Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 4 நவம்பர், 2012

30 மாணவருக்கு ஒரு ஆசிரியர் நியமனம்

நாடு முழுவதும் கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டு 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி தரத்தை உறுதி செய்யும் வகையில் 5ம் வகுப்பு வரை 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், 6ம் வகுப்பில் இருந்து 8ம் வகுப்பு வரை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் நியமிக்க கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்தப்போவதாக ஏற்கனவே தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும் அறிவித்திருந்தார்.

அடுத்த கல்வியாண்டில் இருந்து அனைத்து அரசு ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் விகிதாச்சாரம் அமல்படுத்தும் நடவடிக்கை துவங்கியுள்ளது. தற்போது பல பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விகிதாச்சாரத்திற்கு ஏற்ற ஆசிரியர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சில பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிரியர் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது.

இதை சரி செய்வதற்கு பள்ளிகள் வாரியாக வகுப்புகள்தோறும் மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை குறித்த விவரங்கள் சேகரிக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த விவரங்களை சேகரித்து விரைவில் அனுப்பி வைக்க தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நடுநிலைப்பள்ளிகளில் பாடங்களுக்கு ஏற்பவும் ஆசிரியர்கள் நியமிக்கவேண்டியுள்ளது. கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அடுத்த ஆண்டில் விகிதாச்சாரப்படி நியமனம் அமலுக்கு வரும். இதற்கான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிடும்‘ என்றனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் புதிதாக 5 துறைகள்


சென்னைப் பல்கலைக்கழகத்தில் புதிதாக 5 துறைகளை தொடங்குவதற்கு பல்கலைக்கழக செனட் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

 இதையடுத்து, சமூகப் பணி, மகளிரியல், பயோ-இன்ஃபர்மேடிக்ஸ், நெட்வொர்க் சிஸ்டம்ஸ் அண்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெட்டீரியல் சயின்ஸ் ஆகிய துறைகள் தொடங்கப்பட உள்ளன. இதன்மூலம் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளின் எண்ணிக்கை 78 ஆக அதிகரிக்கிறது.

 சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் கூட்டம் உயர் கல்வித் துறைச் செயலாளரும், சென்னைப் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் குழுவின் அமைப்பாளருமான டி.எஸ். ஸ்ரீதர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்களும் செனட் குழுவின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்பட்டன.

 இதில் பல முடிவுகளுக்கு ஒப்புதலும் வழங்கப்பட்டது.

சி.ஆர்.பி.எப்.(CRPF ), - ல் கான்ஸ்டபிள்கள் பணி வாய்ப்பு


சி.ஆர்.பி.எப்., என்ற பெயரில் அறியப்படும் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் 1949ல் நிறுவப்பட்டது. தற்போது 60 ஆண்டு சேவையைக் கடந்து இந்தியாவின் முக்கியமான ஒரு படையாக முத்திரை பதித்து வருகிறது.

இந்தப் படைக்கு 207 பட்டாலியன்களும், 37 குழு மையங்களும், 11 பயிற்சி நிறுவனங்களும், 17 மருத்துவமனைகளும் உள்ளன. இந்தப் படையில் கான்ஸ்டபிள் பிரிவிலான 167 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்

மத்திய சேமக் காவல் படையின் கான்ஸ்டபிள் பதவி தமிழகத்தைப் பொறுத்தவரை டிரைவர் பிரிவில் 51 இடங்களும், பிட்டர் பிரிவில் 16 இடங்களும், பக்ளர் பிரிவில் 14 இடங்களும், டெய்லர், வாட்டர் கேரியர், வாஷர் மேன் பிரிவுகளில் தலா 9 இடங்களும், காப்ளர் மற்றும் பெண் ஹேர் டிரஸ்ஸர் பிரிவில் தலா 4 இடங்களும், கார்பென்டர் பிரிவில் 3 இடங்களும், பிராஸ் பேண்டு, மகளிர் குக் பிரிவுகளில் தலா 2 இடங்களும், ஆண் குக் பிரிவில் 22 இடங்களும், சபாய்கர்மாச்சாரி பிரிவில் 12 இடங்களும், பார்பர் பிரிவில் 10 இடங்களும், கார்டனர் பிரிவில் 1 இடமும் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்

சி.ஆர்.பி.எப்.,பின் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.08.2012 அன்று அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும், 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பத்தாம் வகுப்பிற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இந்தப் பதவிகளில் டிரைவர் மற்றும் பிட்டர் பதவிக்கு குறிப்பிட்ட கல்வித் தகுதியும், இதர பதவிகளான பக்ளர், டெய்லர், காப்ளர், கார்பென்டர், கார்டனர், பெயின்டர், பைப் பேண்டு, பிராஸ் பேண்டு, குக், வாட்டர் சப்ளையர், சபாய்கர்மாச்சாரி, பார்பர், வாஷர்மேன், ஹேர் டிரஸ்ஸர் போன்ற பதவிகளுக்கு அனுபவ ரீதியான பயிற்சியும் தேவைப்படும். இந்தத் தகுதிகளை அறியும் விதத்தில் நடத்தப்படும் டிரேடு டெஸ்டை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.

இதர தகவல்கள்

சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸின் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.50/ஐ டி.டி., போஸ்டல் ஆர்டர் அல்லது பேங்கர்ஸ் செக் மூலமாக Deputy Inspector General of Police என்ற பெயரில் விண்ணப்பிக்கும் பகுதிக்கு ஏற்ற இடத்தில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.

பிஸிக்கல் எபீசியன்சி டெஸ்ட், பிஸிக்கல் ஸ்டாண்டர்ஸ் டெஸ்ட், எழுத்துத் தேர்வு போன்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். முழுமையாகப் பூர்த்தி செய்த பரிந்துரைத்த படிவ மாதிரியிலான விண்ணப்பத்துடன் உரிய இணைப்புகளை இணைத்து தொடர்புடைய அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்:26.11.2012. இணையதள முகவரி http://crpf.nic.in/RECRUITMENT/159912.pdf