண்ட பகுதிகளில் 4 நாள் 5 நாளைக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, பரணிநகர், கொக்கிரகுளம் உள்ளிட்ட ஆற்றங்கரையோரப்பகுதி மக்களும் குடிநீருக்காக மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் பிரச்னையை தீர்க்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து கவுன்சிலர் ஜோசப் கூறியதாவது: என்ஜிஓ காலனி பகுதியில் 5 நாளைக்கு ஒரு முறையே குடிநீர் வழங்கப்படுகிறது. லாரி தண்ணீரும் சரியாக கிடைக்கவில்லை. நெல்லை மாநகர பகுதியை சுற்றி முன்பு வயல்வெளிகள் அதிகம் இருந்தன. இதனால் நிலத்தடிநீர் போதிய அளவு கிடைத்தது. தற்போது வயல்வெளிகள் எல்லாம் கட்டிடங்களாக மாறிவிட்டன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்குழாய் கிணறுகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டன. குறிப்பாக என்ஜிஓ காலனி, பெருமாள்புரம் பகுதிகளில் 300 அடி ஆழம்வரை ஆழ்குழாய் கிணறு அமைத்தாலும் தண்ணீர் கிடைக்கவில்லை.
நிலத்தடி நீர் குறைந்து வருவதால் எதிர்காலத்தில் தண்ணீர் உப்புத்தன்மையாக மாறவும் வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாநகராட்சி உரிய திட்டங்களை தீட்டினால்தான் குடிநீர் பஞ்சத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக