Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 29 செப்டம்பர், 2012

இந்தியாவில் ஆண்டு தோறும் 15 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்


இந்தியாவில் ஆண்டு தோறும் சுமார் 15 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று சென்னை அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி கேன்சர் ஆஸ்பத்திரி சீனியர் கன்சல்டன்ட் ரேடியேஷன் ஆன்கோலஜிஸ்ட் டாக்டர் மகாதேவ் கூறினார்.

இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் பேருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக வயிறு, வாய், மார்பகம், கர்ப்பப்பை, கணையம், மூளை, தண்டுவடம் உட்பட பல்வேறு உறுப்புகளை இந்த நோய் தாக்குகிறது. புற்று நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து உரிய சிசிக்சைகளை மேற்கொண்டால் குணப்படுத்தலாம். ஆனால் பெரும்பாலான நோயாளிகள் கடைசி கட்டத்திலேயே கேன்சர் நோய் சிகிச்சைக்கு வருவதால் இதனை குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. ஒவ்வொரு புற்றுநோய் வகைக்கும் வித்தியாசமான அறிகுறிகள் தென்படும். சில நோய் ஆரம்ப கட்டத்தில் தெரியாது. நோயின் பாதிப்பு தீவிரமடைந்ததும் வெளியே தெரிய வரும். ஆரம்ப காலங்களில் புற்று நோய்க்கு ஆபரேஷன் மட்டுமே சிகிச்சை முறையாக இருந்தது. ஆனால் தற்போது நவீன சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ரேடியேஷன் சிகிச்சையில் "சைபர் நைப்' என்பது நவீன சிகிச்சை முறையாகும். பாதித்த உறுப்பின் மிகவும் சிறிய இடத்திலும் சரியான முறையில் சிகிச்சை அளிக்க இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது. ஆபரேஷன் செய்ய முடியாத இடங்களில் இச்சிகிச்சை முறை பயன்படுகிறது. தற்போது நவீன சிகிச்சை முறைகளின் மூலம் 70-80 சதவீதம் நோயாளிகள் இந்நோயில் இருந்து காப்பாற்றப்படுகின்றனர்.

 தமிழகத்தை பொறுத்தவரை சென்னை உட்பட பல்வேறு பெரு நகரங்களில் வயிறு புற்றுநோய் பிரச்னையில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. புற்று நோய் ஏற்படாமல் தடுக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவ கருத்தரங்குகள், தூத்துக்குடியில் விரைவில் இம்மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விறகு மூலம் மின்சாரம் தயாரிப்பு "யூனிட்' மூடல்


மதுரை மாவட்டம் பேரையூரில் ரூ.7 லட்சத்தில் அமைக்கப்பட்ட, விறகு மூலம் மின்சாரம் தயாரிக்கும் "யூனிட்' மூன்றாண்டுகளாக மூடிக்கிடக்கிறது.பேரையூர் பேரூராட்சிக்கு மின்தேவையை பூர்த்தி செய்ய, சமன்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சத்தில் 2006ல் இந்த "யூனிட்' அமைக்கப்பட்டது. சீமை கருவேல் மரக் குச்சிகளை காய வைத்து, துண்டுகளாக வெட்டி, அவற்றை எரிப்பதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலகம், குடிநீர் வினியோகத்துக்கான மோட்டார் இயக்கம், பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள விளக்குகள், கடைகளுக்கு தேவையான மின்சாரம், இந்த யூனிட்டில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த யூனிட் துவங்கி சில மாதங்கள் மட்டும் செயல்பட்டது.

இதை இயக்கும் ஆப்பரேட்டர்கள் பற்றாக்குறை காரணமாக காலப்போக்கில் யாரும் இந்த யூனிட்டை கண்டுகொள்ளவில்லை. மூன்றாண்டுகளாக மூடப்பட்டு, தயாரிப்பு இயந்திரங்கள் துருபிடித்து உள்ளன. தற்போது நிலவும் மின்தட்டுப்பாட்டில் இந்த யூனிட்டை செயல்படுத்தினால், பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோக மோட்டாருக்கு மின்சாரம் கிடைக்கும். மின் தடையால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு வராது. பேரூராட்சி நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை. ரூ.பல லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் வீணடிக்கப்படுகின்றன.
பேரூராட்சி நிர்வாக அலுவலர் கலையரசி கூறுகையில், ""விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாள் ஒன்றுக்கு எத்தனை மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம் என்ற விவரம் எனக்கு தெரியவில்லை,'' என்றார்.மின் தட்டுபாடு நேரத்தில் இத்தகைய யூனிட்டுகளை பேரூராட்சி நிர்வாகங்கள் இயக்கி, மின் தேவையை பூர்த்தி செய்யலாம்.