Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 17 ஜனவரி, 2013

1 கோடி மாணவர்களின் விவரங்கள் ஜனவரிக்குள் இணையதளத்தில் வெளியீடு


தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகள், 5.5 லட்சம் ஆசிரியர்கள், 1.33 கோடி மாணவர்களின் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் துறையின் இணையதளத்தில் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்கட்டமாக, பள்ளிகள், ஆசிரியர்கள் தொடர்பான தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் 55,667 பள்ளிகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில் 34,871 தொடக்கப்பள்ளிகளும் (63%), 9,969 இடைநிலைப் பள்ளிகளும் (18%), 5,167 உயர்நிலைப் பள்ளிகளும் (9%), 5,660 மேல்நிலைப் பள்ளிகளும் (10%) உள்ளதாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறைக்கு www.tnschools.gov.in என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் வெளியிடுவதற்காகவும், கல்வித் தகவல் சார்ந்த மேலாண் முறைமைக்காகவும் (EMIS - Educational Management Information System) பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

இந்த இணையதளம் மற்றும் இதற்கான சாப்ட்வேரை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இதற்கான சர்வர் உள்ளிட்டவை எல்காட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளன.

பள்ளிகள், மாணவர்களின் தகவல் திரட்டும் பணி கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கியது. டிசம்பர் இறுதியில் இந்தப் பணிகள் நிறைவடைந்தன. முதல்கட்டமாக, பள்ளிகள், ஆசிரியர்களின் விவரங்களைப் பதிவுசெய்யும் பணி முடிந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் மேலும் கூறியது: அனைத்துப் பள்ளிகளின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இப்போது மாணவர்களின் விவரங்களைப் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளின் விவரங்கள் மட்டும் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. அதன் பிறகு, அந்தநல்லூர், மணிகண்டம் ஒன்றியம் உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் விவரங்களும் பரிசோதனை முயற்சியாக பதிவு செய்யப்பட்டன. ஒன்றியத்தில் உள்ள 100 முதல் 140 பள்ளிகள், மாணவர்களின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில் எந்தப் பிரச்னையும் எழவில்லை. இதைத்தொடர்ந்து, இப்போது மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களின் தகவல்களைப் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற 5 முதல் 10 ஆசிரியர்களைக் கொண்டு இந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. விவரங்களைப் பதிவு செய்வதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனி பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் இந்தப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிகள் தொடர்பான விவரங்களில் பள்ளி திறக்கப்பட்ட தேதி, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, வகுப்பறைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

மாணவர் தொடர்பான விவரங்களில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, தந்தையின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த தேதி, அவர்களின் கல்வித் தகுதி, அனுபவம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறை ஆகிய துறைகள் இந்தப் பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்படுகின்றன. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலமாகவும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலமாகவும் தகவல்கள் திரட்டப்படுகின்றன.

இந்தியாவின் ஹீரோ திப்பு சுல்தான் :கர்நாடக கவர்னர் பரத்வாஜ்


இந்தியாவின் ஹீரோவாக கருதப்பட்ட திப்பு சுல்தான் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கவர்னர் பரத்வாஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கர்நாடக கவர்னர் பரத்வாஜ் மங்களூரில் நேற்று அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியாவின் ஹீரோ
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டினத்தில் திப்பு சுல்தான் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு எந்த வித எதிர்ப்பும் தேவையில்லை. திப்பு சுல்தான் இந்தியாவின் ஹீரோவாக கருதப்பட்டவர். அதனால் அவர் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்குவதில் எந்த ஆட்சேபனையும் இருக்கக் கூடாது.கர்நாடக அரசு லோக் அயுக்தா நீதிபதியை நியமிப்பதில் காலதாமதம் செய்து வருவதால் மாநில மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இனியும் தாமதம் செய்யாமல் லோக் அயுக்தா நீதிபதியை நியமனம் செய்ய வேண்டும்.

