திட்டக்குடி பகுதியில் அரசால் வழங்கப்பட்டு வரும் ஆதார் அடையாள அட்டையில் பெயர் குளறுபடியால் மாற்று அட்டை பெறுவது எப்படி என தெரியாமல் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
திட்டக்குடி பகுதியில் சில மாதங்களுக்கு முன் ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கப்பட்டது. இதில் பொதுமக்களின் போட்டோ, கைரேகை, கண்விழி ஆகியவைகளை புகைப்படம் எடுத்தனர். இதற்கான அடையாள அட்டை கடந்த சில தினங்களாக தபால் மூலம் பொது மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த அட்டைகள் பலவற்றில், பயனாளியின் பெயர், தந்தை பெயர் மற்றும் முகவரி தவறுதலாக குறிப்பிட்டுள்ளதால், இந்த அடையாள அட்டையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
திட்டக்குடி அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்த அனந்தசயனம் மகன் தினேஷ், முதுகலை பொறியியல் பட்ட படிப்பு படித்து வரும் இவருக்கு தபாலில் வந்த ஆதார் அடையாள அட்டையில் தந்தை பெயர் ஒரு இடத்தில் சரியாகவும், மற்றொரு இடத்தில் தவறுதலாக ஜெயக்குமார் பாண்டுரங்கன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தவறுகளை திருத்தம் செய்ய, யாரை அணுக வேண்டும் எனத் தெரியாமல் குழப்பமடைந்துள்ள பொதுமக்கள், ஆதார் அடையாள அட்டையில் உள்ள தவறுகளை திருத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.