ஆந்திராவை தனியாக பிரித்து தெலுங்கான மாநிலம் உருவாக்கிட கோரி தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகரராவ் கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதையடுத்து மத்திய அரசு தெலுங்கானா மாநிலம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து.ஆனால் மத்திய அரசு தொடர்ந்து இந்த விவகாரத்தில் மவுனம் சாதித்து வந்தது. இருப்பினும் தெலுங்கானா கோரிக்கை இன்னும் ஆந்திராவில் அனலாய் பற்றி எரிந்து வருகிறது.
தெலுங்கானாவை வலியுறுத்தி பல கட்டப்போராட்டங்களை தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக்குழு உள்ளிட்ட அமைப்புகளும் ,உஸ்மானியா பல்கலை. மாணவர்களும் போராடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் வரும் 2014-ம் ஆண்டு ஆந்திர மாநில சட்டமன்றத்திற்கும், பாராளுமன்ற லோக்சபாவிற்கும் ஒன்றாக தேர்தல் நடக்க உள்ளது. எனவே காங். மீண்டும் தனது செல்வாக்கினை நிலை நிறுத்த தெலுங்கானா விவகாரத்தினை கையில் எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியை காங்.இணைக்க பேரம் பேசியது.இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் ,டில்லியில் மத்திய அமைச்சர் வயலார் ரவியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். எனினும் இதில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை என தெரிகிறது.
தனிதெலுங்கானாவே எனது லட்சியம்:
இந்நிலையில் சந்திரசேகரராவ் நிருபர்களிடம் கூறுகையில், வரும் 2014-ம் ஆண்டு நடக்க உள்ள பார்லிமென்ட் லோக்சபா மற்றும் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கமாட்டோம். வரப்போகும் தேர்தலையொட்டி வரும் நவம்பர் 29-ம் தேதி முதல் தெலுங்கானா பகுதி மாவட்டங்களில் ‘தீக்ஷா திவாஸ்’ என்ற விழிப்புணர்வு இயக்கத்தை துவக்க உள்ளேன். இந்த இயக்கம் தனித்தெலுங்கானா கோரிக்கை குறித்து பிரசாரம் மேற்கொள்ளும்.
ஏற்கனவே காங்.கிடம் தனித்தெலுங்கானா உருவாக்கிட எனது கோரிக்கையை கடிதமாக அளித்துள்ளேன். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டு, தெலுங்கானா விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து தனித்தெலுங்கானா மாநிலம் உருவாக்கினால் அடுத்த நிமிடமே, எனது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசுடன் இணைக்க தயாராக உள்ளேன். நிறைவேறவில்லை எனில் தெலுங்கான கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு சந்திரசேகரராவ் கூறினார்.