கலைக்கும்படி சொல்லவில்லை
ஜெகதீஷ் ஷெட்டர் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை என்றும், எனவே ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்றும் இதுவரை யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை.பசுவதை தடை சட்ட மசோதா தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அந்த கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை. அங்கிருந்து கடிதம் வந்த பிறகு அதுபற்றி பரிசீலிக்கப்படும்.இவ்வாறு கவர்னர் பரத்வாஜ் கூறினார்.

நூல் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி


ஜவுளி உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய நூல் ரகங்கள், கடந்த 10 நாட்களில் கிலோவுக்கு ஐந்து முதல் 10 ரூபாய் வரை அதிகரித்துள்ளதால், திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மின்வெட்டு, நூல் விலை உயர்வு காரணமாக, ஜவுளி உற்பத்தி அளவை குறைக்கலாமா என ஆலோசித்து வருகின்றனர்.திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. ஒவ்வொரு தறியிலும் தினமும் சராசரியாக தலா 50 மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படும். இவைகளில், காடாத்துணி, பாலியஸ்டர் ரகம் மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு நாள் துணி உற்பத்தி மதிப்பு ரூ.60 கோடி.
இரு மாவட்டங்களிலும் உற்பத்தி செய்யப்படும் துணிகள், ஈரோடு, மும்பை, டில்லி, குஜராத், ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. துணிகளை வாங்கும் வியாபாரிகள், பெட்ஷீட், திரைசீலை, லுங்கி என பல்வேறு பொருட்களாக மாற்றி, விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் ஜவுளித்தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் ஐந்து லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஓராண்டுக்கு மேலாக இரு மாவட்டத்திலும், தினமும் சராசரியாக நீடித்து வரும் 14 மணி நேர மின்வெட்டு, தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, ஜவுளித் தொழில் கடும் நசிவை சந்தித்து வருகிறது.கடந்த 10 நாட்களில், ஜவுளி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 20 கவுண்ட் நூல் கிலோவுக்கு ரூ.ஐந்து வீதம் 60 கிலோ பேக்கிற்கு ரூ.300 உயர்வு, 30 கவுண்ட் நூல் கிலோவுக்கு ரூ.10 வீதம் 60 கிலோ பேக்கிற்கு ரூ.600 உயர்ந்துள்ளது. இது, ஜவுளி உற்பத்தியாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

நூல் விலை அடிக்கடி அதிகரித்துக் கொண்டே செல்வதால், ஜவுளி உற்பத்தியாளர்கள் பலர், ஆர்டர்களை முடிக்க முடியாமல் தவிக்கின்றனர். மாதத்துக்கு ஒரு முறை நூல் விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே தொழிலை நஷ்டம் இல்லாமல் தொடர்ந்து நடத்த முடியும். அதனால், சீராக விலை நிர்ணயிக்க வேண்டும் என அரசுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், துணி உற்பத்தி அளவை குறைக்கலாமா என ஆலோசித்து வருகின்றனர்.ஜவுளித்தொழிலை நசிவில் இருந்து காப்பாற்ற வேண்டுமெனில், கோன் நூலுக்கு விதிக்கப்பட்டுள்ள ஐந்து சதவீத வாட் வரியை இரண்டு சதவீதமாக குறைக்க வேண்டும்; மாதம் ஒருமுறை நூலுக்கு விலை நிர்ணயிக்க வேண்டும்; மின்வெட்டில் இருந்து ஜவுளித்தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை பல்கலை கழகத்தை மேம்படுத்த தமிழக முதல்வருக்கு துணைவேந்தர் அறிக்கை


தொலைதூர கல்வி மையத்தில் கோடிக்கணக்கில் வருவாய் மோசடி; ஆசிரியர் பற்றாக்குறையால், பல துறைகளின் சிறப்பு அந்தஸ்து இழப்பு; அலுவலர் பற்றாக்குறையால், பணிகள் தேக்கம்; நூலகர்கள் பற்றாக்குறை; அரசின் நிதியுதவிகள் முழுமையாக கிடைக்காத நிலை என, பல பிரச்னைகள், சென்னை பல்கலையில் வரிசையில் நிற்கின்றன.

