Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 26 மார்ச், 2013

காலணி தொழில்நுட்ப துறை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு


சர்வதேச அளவில் தோல் தொடர்பான பொருட்களை தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கின்றது. தோல் தொழில்நுட்பத்தை படிக்க விரும்புபவர்கள், மத்திய அரசின் வணிக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் Foot Wear Design & Development Institute -ஒருங்கிணைப்புடன் நொய்டா, சென்னை, கொல்கத்தா, ஜோத்பூர், ரோடக் ஆகிய இடங்களிலுள்ள முழு நேர பயிற்சி அளிக்கின்றது.

இந்த காலணி டிசைன் உற்பத்தி மேலாண்மை படிப்பில் முன்னேற விரும்புவர்களுக்கு இந்நிறுவனம் சிறப்பான முறையில் பாடங்களை கற்பித்து வருகின்றது. காலணி வடிவமைப்பு மேலாண்மை நிறுவனங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. இந்நிறுவனம் 9001:14001 ஐஎஸ்ஒ தர சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்த படிப்புகளில் சேரவிரும்புவோர் ரூ.500 ஆக்ஸிஸ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகள் மற்றும் FDDIன் வளாகங்களில் செலுத்தி படிப்புகள் பற்றிய குறிப்பேட்டினை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை கல்வி நிறுவன இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

FDDI வளாகங்கள் Noida, Rae Bareli, Chennai, Rohtak, Chhindwara, kolkata. Jodhpur, Guna ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது.

மே 20 விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14, 15, 16ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெறவுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Footwear Design & Development  Institute, A-10/A, Sector - 24, Noida, Ph: 0120-4500152, 9310957007 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களை பெற www.fddiindia.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

கன்னியாகுமரியில் ஆற்றுநீர் கடலில் வீணாகிறது : தடுப்பதற்கு திட்டங்கள் தேவை


குமரி மேற்கு மாவட்ட ஆறுகள் வழியாக வீணாக கடலில் கலக்கும் நீரை முழுமையாகப் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் திட்டம் தீட்டி செயல்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.இயற்கை கொஞ்சும் குமரி மாவட்டத்தின் நீர் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1 மற்றும் 2, முக்கடல், பொய்கை, புத்தன் அணை, மாம்பழத்துறையாறு போன்ற அணைகள் உள்ளன. இவற்றில் இருந்து மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.ஆனால், மழைக்காலங்களில் தேக்கப்படும் தண்ணீர், கோடை காலங்களில் எளிதில் வறண்டு விடுகிறது. இதனால், விவசாயம் செய்ய முடியாமல் தவிப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது. மேலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் குறைந்து வருவதும், மண் நிரம்புவதும், சானல்களின் ஷட்டர்கள் பழுதடைந்து, தண்ணீர் குறிப்பிட்ட இலக்கை சென்றடையாததும், நீர்பாசன மேம்பாட்டில் பல சிக்கல்களை மேலும் உருவாக்கியுள்ளன.

அண்மையில் வெயிலில் தாக்கம் மிகவும் அதிகரித்து வருவதால் மாவட்டத்தில் கடுமையான வறட்சியும், குடிநீர் பற்றாக்குறையும் தலைகாட்டத் துவங்கியுள்ளன. மேலும், விவசாயப் பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆண்டுதோறும் இயற்கை வழங்கிய ஆற்றுநீர் வீணாக கடலில் கலந்து வருவது வாடிக்கையாக உள்ளது.குமரியின் தாமிரபரணியாறு தேங்காப்பட்டணம் கடலில் கலக்கிறது. இந்த ஆறு பாயும் பகுதிகளான கணபதியான்கடவு, கல்லுபாலத்தடி கடவு, பரக்காணி போன்ற பகுதிகள் ஏரிகள் போல காட்சியளிக்கின்றன. இந்த ஆறு மூலம் தேங்காப்பட்டணம் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரின் அளவு ஆண்டிற்கு ஐந்தாயிரத்து 200 மில்லியன் கன அடியாகும்.அதுபோல, மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் கடல் பகுதியில் கலக்கும் வள்ளியாறு வழியாக, ஆண்டிற்கு ஆயிரத்து 25 மில்லியன் கன அடியும், மணக்குடி கடலில் கலக்கும் பழையாற்றின் வழியாக, ஆண்டிற்கு நான்காயிரத்து 925 மில்லியன் கன அடியும் ஆற்றுநீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.

