Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 4 மார்ச், 2013

இன்டர்நெட் மூலம் உடனடி மணி ஆர்டர் சேவை தபால் துறையில் துவக்கம்


தபால் துறையில் இன்டர்நெட் மூலம் உடனடி மணி ஆர்டர் சேவை துவங்கப்பட்டுள்ளது. இதன்படி, குறைந்த செலவில், 50 ஆயிரம் ரூபாய் வரை அனுப்பி, ஒரு சில நிமிடங்களில் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

தபால் துறையில் மணி ஆர்டர் அனுப்பி நான்கு, ஐந்து நாட்களுக்கு பின், பணம் பெற்றுக் கொள்ளும் நிலை இருந்தது. பின், இ.எம்.ஒ., என்னும் எலக்ட்ரானிக் மணி ஆர்டர் மூலம் அனுப்பப்படும் பணம், மறுநாள் கிடைக்கும் வகையில் இருந்தது. தற்போது, கம்ப்யூட்டர் வசதி உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும், 1,000 முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை அனுப்ப முடியும். பணம் அனுப்பும் போது, 16 இலக்க எண் வழங்கப்படும்; இந்த எண்ணை, பணத்தை பெறும் நபருக்கு போனில் தகவல் தெரிவித்து விட வேண்டும்.
பணம் பெறும் நபர், தன் அடையாள அட்டையின் நகலுடன் 16 இலக்க ரகசிய எண்ணை தபால் அலுவலகத்தில் தெரிவித்து, பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

 ஏ.டி.எம்.,களில் கூட ஒரு நாளைக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்கும் வசதி உள்ளது. ஆனால், இந்த சேவையில் ஒருவர், எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் அனுப்ப முடியும்.

ராமநாதபுரம் மாவட்ட தபால் துறை கண்காணிப்பாளர் குமாரகிருஷ்ணன் கூறியதாவது:ஆயிரம் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரைக்கு 100ம், 10 ஆயிரத்து ஒன்று முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை 110ம், 30 ஆயிரத்து ஒன்று முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை 120 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பணம் அனுப்பிய ஒரு சில நிமிடத்தில் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

பள்ளி, கல்லூரி விடுதிக்கான சிலிண்டர் விலை சரிவு


வீடுகளுக்கு வினியோகிக்கப்படும், மானியம் இல்லாத சிலிண்டரை, பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு வழங்க, எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன. இந்த உத்தரவு காரணமாக, இனி, பள்ளிக் கல்லூரி விடுதிகளுக்கு, மானியம் இல்லாத சிலிண்டர், 932.50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் விடுதிகளுக்கு, சிலிண்டர் ஒன்றுக்கு, 328 ரூபாய் வரை சலுகை கிடைக்கிறது.

இந்தியாவில் காஸ் சிலிண்டர் வினியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று ஆயில் நிறுவனங்களே காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகின்றன.

வீடுகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் கூடிய வீட்டு உபயோக சிலிண்டர், வர்த்தக சிலிண்டர், பள்ளிக் கல்லூரிகளின் விடுதிகளுக்கான சிலிண்டர், மானியம் இல்லாத சிலிண்டர் என, நான்கு வகையான சிலிண்டர்களை விலை மாற்றங்களுடன் வினியோகம் செய்து வந்தன.

இதில், வீடுகளுக்கு மானிய சிலிண்டர், 401 ரூபாய்க்கும், பள்ளிக் கல்லூரி விடுதிகளுக்கான சிலிண்டர் கடந்த மாதம் வரை, 1,260.50 ரூபாய்க்கும், வர்த்தக சிலிண்டர், 1,676 ரூபாய்க்கும், மானியம் இல்லாத சிலிண்டர், 932.50 ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வந்தது.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வதாலும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதாலும், உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்கள் மீதான விலையை ஆயில் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரிப்பு செய்து வருகின்றன. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் மாதம் தோறும் ஒரு விலை ஏற்றம் அரங்கேறி வருகிறது.

ஆயில் நிறுவனங்கள், பள்ளிக் கல்லூரிகளின் விடுதிகளுக்கு வழங்கி வந்த சிலிண்டர் வினியோகத்தில் மாற்றம் செய்துள்ளது. கடந்த மாதம் வரை, பள்ளிக் கல்லூரி விடுதிகளுக்கு பிரத்தியோக சிலிண்டர்களை, 1,260.50 ரூபாய்க்கு வழங்கி வந்தது.

