ஜவுளி உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய நூல் ரகங்கள், கடந்த 10 நாட்களில் கிலோவுக்கு ஐந்து முதல் 10 ரூபாய் வரை அதிகரித்துள்ளதால், திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மின்வெட்டு, நூல் விலை உயர்வு காரணமாக, ஜவுளி உற்பத்தி அளவை குறைக்கலாமா என ஆலோசித்து வருகின்றனர்.திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. ஒவ்வொரு தறியிலும் தினமும் சராசரியாக தலா 50 மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படும். இவைகளில், காடாத்துணி, பாலியஸ்டர் ரகம் மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு நாள் துணி உற்பத்தி மதிப்பு ரூ.60 கோடி.
இரு மாவட்டங்களிலும் உற்பத்தி செய்யப்படும் துணிகள், ஈரோடு, மும்பை, டில்லி, குஜராத், ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. துணிகளை வாங்கும் வியாபாரிகள், பெட்ஷீட், திரைசீலை, லுங்கி என பல்வேறு பொருட்களாக மாற்றி, விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் ஜவுளித்தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் ஐந்து லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஓராண்டுக்கு மேலாக இரு மாவட்டத்திலும், தினமும் சராசரியாக நீடித்து வரும் 14 மணி நேர மின்வெட்டு, தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, ஜவுளித் தொழில் கடும் நசிவை சந்தித்து வருகிறது.கடந்த 10 நாட்களில், ஜவுளி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 20 கவுண்ட் நூல் கிலோவுக்கு ரூ.ஐந்து வீதம் 60 கிலோ பேக்கிற்கு ரூ.300 உயர்வு, 30 கவுண்ட் நூல் கிலோவுக்கு ரூ.10 வீதம் 60 கிலோ பேக்கிற்கு ரூ.600 உயர்ந்துள்ளது. இது, ஜவுளி உற்பத்தியாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
நூல் விலை அடிக்கடி அதிகரித்துக் கொண்டே செல்வதால், ஜவுளி உற்பத்தியாளர்கள் பலர், ஆர்டர்களை முடிக்க முடியாமல் தவிக்கின்றனர். மாதத்துக்கு ஒரு முறை நூல் விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே தொழிலை நஷ்டம் இல்லாமல் தொடர்ந்து நடத்த முடியும். அதனால், சீராக விலை நிர்ணயிக்க வேண்டும் என அரசுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், துணி உற்பத்தி அளவை குறைக்கலாமா என ஆலோசித்து வருகின்றனர்.ஜவுளித்தொழிலை நசிவில் இருந்து காப்பாற்ற வேண்டுமெனில், கோன் நூலுக்கு விதிக்கப்பட்டுள்ள ஐந்து சதவீத வாட் வரியை இரண்டு சதவீதமாக குறைக்க வேண்டும்; மாதம் ஒருமுறை நூலுக்கு விலை நிர்ணயிக்க வேண்டும்; மின்வெட்டில் இருந்து ஜவுளித்தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக