"மானியத் தொகையை, நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை கைவிட்டு, மாநில அரசுகள் மூலம், மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்; இல்லையேல், நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்த முடியாது' என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, அவர் நேற்று எழுதிய கடிதம்: பயனாளிகளுக்கு நேரடி மானியம் அளிக்கும் திட்டத்தின், இரண்டாவது கட்டத்தை, 2013 ஜூலை மாதம் முதல், மத்திய அரசு துவங்க உள்ளதாக அறிகிறேன். ஏற்கனவே, தமிழகத்தில், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களை, இத்திட்டத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின், இத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறேன். ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசை, தவிர்த்துவிட்டு, மக்களை நேரடியாக அணுகுவது, கூட்டாட்சி தத்துவம் மற்றும் பரவலாக்கப்பட்ட ஜனநாயக முறைக்கு எதிரானது. பணத்தின் மூலம், மாநில மக்கள் மீது, மத்திய அரசு செல்வாக்கு செலுத்துவதாக அமைகிறது. கல்வி உதவித் தொகை, மருத்துவ கால உதவி, பென்ஷன் ஆகியவற்றை, வங்கிக் கணக்குகள் மூலம், பயனாளிகளுக்கு அளித்து வருகிறது. ஆனால், மத்திய அரசு அறிமுகம் செய்யும், நேரடி மானியம் அளிக்கும் திட்டம், மாநில அரசு மீது, மேலாண்மை செலுத்துவதாக அமையும். பொது வினியோகத் திட்டம், உர மானியம், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு, நேரடி மானியம் அளிக்க முயற்சிப்பதை, துவக்கத்திலிருந்து எதிர்த்து வருகிறோம். பணத்தை அளிப்பதற்காக மட்டுமல்ல, சந்தையில் பொருட்கள் தேவையான நேரத்தில், போதியளவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், நேரடி மானியத்தை எதிர்க்கிறோம். பயனாளிகளை முழுமையாக அறிந்து, பட்டியல் எடுக்கும் பணியை மாநில அரசு மேற்கொள்கிறது. ஆனால், நேரடி மானியத்தை மத்திய அரசு அளிப்பது, பொறுப்புகளை தட்டிக் கழிப்பதாக உள்ளது.
மாநில அரசுகளை ஆலோசிக்காமல், நேரடி மானியத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என, மத்திய திட்ட கமிஷன், கண்டிப்பான அறிவுரைகளையும், வழிகாட்டி நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. ஆனால், மாநில அரசுகளை ஆலோசிக்காமல், மத்திய அரசு, தன்னிச்சையாக முடிவெடுத்து, ஒவ்வொரு திட்டங்களையும் அறிவிக்கிறது. அதன் பின், அம்முடிவை அமல் செய்யும் களமாக மாநில அரசுகளை பயன்படுத்துகிறது. இந்த அணுகுமுறை, முற்றிலும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. நேரடி மானியத் திட்டத்துக்கு, தயார் செய்யப்பட்டுள்ள, 25 திட்டங்களில், பல திட்டங்களில், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு உள்ளது. இதில், தேசிய ஊரக சுகாதார திட்டத்தில், கர்ப்பிணி பெண்களுக்கான பாதுகாப்பு திட்டம் ஒன்று.
தமிழகத்தில் அமல்படுத்தப்படும், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் போலவே, இந்திரா காந்தி கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பு திட்டத்தை, மத்திய அரசு அமல் செய்கிறது. இத்திட்டத்துக்கு, நேரடி மானியத்தை பயனாளிகளுக்கு அளிக்க முன்வருகிறது. ஒரு மாநிலத்தில், ஏற்கனவே ஒரு திட்டம் செயல்படும்போது, அதுபோன்ற மற்றொரு திட்டத்தை, மத்திய அரசு அமல் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதில், மாநிலத் திட்டத்துக்கு ஆதரவு அளிக்கலாம். மேலும், கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களை, மாநில அரசு அமல்படுத்திவிட்டு, திட்டத் தொகையில், ஒரு பகுதியை, மத்திய அரசிடம் பெறுகிறது. இந்த நிலையில், மத்திய அரசு, நேரடியாக பணம் அளித்தால், மாநில அரசுகள் பாதிக்கப்படும். எனவே, தற்போது திட்டமிட்டுள்ள முறையில், நேரடி மானியத் திட்டத்தை அமல் செய்தால், பெரும் நிர்வாக பிரச்னைகள் ஏற்படும். எனவே, நேரடி மானியத் திட்டத்தை, மாநில அரசுகள் மூலம், மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். இல்லையேல், தமிழகத்தில் அத்திட்டத்தை செயல்படுத்த முடியாது. இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார்.