குமரி மேற்கு மாவட்ட ஆறுகள் வழியாக வீணாக கடலில் கலக்கும் நீரை முழுமையாகப் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் திட்டம் தீட்டி செயல்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.இயற்கை கொஞ்சும் குமரி மாவட்டத்தின் நீர் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1 மற்றும் 2, முக்கடல், பொய்கை, புத்தன் அணை, மாம்பழத்துறையாறு போன்ற அணைகள் உள்ளன. இவற்றில் இருந்து மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.ஆனால், மழைக்காலங்களில் தேக்கப்படும் தண்ணீர், கோடை காலங்களில் எளிதில் வறண்டு விடுகிறது. இதனால், விவசாயம் செய்ய முடியாமல் தவிப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது. மேலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் குறைந்து வருவதும், மண் நிரம்புவதும், சானல்களின் ஷட்டர்கள் பழுதடைந்து, தண்ணீர் குறிப்பிட்ட இலக்கை சென்றடையாததும், நீர்பாசன மேம்பாட்டில் பல சிக்கல்களை மேலும் உருவாக்கியுள்ளன.
அண்மையில் வெயிலில் தாக்கம் மிகவும் அதிகரித்து வருவதால் மாவட்டத்தில் கடுமையான வறட்சியும், குடிநீர் பற்றாக்குறையும் தலைகாட்டத் துவங்கியுள்ளன. மேலும், விவசாயப் பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆண்டுதோறும் இயற்கை வழங்கிய ஆற்றுநீர் வீணாக கடலில் கலந்து வருவது வாடிக்கையாக உள்ளது.குமரியின் தாமிரபரணியாறு தேங்காப்பட்டணம் கடலில் கலக்கிறது. இந்த ஆறு பாயும் பகுதிகளான கணபதியான்கடவு, கல்லுபாலத்தடி கடவு, பரக்காணி போன்ற பகுதிகள் ஏரிகள் போல காட்சியளிக்கின்றன. இந்த ஆறு மூலம் தேங்காப்பட்டணம் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரின் அளவு ஆண்டிற்கு ஐந்தாயிரத்து 200 மில்லியன் கன அடியாகும்.அதுபோல, மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் கடல் பகுதியில் கலக்கும் வள்ளியாறு வழியாக, ஆண்டிற்கு ஆயிரத்து 25 மில்லியன் கன அடியும், மணக்குடி கடலில் கலக்கும் பழையாற்றின் வழியாக, ஆண்டிற்கு நான்காயிரத்து 925 மில்லியன் கன அடியும் ஆற்றுநீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.
இவ்வாறு, ஆண்டுதோறும் குமரி மேற்கு மாவட்ட மலைப்பகுதிகளில் இருந்து 11 ஆயிரத்து 150 மில்லியன் கன அடி ஆற்றுநீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இந்த நீரை முழுமையாகப் பயன்படுத்தும் பட்சத்தில், மாவட்டத்தின் குடிநீர் பற்றாக்குறை நீங்குவதுடன், விவசாயம் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டு, விவசாயம் செழித்தோங்க வழிவகை செய்யலாம்.எனவே, கடலில் கலக்கும் ஆற்றுநீரை முழுமையாகப் பயன்படுத்தி, மாவட்டத்தைச் செழிக்க வைக்க மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான திட்டங்களைத் தீட்டி, அரசிடம் ஒப்புதல் பெற்று, தடுப்பணைகள், நீரேற்று நிலையங்கள் போன்ற பல சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, நீரை சேமிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக