Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 1 நவம்பர், 2012

பெண்களுக்கு செல்போன் தடை :ராஜஸ்தான் மாநிலம் பண்டாரேஸ் மக்கள் பஞ்சாயத்தில் தீர்மானம்


படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவருக்கும் தகவல் தொடர்பினை செல்போன்கள் எளிதாக்கியிருந்தாலும், இதனால் பல்வேறு தர்மசங்கடங்களும் ஏற்படுகின்றன.

குறிப்பாக இளைஞர்களின் காதலை வளர்க்கும் கருவியாக செல்போன்கள் மாறிவிட்டதால்,  பெற்றோர்களைப் பொறுத்தவரை குடும்ப கவுரவத்தை அழிக்கும் ஆயுதமாகவே தெரிகிறது. இவ்வாறு சமுதாயத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டதால் பெண்கள் செல்போன்கள் பயன்படுத்துவதற்கு ராஜஸ்தானில் உள்ள ஒரு சமூக பஞ்சாயத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

துஸா மாவட்டம் பண்டாரேஸ் நகரில் நன்கு படித்த ஒரு பெண், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை காதலித்து வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதனையடுத்து பண்டாரேஸ் நகரில் உள்ள அனைத்து சமூகத்தையும் சேர்ந்த பெரியவர்கள் கொண்ட பஞ்சாயத்து கூட்டம் நடந்தது.

இதில் பெண்களுக்கு செல்போன்கள் வழங்கக் கூடாது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த தீர்மானத்தில் கிராம வாசிகள் கையெழுத்திட்டுள்ளனர். இளைஞர்கள், இளம்பெண்கள் கையில் செல்போன்களை கொடுத்து சுதந்திரமாக பேச விடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இந்த உண்மையை கருத்தில் கொண்டு, பெண்கள் செல்போன்கள் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. யாராவது தங்கள் வீட்டு பெண்களுக்கு செல்போன்கள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் கொடுக்கலாம். ஆனால், ஒவ்வொருவரும் பஞ்சாயத்து தீர்மானத்தை பின்பற்றினால் நல்லது என்று பஞ்சாயத்து தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை ஒருவரும் புகார் அளிக்கவில்லை. அப்படி வந்தால் அதுபற்றி பரிசீலனை செய்யப்படும் என்று மாவட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

உன்னதமான "பாலியேட்டிவ் கேர்" படிப்பு


புற்றுநோய் போன்றவைகளால் பாதிக்கப்படுவர்கள் தங்களின் நோய் முற்றிய இறுதி கட்டத்தில், வலியால் மிகவும் வேதனைப்படுவார்கள். அத்தகைய வலியை குறைக்க உதவும் மருத்துவத்துறை ஒன்று இருக்கிறது. ஆங்கிலத்தில் Palliative Care எனப்படும் இந்த துறையில் பல வேலைவாய்ப்புகள் உள்ளன.

ஒரு நோயாளியினுடைய வாழ்க்கையின் மிகவும் சோகமான மற்றும் வேதனை மிகுந்த கட்டத்தில், அவரின் துயரை ஓரளவு நீக்குவதற்கு  உதவும்  ஒரு உன்னதமான பணி இதுவாகும். இச்சேவையின் மூலம், நோயாளிக்கு மனதளவிலும் தைரியம் கொடுக்க முடியும். இப்படிப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கானது.

இந்த வலி நிவாரணி தொடர்பான மருத்துவத் துறையில் பணியாற்றுவது சற்றே சாவாலான விஷயம் தான். இத்துறையானது இந்தியாவில் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், இதன் முக்கியத்துவம் நாளுக்குநாள் கூடி வருகிறது.

The Indian Association of Palliative Care (IAPC) என்ற அமைப்பானது கடந்த 1995ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய அரசின் ஆலோசனையில் நிறுவப்பட்ட இந்த அமைப்பானது இத்துறையில் கல்வி செயல்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.

வழங்கப்படும் படிப்புகள்:

IAPC மற்றும் பல கல்வி நிறுவனங்கள் Palliative Care தொடர்பான பல அடிப்படை படிப்புகளை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்குகின்றன. இந்தப்படிப்பு 2 வகைப்படும். முதல் பாகமானது 8 வாரங்கள் தொலைநிலைக் கல்வியைக் கொண்டது மற்றும் Palliative Care தொடர்பான அறிமுக அம்சங்களும் உண்டு.

இரண்டாம் பாகமானது விருப்பப்பட்ட கிளீனிக்கில், Palliative Care படிப்பில் Communication skills. Psychological Issues. Ethical and Spiritual Issues. Pain Management. Symptom management. Bereaement Counselling, Palliative Care emergencies. End of life care and Practical issues related to death போன்றவையும் அடங்கும்.

இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

Institute of Palliative Medicine (AIIMS), Delhi

Institute of Palliative Medicine (Calicut)

TMCH (Mumbai), Bangalore Baptist Hospital. IPC (Thrissur)

மாணவனுக்கு மாதச்சம்பளம் 70 லட்சம்


கேரளாவில் உள்ள கோழிக்கோடு என்.ஐ.டி., கல்லூரியில்  படிக்கும் திஜூ ஜோஸ் என்ற எம்.டெக்., மாணவர், ஆண்டுக்கு 70 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு தேர்வாகியுள்ளார்.

கேரளாவில் இதுவரை எந்த இன்ஜினியரிங் மாணவரும், இவ்வளவு பெரிய சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்ததில்லை. இவர்தான் முதல் முறையாக சாதித்துக் காட்டியுள்ளார்.

இதற்குமுன் 22 லட்சம் ரூபாய் என்பதே சாதனையாக இருந்தது. கல்லூரியில்   நடந்த வளாகத் தேர்வில் கூகுள் நிறுவனம், அமெரிக்காவின் கலிபோர்னியா அலுவலகத்துக்கு இம்மாணவனை தேர்வு செய்துள்ளது. இன்னும், இம்மாணவருக்கு ஓராண்டு படிப்பு பாக்கி உள்ளது. இதன் பின் 2013 அக்., மாதத்தில் பணியில் சேர இருப்பதாக அம்மாணவர் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பவருக்கும் தயாரிப்பவருக்கும் தினமும் அபராதம்


நெல்லை மாநகரப்பகுதியில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் 100 ரூபாயும், தயாரிப்பாளர்களுக்கு 500 ரூபாயும் தினமும் அபராதம் விதிக்கவேண்டும் என சுகாதார ஆய்வாளர்களுக்கு மாநகராட்சி கூட்டத்தில் மேயர் உத்தரவிட்டார்.நெல்லை மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயர் விஜிலா தலைமையில் நடந்தது.

துணைமேயர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:

மேயர்: தமிழகத்தில் மழைநீர் சேமிப்பு திட்டத்தை அமல்படுத்தவும், மின் தட்டுப்பாட்டை போக்க சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்க சூரிய சக்தி கொள்கை, போலீசில் இளைஞர் படையை உருவாக்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.முன்னாள் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் இரங்கல் தீர்மானத்தை மேயர் விஜிலா வாசிக்க, சபை அரை மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது.தொடர்ந்து அரை மணிநேரம் கழித்து கூட்டம் துவங்கியதும், வாயில் கறுப்பு துணி கட்டிக் கொண்டும், கையில் ஒரு போர்டுடனும் 3வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியன் வந்தார். அந்த போர்டில் மக்கள் பிரச்னைக்காக போராடிய கவுன்சிலர் மீது பொய் வழக்கு போடுவதா என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனால் வாயில் இருக்கும் கருப்புத்துணியை அவிழ்த்துவைத்துவிட்டு, கழுத்தில் உள்ள போர்டை வெளியே வைத்துவிட்டு வருமாறு மேயர் அறிவுறுத்தினார். 3 முறை எச்சரிக்கை செய்தார். ஆனால் கவுன்சிலர் அதை கேட்காமல் சபையில் அமர்ந்தார். இதையடுத்து கவுன்சிலர் சுப்பிரமணியன் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுத்தார். இதனால் கவுன்சிலர் சுப்பிரமணியன் வெளியேற்றப்பட்டார்.

ஹைதர்அலி: மேலப்பாளையம் மண்டலத்தில் குப்பைகளை அகற்ற கூடுதல் வாகனங்களை வாங்களை வழங்கவேண்டும்.மேயர்: சுனாமி துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் ரூ.110லிருந்து ரூ.160 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்படும்.

ஹைதர்அலி: மேலப்பாளையம் மண்டலத்தில் விரிவாக்கப்பகுதிகள் அதிகம் உள்ளன. துப்புரவு பணியாளர்கள் குறைவாகவே உள்ளனர். வரிவிதிப்பு குறித்து டிமாண்ட் நோட்டீஸ் அச்சடிக்க அந்தந்த மண்டலங்களுக்கே அதிகாரம் வழங்கவேண்டும்.