ஆனால், நடப்பு மாதம் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கான பிரத்தியோக சிலிண்டர்களை ரத்து செய்து விட்டு, வீடுகளுக்கு வழங்கப்படும், மத்திய, மாநில அரசுகளின் மானியம் இல்லாத சிலிண்டர்களை வினியோகிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

முந்திரி பருப்பு ஏற்றுமதி வீழ்ச்சி


நடப்பு நிதி ஆண்டில், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் மதிப்பு மற்றும் அளவின் அடிப்படையில் முந்திரி பருப்பு ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. இறக்குமதியாகும் கச்சா முந்திரிக் கொட்டைகளின் விலை அதிகமாக உள்ள நிலையில், சர்வதேச சந்தையில் முந்திரி பருப்பு விலை குறைந்துள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

76,000 டன் ஏற்றுமதி
ஏப்ரல்–ஜனவரி மாத காலத்தில் ரூ.3,089 கோடி மதிப்பிற்கு சுமார் 76,000 டன் முந்திரி பருப்பு ஏற்றுமதியாகி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.4,390 கோடிக்கு 1.32 லட்சம் டன் முந்திரி பருப்பு ஏற்றுமதியாகி இருந்தது. ஆக, அளவின் அடிப்படையில் 16 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் 17 சதவீதமும் ஏற்றுமதி குறைந்துள்ளது.

முந்திரி பருப்பு நுகர்வு அதிகமாக உள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தேவைப்பாடு குறைந்ததால் ஏற்றுமதி சரிவடைந்துள்ளதாக முன்னணி ஏற்றுமதியாளர் அனு கேஷ்யூஸ் நிறுவனத்தின் அனு எஸ்.பிள்ளை தெரிவித்தார். ஏற்றுமதியாகும் முந்திரி பருப்புக்கு குறைவான விலை கிடைத்து வரும் நிலையில், இறக்குமதி செய்யப்படும் கச்சா முந்திரியின் விலை அதிகமாக உள்ளது. இதுவும் ஏற்றுமதியாளர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

நமது ஏற்றுமதியாளர்களுக்கு ஆண்டுக்கு மொத்தம் 14 லட்சம் டன் கச்சா முந்திரி தேவைப்படுகிறது. இதில் 60 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலம் வரை தான்சானியாவில் இருந்து இறக்குமதி செய்து வந்த இந்திய நிறுவனங்கள், தற்போது மேற்கு ஆப்பிரிக்காவில் மகசூல் பருவம் தொடங்கியுள்ளதால் அங்கிருந்து கச்சா முந்திரியை வாங்க தொடங்கியுள்ளனர்.

தற்போது ஒரு பவுண்டு (சுமார் அரை கிலோ) முந்திரி பருப்புக்கான ஏற்றுமதி விலை 3.30 முதல் 3.50 டாலர் வரை உள்ளது. இறக்குமதி செலவினத்தை ஈடு செய்ய வேண்டுமானால் 3.60 டாலருக்கு அதிகமான விலை கிடைக்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், முந்திரி சாகுபடியில் முன்னிலை வகிக்கும் ஐவரி கோஸ்ட் மற்றும் கானா ஆகிய நாடுகளில் சீசன் தொடங்கி விட்டதால் கச்சா முந்திரி விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 71,610 டன் கச்சா முந்திரி இறக்குமதியாகி உள்ளது. இது, 2011 ஜனவரி மாதத்தை விட ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாகும்.

வியட்நாம், பிரேசில்
நம் நாட்டில், கடந்த சில ஆண்டுகளில், கச்சா முந்திரியை இறக்குமதி செய்து பதப்படுத்துவோருக்கும், முந்திரி பருப்பு ஏற்றுமதி செய்வோருக்கும் வர்த்தகம் செழிப்பாக இருந்தது. ஆனால் அண்மைக் காலமாக வியட்நாம், பிரேசில் ஆகிய நாடுகள் இந்தியாவில் மலிவு விலையில் முந்திரி பருப்பை விற்பனை செய்வதால் உள்நாட்டில் இத்துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.