தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்காவில் 500 ஏக்கர் பரப்பளவில் 920 கோடி ரூபாய் முதலீட்டில் சூரிய மின்சக்தி பூங்கா நிறுவும் திட்டத்திற்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கும் திருவாளர்கள் ராசி கிரீன் எர்த் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த பூங்காவில் 100 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்படும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ல், தமிழகத்தில், வரும் 11 ஆண்டுகளில் சூரிய சக்தி மூலம் 5000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
மேலும், தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012-ல், தமிழகத்தில் 2015-ஆம் ஆண்டுக்குள் சுமார் 3000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்டங்களை முதலீட்டாளர்கள் செயல்படுத்துவதற்கு ஏதுவாக சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்காக்கள் அமைக் கப்படுவதை ஊக்குவிப்பதும் இக்கொள்கையின் ஒரு அம்சமாகும்.
இந்த இலக்கினை எட்டும் வகையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் வரும் 5 ஆண்டுகளில் சுமார் 1000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்களை செயல்படுத்திட சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்காக் களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நிறுவுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்காவில் 500 ஏக்கர் பரப்பளவில் 920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 மெகா வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் வகையிலான சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கும், திருவாளர்கள் ராசி கிரீன் எர்த் எனர்ஜி பிரை வேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழக அரசின் சார்பில் முதன்மைச் செயலாளரும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான ஹன்ஸ் ராஜ் வர்மா, திருவாளர்கள் ராசி கிரீன் எர்த் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் நரசிம்மனும் கையெழுத்திட்டனர்.
இந்த சூரிய மின்சக்தி பூங்கா, சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களை சிறப்பாக அமைப்பதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், வடிகால் வசதிகள், போதுமான தண்ணீர் வசதி, செம்மைப்படுத்தப்பட்ட நில வடிவமைப்பு, மின்சாரம் வெளியேற்று வசதிகள் போன்றவைகளை சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுத்தித் தரும் வகையில் அமைக்கப்படும். இதனால், இப்பூங்காவில் அதிக அளவில் சூரிய மின்சக்தி நிலையங்களை அமைப் பதற்கு முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுவர். இந்த சூரிய மின்சக்தி பூங்காவானது அரசு மற்றும் தனியாருடைய கூட்டு முயற்சியில் இந்தியாவிலேயே முதன் முறையாக பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது.
இந்த சூரிய மின்சக்தி பூங்கா திட்டம் 12 மாதங்களில் முடிக்க இலக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர். இந்தப் பூங்கா வானது, தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012-ன்படி அமைக்கப்படும் முதலாவது சூரிய மின்சக்தி பூங்காவாகும். நிகழ்ச்சியில் நிதி, மின்சாரம், தொழில்துறை முதன்மைச் செயலாளர், எரிசக்தித்துறை செயலாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எல். அன் டி நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ராஜவேல், கெனடியன் சோலார் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் வினய் ஷெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.