இவை அனைத்தையும் சமாளித்து, ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல், பதிவாளர், தொலைதூர இயக்குனர், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் நிர்வாகம் சீர்திருத்தம்; இணைப்பு கல்லூரிகளின் தரத்தை உயர்த்துதல், அதிகளவில் நிதியுதவிகளை பெறும் திட்டங்களை வகுத்தல் என, பல சவால்மிக்க பணிகள், துணைவேந்தருக்காக காத்திருக்கின்றன.

புதிய துணைவேந்தர் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து, சென்னை பல்கலை பேராசிரியர்கள் கூறியதாவது:
பல்கலையில் காலியாக உள்ள, 60 ஆசிரியர் பணியிடங்களையும், 160 ஆசிரியல்லாதோர் பணியிடங்களையும் உடனடியாக நிரம்ப வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விடுதி வசதி இல்லை. இதனால், தொலைதூரங்களில் இருந்து, படிக்க வரும் மாணவர்கள் வேறு கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகிறது. மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப, விடுதி வசதிகள் செய்து தர வேண்டும். காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்பவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.

இதற்கிடையே, சென்னை பல்கலையின், புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள தாண்டவன், பல்கலையில் நிறைவேற்ற வேண்டிய முக்கியப் பணிகள் குறித்த பட்டியலை, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் பட்டியலிட்டுள்ளார். ‘விஷன் 2012-15’ என்ற தலைப்பிலான அந்த அறிக்கையில், ஆய்வுகள் - கண்டுபிடிப்புகள், உயர்கல்வி, அடிப்படை வசதிகள், சமூக பொறுப்பு ஆகிய தலைப்புகளில் செய்யவேண்டிய பணிகள் குறித்து விளக்கியுள்ளார்.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்து, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: பல்கலையின் கட்டட அழகை மேம்படுத்தி, வரலாற்று சிறப்புமிக்க இடமாக மாற்ற நடவடிக்கை; அனைத்து துறைகளும், கணினி மையப்படுத்த நடவடிக்கை; படிப்பை தவிர, கலாசாரப் போட்டிகள், விளையாட்டுகளில் மாணவர்கள் ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஆய்வுக்கு பயிற்சி ஆசிரியர், மாணவர்களுக்கு தேவையான நூலக வசதி; ஆய்வு, கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்.புதுப்பிக்கத் தக்க எரிசக்திக்கு சிறப்பு மையங்கள் அமைத்து, மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

முதுகலை பட்ட படிப்பு மாணவர்களுக்கு, ஆய்வு மேற்கொள்ள பயிற்சிகள் அளிக்கப்படும். அறிவியல் மேலாண்மை தொடர்பான அடிப்படை தகவல்களை கணினி மையப்படுத்தி, மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படும். சர்வதேச பல்கலைக் கழகங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, ஆய்வு உதவிகள், முழுமை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாட்டிலுள்ள, பிற பல்கலைக்கழகங்களில், ஒரு பருவ தேர்வு சென்று படிக்கும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கல்வியை மேம்படுத்த சிறப்பு குழு அமைக்கப்படும். தொலைதூர கல்வியை விரிவுபடுத்தும் வகையில், கல்லூரிகளில் மையங்கள் அமைக்கப்பட்டு, பாடத் தகவல்களை அளித்தல், மாணவர்கள் சேர்க்கை நடத்தல், தேர்வுகள் நடத்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.

சிறப்பு வகுப்பு : சமூக பொறுப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். பள்ளி மாணவர்களும், பல்கலைக்கழகம் பற்றிய அறிவை பெறும் வகையில், ஒரு நாள் சிறப்பு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுவர். இவ்வாறு, முதல்வருக்கு அளித்துள்ள அறிக்கையில், தாண்டவன் கூறியுள்ளார்.