விஜயன்: 12வது வார்டில் பொதுஇடங்களில் ஆக்ரமிப்புகள் உள்ளன. ஆக்ரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கமாலுதீன்: நெல்லை மாநகராட்சியில் மறைந்த முன்னாள் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் படத்தை வைக்கவேண்டும். நெல்லை மாநகரப்பகுதியில் பொருட்காட்சிகள் நடத்தும் போது மாநகராட்சிக்கு வசூலிக்கும் கட்டணத்தை அதிகரிக்கவேண்டும்.

நடராஜன்: மேலப்பாளையம் மண்டலத்தில் குப்பைத் தொட்டிகள் அதிகம் இல்லை. கூடுதலாக குப்பைத் தொட்டிகளை வைத்து குப்பைகளை அகற்றவேண்டும்.மேயர்: பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் குறைத்துக் கொள்ளவேண்டும்.சுப்பிரமணியன் (6வது வார்டு): குப்பைத் தொட்டிகள் வைத்து குப்பைகளை உடனுக்குடன் அகற்றாவிடில் நோய் பரவ வாய்ப்புள்ளது.

உமாபதிசிவன்: நெல்லை மாநகராட்சியின் கடந்த 3 கூட்டங்களுக்கு கமிஷனர் வரவில்லை. கவுன்சிலர்கள் 3 கூட்டங்களுக்கு வராவிட்டால் நடவடிக்கை எடுக்கிறீர்கள். நெல்லை மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை போக்க திருச்செந்தூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு மத்திய அரசில் இருந்து நிதி பெற்றுத்தர மத்திய அமைச்சர் வாசன் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேயர்: நெல்லை மாநகராட்சியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பூச்சியியல் துறை நிபுணர் ஒருவரையும், உணவு பாதுகாப்பு அலுவலர்களையும் அரசு பணி நியமனத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.உமாபதிசிவன்: காலிமனை தீர்வை வசூலிப்பதில் முரண்பாடு உள்ளது. 13 அரையாண்டு என கூறிவிட்டு 14 அரையாண்டு கட்டணம் வசூலிக்கின்றனர். இதில் உள்ள குளறுபடிகளை போக்கவேண்டும்.கணேஷ்: நெல்லை டவுனில் பஸ்களை நிறுத்திச் செல்ல வசதியாக தனியார் மடத்திற்கு சொந்தமான 8 ஏக்கர் இடத்தில் பஸ்ஸ்டாண்ட் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அழகுராஜ்: நெல்லையில் சுகாதாரப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு இன்று வரை புழக்கத்தில் உள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனையாளர்களை தடுக்கவேண்டும்.மேயர்: நெல்லை மாநகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது. இருப்பினும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விற்பனையாளர்களுக்கு 100 ரூபாயும், தயாரிப்பாளர்களுக்கு 500 ரூபாயும் அபராதம் விதிக்க சுகாதார ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்களுக்கு தினமும் அபராதம் விதிக்கவேண்டும்.

அழகுராஜ்: பாலித்தீன் பைகளால் கழிவு நீரோடை, பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்யவேண்டும். வாறுகால்களில் பொதுப்பணித்துறையினர் தூர்வாரிவிட்டு கழிவுகளை கரையிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளனர். அதை அகற்றவேண்டும். எனது வார்டு இளநிலைப் பொறியாளரின் பணிகளில் திருப்தி இல்லை. அவரை இடமாற்றம் செய்யவேண்டும்.

முருகன்: வீடுகளை இடித்து கழிவுகளை வாறுகால்களிலும், கால்வாய்களிலும் போடுகின்றனர். ரோட்டோரங்களில் கொட்டுகின்றனர். மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது அதிக அபராதம் விதிக்கவேண்டும்.

ராமகிருஷ்ணன்: மழையினால் கீழே விழும் மரங்களை உடனுக்குடன் ஏலத்தில் விடவேண்டும். இல்லையேல் மழையில் நனைந்து, கரையான் அரிந்து மரங்கள் செல்லரித்து போகின்றன. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.

தொடர்ந்து மாநகராட்சியின் ஓராண்டு சாதனை குறித்து பேசிய ஆளும் கட்சி தவிர, திமுக, காங்., மதிமுக, பா.ஜ., மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் என அனைவரும் மாநகராட்சியின் செயல்பாடுகளையும், மேயரையும் பாராட்டி பேசினர்.