தகவல் தொடர்பு தொழில் நுட்பத்துறையில் வருங்காலத்தில் மாணவ, மாணவிகளின் தேவை அதிகரித்து உள்ளது. அதற்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் தமிழ்நாடு தகவல் தொடர்பு தொழில் மையம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்லூரி பேராசிரியர்களுக்கு கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 கருத்தரங்கம் நடத்தி 6 ஆயிரத்து 500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
9–வது கருத்தரங்கம் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் சி.சமயமூர்த்தி தலைமை தாங்கி, கருத்தரங்கை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–
தகவல் தொழில் நுட்பம்
நாடு வளர்ந்து வரும் நிலையில் தகவல் தொழில் தொடர்பு தொழில் நுட்பம் என்பது அவசியமானது. போலீஸ் துறையில் கூட கம்ப்யூட்டரின் தேவை அதிகரித்து உள்ளது. சைபர் கிரைம் குற்றவாளிகளை பிடிக்க கம்ப்யூட்டரை பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
தமிழக அரசு, தகவல் தொழில் நுட்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தகவல் தொழில் நுட்ப பூங்காங்களை தொடங்கி உள்ளது. இந்த பூங்காக்களில் பல்வேறு முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் தொழில் தொடங்கி உள்ளன.
மானியத்துடன் கடன்
தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக வரி விதிப்பில் விதி விலக்கு அளித்து உள்ளது. ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கி வருகிறது.
இந்த தொழில் நுட்ப பூங்காக்கள் மூலம் நமது நாட்டில் இருந்து, உலக நாடுகளை தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. இந்த தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் வேலை செய்ய அதிக அளவு மாணவ, மாணவிகள் தேவைப்படுகிறார்கள். அதன் தேவையை கருத்தில் கொண்டு தான் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற கருத்தரங்குகள் பெரிய நகரங்களில் தான் நடத்தப்படும். இந்த வாய்ப்பு நெல்லைக்கு கிடைத்து உள்ளது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் வந்து இருக்கிறீர்கள்.
வேலை வாய்ப்பு
நீங்கள் மாணவர்களை தகவல் தொழில் நுட்பத்துறைக்கு தயார் செய்ய வேண்டும். எப்படி மாணவர்களை தயார் செய்வது, வருங்காலத்தில் வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று இங்கு விளக்கம் அளிப்பார்கள். அதன் நோக்கத்தை பேராசிரியர்கள் புரிந்து கொண்டு, அதன்படி மாணவர்களை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சி.சமயமூர்த்தி பேசினார்.