தொலைதூர கல்வி மையத்தில் கோடிக்கணக்கில் வருவாய் மோசடி; ஆசிரியர் பற்றாக்குறையால், பல துறைகளின் சிறப்பு அந்தஸ்து இழப்பு; அலுவலர் பற்றாக்குறையால், பணிகள் தேக்கம்; நூலகர்கள் பற்றாக்குறை; அரசின் நிதியுதவிகள் முழுமையாக கிடைக்காத நிலை என, பல பிரச்னைகள், சென்னை பல்கலையில் வரிசையில் நிற்கின்றன.
இவை அனைத்தையும் சமாளித்து, ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல், பதிவாளர், தொலைதூர இயக்குனர், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் நிர்வாகம் சீர்திருத்தம்; இணைப்பு கல்லூரிகளின் தரத்தை உயர்த்துதல், அதிகளவில் நிதியுதவிகளை பெறும் திட்டங்களை வகுத்தல் என, பல சவால்மிக்க பணிகள், துணைவேந்தருக்காக காத்திருக்கின்றன.
புதிய துணைவேந்தர் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து, சென்னை பல்கலை பேராசிரியர்கள் கூறியதாவது:
பல்கலையில் காலியாக உள்ள, 60 ஆசிரியர் பணியிடங்களையும், 160 ஆசிரியல்லாதோர் பணியிடங்களையும் உடனடியாக நிரம்ப வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விடுதி வசதி இல்லை. இதனால், தொலைதூரங்களில் இருந்து, படிக்க வரும் மாணவர்கள் வேறு கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகிறது. மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப, விடுதி வசதிகள் செய்து தர வேண்டும். காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்பவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.
இதற்கிடையே, சென்னை பல்கலையின், புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள தாண்டவன், பல்கலையில் நிறைவேற்ற வேண்டிய முக்கியப் பணிகள் குறித்த பட்டியலை, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் பட்டியலிட்டுள்ளார். ‘விஷன் 2012-15’ என்ற தலைப்பிலான அந்த அறிக்கையில், ஆய்வுகள் - கண்டுபிடிப்புகள், உயர்கல்வி, அடிப்படை வசதிகள், சமூக பொறுப்பு ஆகிய தலைப்புகளில் செய்யவேண்டிய பணிகள் குறித்து விளக்கியுள்ளார்.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்து, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: பல்கலையின் கட்டட அழகை மேம்படுத்தி, வரலாற்று சிறப்புமிக்க இடமாக மாற்ற நடவடிக்கை; அனைத்து துறைகளும், கணினி மையப்படுத்த நடவடிக்கை; படிப்பை தவிர, கலாசாரப் போட்டிகள், விளையாட்டுகளில் மாணவர்கள் ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆய்வுக்கு பயிற்சி ஆசிரியர், மாணவர்களுக்கு தேவையான நூலக வசதி; ஆய்வு, கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்.புதுப்பிக்கத் தக்க எரிசக்திக்கு சிறப்பு மையங்கள் அமைத்து, மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
முதுகலை பட்ட படிப்பு மாணவர்களுக்கு, ஆய்வு மேற்கொள்ள பயிற்சிகள் அளிக்கப்படும். அறிவியல் மேலாண்மை தொடர்பான அடிப்படை தகவல்களை கணினி மையப்படுத்தி, மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படும். சர்வதேச பல்கலைக் கழகங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, ஆய்வு உதவிகள், முழுமை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாட்டிலுள்ள, பிற பல்கலைக்கழகங்களில், ஒரு பருவ தேர்வு சென்று படிக்கும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கல்வியை மேம்படுத்த சிறப்பு குழு அமைக்கப்படும். தொலைதூர கல்வியை விரிவுபடுத்தும் வகையில், கல்லூரிகளில் மையங்கள் அமைக்கப்பட்டு, பாடத் தகவல்களை அளித்தல், மாணவர்கள் சேர்க்கை நடத்தல், தேர்வுகள் நடத்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.
சிறப்பு வகுப்பு : சமூக பொறுப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். பள்ளி மாணவர்களும், பல்கலைக்கழகம் பற்றிய அறிவை பெறும் வகையில், ஒரு நாள் சிறப்பு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுவர். இவ்வாறு, முதல்வருக்கு அளித்துள்ள அறிக்கையில், தாண்டவன் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக