Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 1 நவம்பர், 2012

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பவருக்கும் தயாரிப்பவருக்கும் தினமும் அபராதம்


நெல்லை மாநகரப்பகுதியில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் 100 ரூபாயும், தயாரிப்பாளர்களுக்கு 500 ரூபாயும் தினமும் அபராதம் விதிக்கவேண்டும் என சுகாதார ஆய்வாளர்களுக்கு மாநகராட்சி கூட்டத்தில் மேயர் உத்தரவிட்டார்.நெல்லை மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயர் விஜிலா தலைமையில் நடந்தது.

துணைமேயர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:

மேயர்: தமிழகத்தில் மழைநீர் சேமிப்பு திட்டத்தை அமல்படுத்தவும், மின் தட்டுப்பாட்டை போக்க சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்க சூரிய சக்தி கொள்கை, போலீசில் இளைஞர் படையை உருவாக்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.முன்னாள் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் இரங்கல் தீர்மானத்தை மேயர் விஜிலா வாசிக்க, சபை அரை மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது.தொடர்ந்து அரை மணிநேரம் கழித்து கூட்டம் துவங்கியதும், வாயில் கறுப்பு துணி கட்டிக் கொண்டும், கையில் ஒரு போர்டுடனும் 3வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியன் வந்தார். அந்த போர்டில் மக்கள் பிரச்னைக்காக போராடிய கவுன்சிலர் மீது பொய் வழக்கு போடுவதா என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனால் வாயில் இருக்கும் கருப்புத்துணியை அவிழ்த்துவைத்துவிட்டு, கழுத்தில் உள்ள போர்டை வெளியே வைத்துவிட்டு வருமாறு மேயர் அறிவுறுத்தினார். 3 முறை எச்சரிக்கை செய்தார். ஆனால் கவுன்சிலர் அதை கேட்காமல் சபையில் அமர்ந்தார். இதையடுத்து கவுன்சிலர் சுப்பிரமணியன் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுத்தார். இதனால் கவுன்சிலர் சுப்பிரமணியன் வெளியேற்றப்பட்டார்.

ஹைதர்அலி: மேலப்பாளையம் மண்டலத்தில் குப்பைகளை அகற்ற கூடுதல் வாகனங்களை வாங்களை வழங்கவேண்டும்.மேயர்: சுனாமி துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் ரூ.110லிருந்து ரூ.160 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்படும்.

ஹைதர்அலி: மேலப்பாளையம் மண்டலத்தில் விரிவாக்கப்பகுதிகள் அதிகம் உள்ளன. துப்புரவு பணியாளர்கள் குறைவாகவே உள்ளனர். வரிவிதிப்பு குறித்து டிமாண்ட் நோட்டீஸ் அச்சடிக்க அந்தந்த மண்டலங்களுக்கே அதிகாரம் வழங்கவேண்டும்.

விஜயன்: 12வது வார்டில் பொதுஇடங்களில் ஆக்ரமிப்புகள் உள்ளன. ஆக்ரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கமாலுதீன்: நெல்லை மாநகராட்சியில் மறைந்த முன்னாள் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் படத்தை வைக்கவேண்டும். நெல்லை மாநகரப்பகுதியில் பொருட்காட்சிகள் நடத்தும் போது மாநகராட்சிக்கு வசூலிக்கும் கட்டணத்தை அதிகரிக்கவேண்டும்.

நடராஜன்: மேலப்பாளையம் மண்டலத்தில் குப்பைத் தொட்டிகள் அதிகம் இல்லை. கூடுதலாக குப்பைத் தொட்டிகளை வைத்து குப்பைகளை அகற்றவேண்டும்.மேயர்: பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் குறைத்துக் கொள்ளவேண்டும்.சுப்பிரமணியன் (6வது வார்டு): குப்பைத் தொட்டிகள் வைத்து குப்பைகளை உடனுக்குடன் அகற்றாவிடில் நோய் பரவ வாய்ப்புள்ளது.

உமாபதிசிவன்: நெல்லை மாநகராட்சியின் கடந்த 3 கூட்டங்களுக்கு கமிஷனர் வரவில்லை. கவுன்சிலர்கள் 3 கூட்டங்களுக்கு வராவிட்டால் நடவடிக்கை எடுக்கிறீர்கள். நெல்லை மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை போக்க திருச்செந்தூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு மத்திய அரசில் இருந்து நிதி பெற்றுத்தர மத்திய அமைச்சர் வாசன் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேயர்: நெல்லை மாநகராட்சியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பூச்சியியல் துறை நிபுணர் ஒருவரையும், உணவு பாதுகாப்பு அலுவலர்களையும் அரசு பணி நியமனத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.உமாபதிசிவன்: காலிமனை தீர்வை வசூலிப்பதில் முரண்பாடு உள்ளது. 13 அரையாண்டு என கூறிவிட்டு 14 அரையாண்டு கட்டணம் வசூலிக்கின்றனர். இதில் உள்ள குளறுபடிகளை போக்கவேண்டும்.கணேஷ்: நெல்லை டவுனில் பஸ்களை நிறுத்திச் செல்ல வசதியாக தனியார் மடத்திற்கு சொந்தமான 8 ஏக்கர் இடத்தில் பஸ்ஸ்டாண்ட் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அழகுராஜ்: நெல்லையில் சுகாதாரப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு இன்று வரை புழக்கத்தில் உள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனையாளர்களை தடுக்கவேண்டும்.மேயர்: நெல்லை மாநகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது. இருப்பினும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விற்பனையாளர்களுக்கு 100 ரூபாயும், தயாரிப்பாளர்களுக்கு 500 ரூபாயும் அபராதம் விதிக்க சுகாதார ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்களுக்கு தினமும் அபராதம் விதிக்கவேண்டும்.

அழகுராஜ்: பாலித்தீன் பைகளால் கழிவு நீரோடை, பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்யவேண்டும். வாறுகால்களில் பொதுப்பணித்துறையினர் தூர்வாரிவிட்டு கழிவுகளை கரையிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளனர். அதை அகற்றவேண்டும். எனது வார்டு இளநிலைப் பொறியாளரின் பணிகளில் திருப்தி இல்லை. அவரை இடமாற்றம் செய்யவேண்டும்.

முருகன்: வீடுகளை இடித்து கழிவுகளை வாறுகால்களிலும், கால்வாய்களிலும் போடுகின்றனர். ரோட்டோரங்களில் கொட்டுகின்றனர். மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது அதிக அபராதம் விதிக்கவேண்டும்.

ராமகிருஷ்ணன்: மழையினால் கீழே விழும் மரங்களை உடனுக்குடன் ஏலத்தில் விடவேண்டும். இல்லையேல் மழையில் நனைந்து, கரையான் அரிந்து மரங்கள் செல்லரித்து போகின்றன. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.

தொடர்ந்து மாநகராட்சியின் ஓராண்டு சாதனை குறித்து பேசிய ஆளும் கட்சி தவிர, திமுக, காங்., மதிமுக, பா.ஜ., மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் என அனைவரும் மாநகராட்சியின் செயல்பாடுகளையும், மேயரையும் பாராட்டி பேசினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக