Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 4 டிசம்பர், 2012

இந்தியாவில் முதலீடு செய்ய அன்னிய நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்


அடுத்த ஐந்து ஆண்டுகளில், உள்நாட்டில், துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலை போன்றவற்றை உள்ளடக்கிய, அடிப்படை கட்டுமான துறையின் மேம்பாட்டிற்கு, 1 லட்சம் கோடி டாலர் முதலீடு தேவை என, மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இலக்கை எட்டுவதற்கு, உள்நாட்டு நிறுவனங்களுடன், அன்னிய நிறுவனங்களின் முதலீடும் அவசியம் என்று கணிக்கப்பட்டுள்ளது.இத்துடன், சில்லரை வர்த்தகம், காப்பீடு, விமானச் சேவை உள்ளிட்ட துறைகளிலும், அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

வருவாய்க்கு வழி:இதன் விளைவாக, அயல்நாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு களை மேற்கொள்ள அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றன. மேலும், முதலீட்டின் மீது சிறந்த வருவாய் தரும் நாடாக இந்தியா கருதப்படுகிறது.

வர்த்தக அமைச்சகம்:இதனால், நடப்பாண்டு, செப்டம்பர் மாதத்தில், இந்தியாவில், அன்னிய நிறுவனங்கள் மேற்கொண்ட நேரடி முதலீடு, இரண்டு மடங்கு உயர்ந்து, 467 கோடி டாலர் (25,685 கோடி ரூபாய்) என்ற அளவில் அதிகரித்துள்ளது.இது, சென்ற ஆண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை (176 கோடி டாலர்/ 9,680 கோடி ரூபாய்) விட, 62 சதவீதம் அதிகமாகும் என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்ற ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 20 சதவீதம் குறைந்து, 226 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், இதுவரையில், செப்டம்பர் மாதத்தில் தான், அன்னிய நேரடி முதலீடு அதிக அளவில், மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேவை துறை:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, முதல் ஆறு மாத காலத்தில், நாட்டின் அன்னிய நேரடி முதலீடு, 1,284 கோடி டாலராக (70,620 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப் பட்ட முதலீட்டை (1,913 கோடி டாலர்/ 1.05 லட்சம் கோடி ரூபாய்) விட, 33 சதவீதம் குறைவாகும்.

மதிப்பீட்டு காலத்தில், சேவை துறையில், மிகவும் அதிகமான அளவில், அதாவது, 300 கோடி டாலர் (16,500 கோடி ரூபாய்) முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதையடுத்து, உலோகம் (68.50 கோடி டாலர்/ 3,767 கோடி ரூபாய்), கட்டுமானம் (64 கோடி டாலர்/3,520 கோடி ரூபாய்), மோட்டார் வாகனம் (63.50 கோடி டாலர்/3,465 கோடி ரூபாய்) ஆகிய துறைகள் அதிக அளவில் அன்னிய முதலீடுகளை ஈர்த்துள்ளன.

மொரீஷியஸ்:கணக்கீட்டு காலத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய முதலீடுகளில், மொரீஷியஸ் நாட்டின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது. இந்நாடு, 625 கோடி டாலரை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஜப்பான் (132 கோடி டாலர்), சிங்கப்பூர் (112 கோடி டாலர்), நெதர்லாந்து (97 கோடி டாலர்), இங்கிலாந்து (59 கோடி டாலர்) ஆகிய நாடுகள் உள்ளன.இந்தியாவில், மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, கடந்த 2011-12, 2010-11 மற்றும் 2009-10 நிதியாண்டுகளில் முறையே, 3,650 கோடி டாலர், 1,942 கோடி டாலர் மற்றும் 2,583 கோடி டாலர் என்ற அளவில் இருந்தன.

நாடு முழுவதும் 5 ஆண்டுகளில் 191 போலி என்கவுண்டர்கள்


கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 191 போலி என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்‌ட்டில் தேசிய மனித உரிமைகள் கழகம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் நடைபெற்ற போலி என்கவுன்டரில் சொராபுதீன்  கொலை செய்யப்பட்ட வழக்கில் போலி என்கவுன்டர் குறித்த அறிக்கையை மனித உரிமைகள் கழகம் தாக்கல் செய்துள்ளது.

அதிர்ச்சி அளித்த அறிக்கை:
அதிகளவில் போலி என்கவுன்டர் நடைபெற்ற மாநிலங்களில் மணிப்பூர் முதலிடத்தில் உள்ளது.
மணிப்பூர் அரசு சார்பில் கடந்த 30 ஆண்டுகளில் நடத்தப்பட்ட என்கவுன்டர்களில் இதுவரை சுமார் 1500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கழகம் அளித்த அறிக்கை தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. நீதிபதி அஃதப் அலம் மற்றும் ரஞ்சனா பி தேசாய் அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் கடந்த முறை விசாரணையின் போது, மோதலின் போது இச்சம்பவம் நடைபெற்றதா எனவும், என்கவுன்டரில் கொல்லப்பட்ட இருவரும் ஒருவரை கொன்றதற்கு பதில் நடவடிக்கையாக அம்மாநில அரசு இது போன்று செய்ததா எனவும் இது தான் அரசின் நிலைப்பாடா எனவும் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் மனித உரிமைகள் கழகம் தாக்கல் அறிக்கை தாக்கல் செய்தது. மணிப்பூரை தொடர்ந்து குஜராத்தில் போலி என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளது.

 மனித உரிமைகள் கழக அறிக்கையின்படி 2007ம் ஆண்டு முதல் 2012 ம் ஆண்டு வரை ஏராளமான சட்டத்திற்கு புறம்பான கொலைகளையும் அரசே செய்துள்ளதாகவும், இது போன்ற போலி என்கவுன்டர்கள் தொடர்பாக இதுவரை 1671 புகார்கள் அல்லது தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற 191 என்கவுன்டர் வழக்குகளுக்கும் ரூ.10.51 கோடி நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது. போலி என்கவுன்டர் என நிரூபிக்கப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது. 

குஜராத் போலி என்கவுன்டர்:

குஜராத் போலி என்கவுன்டர் உட்பட அனைத்து வழக்குகளிலும் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதற்கு அம்மாநில அரசுகளின் பங்கு பெருமளவில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை, தடயவியல் அறிக்கை உள்ளிட்ட அனைத்தும் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாமதங்களை அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளது. இந்த கொலைகள் சரியான என்கவுன்டரா அல்லது போலி என்கவுன்டரா என்பது குறித்த முடிவான அறிக்கையை அரசு சார்பில் தாக்கல் செய்யப்படவில்லை.

வழக்கு விபரங்கள் :
மணிப்பூரில் நடத்தப்பட்ட 71 போலி என்கவுன்டர் வழக்குகளில் இதுவரை 3 மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வழக்கில் மட்டும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. 2007 ல் 5 போலி என்கவுன்டர்களும், 2008ல் 17ம், 2009ல் 19ம் நடைபெற்றுள்ளதாக மனித உரிமைகள் கழகம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் கழகத்தின் இந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து மாநிலங்களுக்கும் கடுமையான எச்சரிக்கை விதிக்க வேண்டும் எனவும், அரசு சார்ந்த வழக்குகளை தாமதமின்றி 3 மாதங்களுக்குள் விசாரித்து அறிக்கை அளிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் எனவும் மனித உரிமைகள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.