இவ்வாறு, ஆண்டுதோறும் குமரி மேற்கு மாவட்ட மலைப்பகுதிகளில் இருந்து 11 ஆயிரத்து 150 மில்லியன் கன அடி ஆற்றுநீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இந்த நீரை முழுமையாகப் பயன்படுத்தும் பட்சத்தில், மாவட்டத்தின் குடிநீர் பற்றாக்குறை நீங்குவதுடன், விவசாயம் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டு, விவசாயம் செழித்தோங்க வழிவகை செய்யலாம்.எனவே, கடலில் கலக்கும் ஆற்றுநீரை முழுமையாகப் பயன்படுத்தி, மாவட்டத்தைச் செழிக்க வைக்க மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான திட்டங்களைத் தீட்டி, அரசிடம் ஒப்புதல் பெற்று, தடுப்பணைகள், நீரேற்று நிலையங்கள் போன்ற பல சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, நீரை சேமிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் கோவை மக்கள்


மின்வெட்டு, வளர்ச்சித் திட்டங்களில் புறக்கணிப்பு, அதிகரித்து வரும் லஞ்சம், தண்ணீர்ப் பிரச்னை ஆகியவற்றின் காரணமாக, கோவை மக்களிடம் அதிருப்தியும், கோபமும் அதிகரித்து வருவதால், லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது, ஆளும்கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும்.தமிழகத்திலேயே மின்வெட்டால், அதிகபட்ச பாதிப்புக்குள்ளாகியிருப்பது கோவை மாவட்டம்தான். சென்னைக்கு அடுத்ததாக, அதிக தொழில் வளர்ச்சி பெற்ற இந்த மாவட்டத்தில் மின் வெட்டால் ஏற்படும் பாதிப்பையும், இழப்பையும் கணக்கிடவே முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது.

சென்னையில் 2 மணி நேரம் மட்டுமே மின் வெட்டை அமல் படுத்துவதைப்போல, கோவைக்கும் விலக்கு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை, அரசின் காதுகளை எட்டவேயில்லை; இதனால், மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை, முதல்வரிடம் உளவுத்துறை உட்பட யாரும் எடுத்துச் செல்வதாகத் தெரியவில்லை.இந்த கோபம் ஒரு புறம் புகைந்து கொண்டிருக்க, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்த இரு ஆண்டுகளில், கோவையில் நடந்த வளர்ச்சிப் பணிகள் என்ன என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழத் துவங்கியுள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில், அவிநாசி சாலை விரிவாக்கம் துவங்கி, திருச்சி, மேட்டுப்பாளையம் சாலைகள் விரிவாக்கம், பாலங்கள் திறப்பு, டைடல் பார்க், புதிய குடிநீர்த் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட், புது பஸ் ஸ்டாண்ட், புதிய பூங்காக்கள், நடைபாதைகள் என ஏராளமான வளர்ச்சிப் பணிகள்நடந்தன.

இவற்றைத் தவிர்த்து, காந்திபுரத்தில் பல அடுக்கு மேம்பாலம், மேற்கு புறவழிச்சாலைத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதற்கான அரசாணை மற்றும் அடுத்த கட்டப் பணிகள் தாமதமடைந்து வந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முந்தைய தேர்தல்களிலும், இந்த தேர்தலிலும் அ.தி.மு.க.,வை தொடர்ச்சியாக வெற்றி பெற வைத்ததற்காக, கோவைக்கென்று சில சிறப்புத் திட்டங்களை முதல்வர் ஜெ., நிறைவேற்றுவார் என்று கோவை மக்கள் எதிர்பார்த்தனர்; அதற்கேற்ப, காந்திபுரம் பாலத்துக்கு கூடுதல் நிதி, மேற்கு புறவழிச்சாலை, உக்கடம்-ஆத்துப்பாலம் என பல திட்டங்களையும் முதல்வர் அறிவித்தார்.
அவர், இந்த திட்டங்களை அறிவித்து இரு ஆண்டுகள் முடிவடையும் நிலையில், இந்த திட்டங்களிலும் எதுவுமே இன்னும் துவக்கப்படவே இல்லை; திட்ட அறிக்கை, மதிப்பீடு என்று நெடுஞ்சாலைத்துறையினர், பல காரணங்களை அடுக்கி வருகின்றனர்; ஆனால், எந்தப் பணியும் இப்போதைக்கு துவங்குவதற்கான அறிகுறி எதுவுமே தெரியவில்லை.

அதேபோல, ரயில்வே மேம்பாலங்கள், போத்தனூர்-கிணத்துக்கடவு அகல ரயில் பாதை, விமான நிலைய விரிவாக்கம் போன்ற வளர்ச்சிப் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியும், கடந்த இரு ஆண்டுகளாக ஆமை வேகத்தில்தான் நடந்து வருகிறது.

இதனால், இரு ஆண்டுகளில் எந்த வளர்ச்சித் திட்டங்களுமே முடிவுக்கு வரவில்லை. அதே வேளையில், மாநகராட்சியில் அதிகரித்துள்ள லஞ்சமும், குடிநீர் வினியோகம், தூய்மைப் பணி போன்றவற்றில் காட்டப்படும் பாரபட்சமும் மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. மாநகராட்சியில், கடந்த 2012-13 பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களே நிறைவேற்றப்படாத நிலையில், மீண்டும் அதே திட்டங்கள் அறிவிக்கப்பட்டது, அதிருப்தியை கோபமாக்கியது. உச்சக்கட்டமாக, தமிழக அரசின் பட்ஜெட், இந்த கோபத்தை கொந்தளிப்பாக மாற்றியுள்ளது.சென்னைக்கு 4 பாலங்களுக்கு 272 கோடியும், மதுரையில் இரு பாலங்களுக்கு 130 கோடி ரூபாயும் அறிவித்து விட்டு, கோவைக்கென்று எந்த திட்டத்தையும் அறிவிக்காமல் விட்டதே இதற்குக் காரணம். இங்குள்ள அமைச்சர் உட்பட ஆளும்கட்சி மக்கள் பிரதிநிதிகள் யாருமே, கோவையின் தேவையை முதல்வரிடம் எடுத்துச் சொல்லவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

எந்த நேரத்திலும், மத்தியில் ஆட்சி கவிழும்; தேர்தல் வருமென்ற நிலையில், கோவையில் தற்போதுள்ள சூழல், ஆளும்கட்சிக்கு சாதகமாக இல்லை என்பதோடு, வரும் தேர்தல் பெரும் சவாலாக இருக்குமென்பதும் உறுதி.ஆறுதல் பரிசுஈழத்தமிழர், விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களைக் கொண்டு செல்வது போன்ற பிரச்னைகளில் அரசின் நிலைப்பாடு, விவசாயிகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் ஆறுதல் பரிசாகத் தெரிந்தாலும், இது பெரும்பான்மையினரின் உணர்வாக தேர்தலில் பிரதிபலிக்குமா என்பது சந்தேகமே. இதெல்லாம் போதாதென்று, பருவமழை பொய்த்து, அணைகள் எல்லாம் வறண்டு, தண்ணீர்ப் பிரச்னை இப்போதே தலை விரித்தாடத் துவங்கியிருப்பதால், எதிர்வரும் கோடையைச் சமாளிப்பதே, அரசுக்கு இன்னொரு சவாலாக இருக்கலாம்; இந்த ஆண்டிலும் மழை பொய்த்தால்...ஆளும்கட்சி பாடு பெரும் திண்டாட்டம்தான்.

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை


 தமிழகத்தில் உள்ள, கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் திறப்பு குறித்து, இதுவரை, எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள், ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக, மார்ச், 9ம் தேதி முதல் போராட்டத்தை துவங்கினர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கலைக் கல்லூரிகள் மார்ச், 15ம் தேதியும், பொறியியல் கல்லூரிகள், 18ம் தேதியும் மூடப்பட்டன.
கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள், ஏப்ரல் மாதம் துவங்க உள்ள நிலையில், மூடப்பட்ட கல்லூரிகளைத் திறக்க, அரசு, கடந்த இரு நாட்களாக ஆலோசித்து வருகிறது. பொறியியல் கல்லூரிகளைத் திறக்க, சென்னை, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ் தலைமையில், நேற்று நடத்த கூட்டத்தில், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், பொறியியல் கல்லூரிகளைத் திறக்கும் தேதி முடிவு செய்யப்படவில்லை. ஏப்., 1ம் தேதிக்கு மேல், கல்லூரிகளைத் திறக்க முடிவு செய்யலாம் என, ஆலோசிக்கப்பட்டது.

இதே போல், கலை, அறிவியல் கல்லூரிகளைத் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், உயர்கல்வித் துறை மூத்த அதிகாரிகள் தலைமையில் நடந்ததாகவும், அதில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டங்கள் முடிவெடுக்காமல் முடிந்ததால், கல்லூரிகள் திறக்கும் தேதி, முடிவாகாமல் உள்ளது.