சிவகங்கை திருப்பாச்சேத்தி செந்தில்குமார் தாக்கல் செய்த மனு: மதுரை காமராஜ் பல்கலை கல்லூரியில் பி.சி.ஏ.,படிக்கிறேன். மாணவர்களுக்கு இலவச "லேப்டாப்' வழங்க தமிழக அரசு 2011 ஜூன் 3 ல் உத்தரவிட்டது. இதன்படி, 2011-12 ல் எங்கள் கல்லூரி மாணவர்களுக்கு "லேப்டாப்' வழங்கவில்லை. கலெக்டரிடம் மனு அளித்தோம். "லேப்டாப்'கள் வழங்க, மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.
நீதிபதி கே.கே.சசிதரன் முன், விசாரணைக்கு மனு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், அரசு வக்கீல் என்.எஸ்.கார்த்திகேயன், மனுதாரர் வக்கீல் ஜின்னா ஆஜராயினர்.
அரசு வக்கீல்கள்: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளில் "லேப்டாப்'கள் வழங்கும் திட்டம், படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது. பல்கலை கல்லூரி மணவர்கள் இத்திட்டத்தில் இடம் பெறவில்லை. இதுபற்றி தற்போது அரசு ஆலோசிக்கிறது. பல்கலை கல்லூரி மாணவர்களின் விபரங்களை அரசு கோரியுள்ளது. முடிவெடுக்க, அரசுக்கு அவகாசம் தேவை, என்றனர்.
நீதிபதி: மாணவர்களுக்கு உதவ, "லேப்டாப்' திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. அரசு உத்தரவுப்படி, உதவி பெறும் கல்லூரிகளில் படிப்படியாக வழங்கப்படுகிறது. திட்டத்தில், பல்கலை கல்லூரிகளை சேர்க்கவில்லை. திட்டத்தில் சேர்க்க, மதுரை கலெக்டர் பரிந்துரைத்துள்ளார். அரசும் விபரங்கள் கோரியுள்ளது. அவர்களுக்கும் "லேப்டாப்' வழங்க, அரசு பரிசீலித்து வருகிறது. பல்கலை கல்லூரி மாணவர்களுக்கு வழங்க முடியாது என கூறவில்லை. இதில், முடிவெடுக்க அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். ஏனெனில், இது நிதி சம்பந்தப்பட்ட முடிவு.
ஏற்கனவே, அண்ணா பல்கலை மற்றும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பல்கலை கல்லூரி மாணவர்களுக்கு "லேப்டாப்' வழங்குவது பற்றி உயர்கல்வித்துறை செயலாளர், சிறப்புத்திட்ட அமலாக்கத்துறை செயலாளர் ஏப்.,30 க்குள் முடிவெடுக்க வேண்டும். மதுரை காமராஜ் பல்கலை கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் உதவி செய்வார் என, இக்கோர்ட் நம்புகிறது, என உத்தரவிட்டார்.