மின்வாரியங்களின் செயல்பாடு குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தமிழ்நாடு மின்வாரியத்திற்கு, குறைவான தரமதிப்பீடு கிடைத்துள்ளது.மத்திய மின் அமைச்சகத்தின் அனுமதியுடன், ஆண்டுதோறும், மாநில மின் வாரியங்களின் செயல்பாடுகள் குறித்து, ஆய்வு நடத்தப்படுகிறது.நடப்பு நிதியாண்டிற்கான இந்த ஆய்வின் முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதன் விவரம்:நிதி செயல்பாட்டை முக்கிய அம்சமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், தென்மாநிலங்களிலேயே குறைவான தரமதிப்பீடாக, தமிழ்நாடு மின்வாரியத்திற்கு, "கிரேடு-பி' தரப்பட்டுள்ளது.அதேசமயம், மின் இழப்பை கட்டுப்படுத்துவது, மின் பகிர்மான தொழில்நுட்பம் போன்றவற்றில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சிறப்பாக செயல்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த தர மதிப்பீட்டால், புதிய மின் திட்டங்களுக்காக, தனியார் நிதி நிறுவனங்களை அணுகுவதில் சிக்கல் ஏற்படலாம். தர மதிப்பீட்டை காரணங்காட்டி, மின் திட்டங்களுக்காக, தாங்கள் வழங்கும் கடனுக் கான வட்டி விகிதத்தை, தனியார் நிதி நிறுவனங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அத்தகைய சூழல் ஏற்பட்டால், மின் திட்டங்களுக்கு, அட்டவணைப் படுத்தப்பட்ட வங்கிகளில், கடன் பெறும் வழிமுறையும் உள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்த ஆய்வு முடிவு, தமிழ்நாடு மின் வாரியத்தை பெரிதாக பாதிக்காது.இவ்வாறு அவர் கூறினார்.தர மதிப்பீட்டில், தமிழகத்தை தவிர, பிற தென் மாநிலங்கள், "பி' பிளஸ் கிரேடு, பெற்றுள்ளன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு, நடப்பு நிதியாண்டின், 8,183 கோடி ரூபாய் கடனை சேர்த்து, மொத்தம், 60 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.