நெல்லை மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நெல்லை மாவட்டத்தில் தகவல் தொழில் நுட்பத்துறை மின்னாளுமைச் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ராதாபுரம் வட்டம் முன்னோடி வட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாளை (8ம் தேதி) ராதாபுரம் வட்டத்தில் மின்னாளுமைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் வருவாய்த்துறையின் கீழ் வழங்கப்படும் சான்றுகளான ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, முதல் பட்டதாரி சான்று, கணவரால் கைவிடப்பட்ட சான்று ஆகியவை இணையதளம் மூலமாக வழங்கப்படும். மேலும் சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித்திட்டம், ஈ.வே.ரா.மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம், முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் ஆகியவை இணையதளம் மூலமாக வழங்கப்படும்.
மேற்படி சான்றுகள், நிதியுதவி பெற மனு செய்திடும் பொதுமக்கள் அவரவர் பகுதிகளில் உள்ள பொதுச் சேவை மையங்களான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், டவுன் பஞ்., அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்று ஒவ்வொன்றிர்க்கும் 50 ரூபாய் எனவும், சமூக நலத்துறை மூலம் நிதியுதவி பெற விண்ணப்பம் செய்பவர்களுக்கு 100 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கிராம வாரியாக பொதுசேவை மையம் விபரம்
மாவட்ட மின் ஆளுமை திட்டத்தின் கீழ் ராதாபுரம், குட்டம், விஜயாபதி, தெற்கு கள்ளிகுளம், சமூக ரெங்கபுரம், திசையன்விளை, கோட்டைக் கருங்குளம், புலிமான்குளம், தெற்கு கருங்குளம், பணகுடி, ஆனைகுளம், காவல் கிணறு, பழவூர் மற்றும் வள்ளியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வள்ளியூர் திசையன்விளை, பணகுடியில் அமைந்துள்ள டவுன் பஞ்., அலுவலகங்கள், ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே ராதாபுரம் வட்டத்திற்குட்பட்ட அனைத்து பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் இந்த புதிய இணைய தள சேவையை பயன்படுத்தி விரைவில் தங்களுக்குரிய சான்றிதழ், நிதியுதவி ஆகியவைகளை இணையதளம் வழியாகவே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இத்தகவலை கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்தார்.