தொழில் கல்வி அளிக்கும் வகையில், எட்டு புதிய பட்டய படிப்புகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலையில் துவங்கப்படுகின்றன.
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில், சமுதாய கல்லூரிகள் மூலம், இளைஞர்களுக்கு தொழில்நுட்ப கல்வி வழங்கப்படுகிறது. சுகாதார உதவியாளர், ஆடை வடிவமைப்பு, கணினி வன்பொருள் பழுது பார்ப்பு, அலைபேசி பழுது பார்ப்பு, அழகு கலை நிபுணர் பயிற்சி, நான்கு சக்கர பழுது பார்த்தல் பயிற்சி என, 21 வகையான பட்டய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
ஓராண்டு பட்டய படிப்பு முடித்த மாணவர்களுக்கு, தொழில் துவங்குவதற்காக, 1,000 ரூபாய் அரசு நிதியுதவி அளிக்கிறது. தமிழகம் முழுவதும், 204 சமுதாய கல்லூரிகளில், 6,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்வி கற்று வருகின்றனர்.
மாணவர்களுக்கு, தொழில் கல்வியை கொண்டு செல்லும் வகையில், 2012-13ம் ஆண்டில் பொருத்துதல், நெசவு, பின்னாலாடை, ஆடை சாயமேற்றுதல் மற்றும் அச்சிடுதல் பட்டயம், ஆயத்த ஆடை விற்பனைப்படுத்துதல், திருநங்கைகளின் மனித உரிமைக்கான சான்றிதழ் படிப்பு, சைபர் சட்டங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் புலனாய்வு உள்ளிட்ட, எட்டு புதிய பட்டய படிப்புகள் துவங்கப்படுகின்றன.
புதிய பட்டய படிப்புகளுக்கான, பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜூனில் துவங்கும் கல்வியாண்டு முதல், புதிய பட்டய படிப்புகள் சமுதாய கல்லூரிகளில் இடம் பெறுகின்றன.
இதுகுறித்து சமுதாய கல்லூரிகள் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறியதாவது: தற்போதைய சூழ்நிலைக்கேற்ப, தொழிற் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என, மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு திறந்தவெளி பல்லைக்கழகத்தில் விவாதிக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. வேலைவாய்ப்புகள் அதிகமுள்ள, எட்டு தொழில்களில், புதிய பட்டயப் படிப்புகள் கொண்டு வரப்பட்டுகின்றன.
இதற்கு, டில்லி தொலைதூர கல்வி மாமன்றம், 20 லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இவ்வாறு தியாகராஜன் கூறினார்.